சட்டமன்றத்தில் உரையாற்றும் அதிகாரத்தை ஆளுநருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176 வழங்கியிருக்கிறது. அப்பிரிவில் “சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் மற்றும் ஒவ்வோர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் போது ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றுவார். சட்ட மேலவை (Legislative Council) இருக்கும் மாநிலங்களில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஆளுநர் உரையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கவில்லை. ஆகவே, ஆளுநரின் உரை என்பது மாநில அரசின் உரை தான். மாநில அரசு உரையைத் தயாரித்து ஆளுநருக்கு அனுப்பும். அதில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் ஆளுநர் பரிந்துரைக்கலாம். ஆனாலும் அது குறித்து மாநில அரசு எடுக்கும் முடிவு தான் இறுதியானது. இந்த மரபு தான் இத்தனை ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆளுநராக 18.09.2021 அன்று நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி 2022 ஆம் ஆண்டு எவ்வித சர்ச்சையுமின்றி மாநில அரசு தயாரித்து அனுப்பிய உரையைப் படித்தார். 2023 ஆம் ஆண்டு மாநில அரசு தயாரித்து அனுப்பிய உரையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விட்டுப் படித்தார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்குமாறு கோரிய போது அனுமதிக்கப்படாததால் ஆளுநர் உரையை வாசிக்க மறுத்தார். மேற்கூறிய மூன்று ஆண்டுகளிலும் “மாநில அரசால் தயாரித்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, சட்டப் பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்ட உரை, சட்டமன்ற அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
2026 ஆம் ஆண்டு உரையாற்ற மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஒரு சில நிமிடங்களில் “தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. ஆளுநரின் `மைக்’ அடிக்கடி துண்டிக்கப்பட்டது, உரையில் இடம்பெற்றுள்ள தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு, தான் கேட்ட ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து விட்டார்” என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் அவையை விட்டு வெளியேறிய உடனே இத்தகைய நீண்ட விளக்க அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்கள் மத்தியில் இருட்டடிப்புச் செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளார் என்பது உறுதியாகிறது.
உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரை சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம் பெறும் என்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இனி வரும் காலங்களில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை ரத்து செய்யும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176 இல் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஒத்த கருத்துடைய முதலமைச்சர்களிடம் பேச இருப்பதாகவும் பேரவையில் தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடக்கும் போது, ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கான ஆதாரங்கள் பற்றியும், அதில் விடுபட்டுள்ள அம்சங்கள் பற்றியும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். இறுதியில் முதலமைச்சர் அதற்குப் பதில் அளிப்பார். இதுவே சட்டமன்ற நடைமுறை. அதை விடுத்து தனது செயல்பாடுகள் மூலம் தானே `சூப்பர்’ எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நியாயமாக ஆளுநரை இதற்காகக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியோ பா.ஜ.கவின் ஊதுகுழலாக மாறி ஆளுநருக்கு ஒத்து ஊதியிருக்கிறார். ஆனால். முதலமைச்சராக பழனிச்சாமி இருந்தபோது அவரது அதிகாரங்களை, தானே கையில் எடுத்து அன்றைய ஆளுநர் பன்வாரிவால் புரோகித் மாநிலம் முழுக்க ஆய்வுக்குச் சென்ற போது, வலுவான கண்டனக் குரல் எழுப்பி அதைத் தடுத்து நிறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்க முடியும். ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்பினால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் வெற்றி பெற்று, உறுப்பினராக வந்து சட்டப்பேரவையில் பேசட்டும். ஆளுநர் என்ற போர்வையில் சட்டப்பேரவைக்குள் வந்து மாநில அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க முயல்வது அவரது அறமின்மையைக் காட்டுகிறது.
“மானமுள்ள ஆயிரம் பேரோடு போராடலாம். ஆனால் மானமற்ற ஒருவரோடு போராட முடியாது” என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்றுக்கேற்ப செயல்படும் ஆளுநர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் முறையாகத் தேர்ச்சி பெற்று, இந்திய காவல் பணி அதிகாரியாகப் பணி புரிந்தவரா என்ற அய்யம் மக்கள் மனதில் எழுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமைப் பணித் தேர்வின் பாடத்திட்டத்தில் இருக்கிறது. அதே போல் இந்தியக் காவல் பணி அதிகாரிக்கான பயிற்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கற்பிக்கப்படுகிறது. இருப்பினும் அதைச் சிறிதளவும் மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பதவிக்காக அவருக்கு அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் தகுதியை முற்றிலும் இழந்து விட்டார்.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் இருந்த போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் செய்தது போல் vதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முந்தைய சட்டமன்றக் கூட்டத்தொடரை முடிக்காமல் அது தொடர்வதாகக் காரணம் காட்டி ஆளுநரை உரையாற்ற அழைக்காமல் இருந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறு செய்வது ஒரு நாள் அதிரடிச் செய்தியாக இருக்குமே தவிர, ஆளுநர்களின் அத்துமீறலுக்கான நிரந்தரத் தீர்வாக இருக்காது.
அண்மையில் கேரள சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர் ஒன்றிய அரசுக்கு எதிரான பகுதியை வாசிக்க மறுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இது போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் ஆளுநர்களின் அராஜகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள “இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176 இல் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை” என்ற முன்னெடுப்பு தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.n





