பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நம்மை அறியாமல் நமது கண்கள் பார்த்தவுடனேயே நமக்குள் ஓர் அச்சத்தைப் பதற்றத்தைக் கொடுப்பது பாம்பைப் பார்ப்பது. நமது மரபணுக்குள்ளேயே பாம்பைப் பற்றிய அச்சம் இருக்கிறது. அதனால்தான் பாம்பைப் பார்த்தவுடனேயே நமது உடல் அச்ச உணர்வைக் காட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் எனது சொந்த ஊரைச்(சாப்டூர்) சார்ந்த ஊர்ப்பெரியவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக்கொடுக்க வந்திருந்தார்கள். அந்த மனுக்களில் முக்கியமான ஒன்று சாப்டூரில் இருக்கும் ஆரம்பச் சுகாதார மய்யத்தில் நிறைய பாம்புக்கடிக்கான மருந்துகள் வேண்டும் என்பது. எங்கள் ஊர் என்பது சதுரகிரி மலைக்கு அடிவாரத்தில் உள்ள ஊர். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரம். பாம்புகளுக்குப் பஞ்சமில்லாத பகுதி. எனது சிறுவயதில் பாம்புக்கடியால் இறந்த, பாதிக்கப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் அந்தப் பாம்புக் கடிப் பிரச்சனை என்பது பெரிய அளவில் இருக்கிறது.
பாம்புக்கடிக்கான நஞ்சு முறிப்பு மருந்து Anti-Venom என்னும் ஊசி மருந்தாகும். இதனைத் தயாரிப்பது என்பது ஓர் அறிவியல் செயல்முறை. குதிரைகள் அல்லது ஆடுகளைப் பயன்படுத்தித்தான் இந்தப் பாம்பு நஞ்சு முறிப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது.
முதலில் பாம்பு நஞ்சு முறிப்பு ஊசி மருந்து தயாரிப்பதற்கு, மாட்டிலிருந்து பாலைக் கறப்பதுபோலப் பாம்புகளிடமிருந்து நஞ்சைக் கறக்கவேண்டும். பாம்பின் நஞ்சு என்பது பாம்பின் தலைக்கு அருகில் இருக்கும் நஞ்சுச்சுரப்பிகளில் இருக்கிறது. பாம்பு கோபத்தோடு சீறிக் கடிக்கும்போது, அதன் நஞ்சுச்சுரப்பிகளில் சுரக்கும் நஞ்சானது அதன் முன்பற்களில் உள்ள துளை வழியாகக் கடிப்பவரின் உடலுக்குள் நுழைகிறது. எனவேதான் பாம்பு கடித்ததைப் பார்க்கும்போது, பாம்பின் பல் பதிந்து இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே, நஞ்சுள்ள பாம்பைப் பிடித்து அதன் பற்களைக் கண்ணாடிக் குவளையின் விளிம்பில் அழுத்தும்போது, அதன் சுரப்பிக்குள் இருக்கும் நஞ்சு குடுவையில் சேகரிக்கப்படுகிறது. இப்படித்தான் முதலில் சேகரிக்கப்படுகிறது.
இப்படிச் சேகரிக்கப்பட்ட நஞ்சு மிகக்குறைந்த அளவில் குதிரை, ஆடு அல்லது கழுதை ஆகியவற்றின் உடல்களுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. பெரும்பாலும் குதிரைகள்தான் பயன்படுத்துப்படுகின்றன.
குதிரைக்குள் செலுத்தப்பட்ட விஷம் சென்றவுடன், குதிரைக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், இந்த நஞ்சினை எதிர்த்துப் போராட Anti Biotics உருவாக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சின் அளவு அதிகரிக்கப்பட்டு, அதிகரிக்கப்பட்டுப் பெருமளவு Anti Biotics குதிரையின் உடம்பில் உருவாகும்படி செய்யப்படுகிறது.
குதிரையின் உடம்பில் அதிக அளவு உயிர்எதிரிகள் உருவானபிறகு, குதிரையிலிருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது. இப்படிக் குதிரைகள் கொடுக்கும் இரத்த தான இரத்தத்திலிருந்து, சிவப்பணுக்களை நீக்கிவிட்டு, Anti Biotics நிறைந்த பிளாஸ்மா (Plasma) மட்டும் தனித்துப் பிரித்து எடுக்கப்படுகிறது.
தனித்து எடுக்கப்பட்ட குருதி நீர்மம் (பிளாஸ்மா) ஆய்வகத்தில் மீண்டும் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு, வேண்டாத புரதங்கள் நீக்கப்பட்டு, தூய நஞ்சுமுறிப்பு மருந்தாக மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட பிளாஸ்மா திரவ நிலையிலோ, தூள் (Powder) நிலையிலோ பாட்டில்களில் அடைக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பாம்புக்கடி நஞ்சு முறிப்பான் (Anti Snake Venom ASV) ஆகும்.
இதில் இரண்டுவகையான பாம்புக்கடி நஞ்சு முறிப்பான்கள் இருக்கின்றன. ஒன்று, குறிப்பிட்ட பாம்புக்கடிக்கு குறிப்பிட்ட பாம்புக்கடி மருந்து மட்டுமே பயன்படும். இது ஒற்றை மருந்து எனப்படுகிறது. கூட்டு மருந்து என்று சொல்லக்கூடிய பாம்புக்கடி மருந்து 4 வகைப் பாம்புகளுக்கு (நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்பு) பயன்படக்கூடியதாக உள்ளது.
பாம்பைப் பிடித்து அதன் நஞ்சைக் கக்கவைத்து, பின்பு விலங்குகளுக்குள் செலுத்தி, வளர்த்து, பின்பு பிரித்துச் சுத்தம் செய்து… இதில் எவ்வளவு செயல்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பாருங்கள்.
அரசைப் பொறுத்த அளவில், பாம்புக்கடி மருந்துக்குக் குளிர்சாதன வசதி வேண்டும். அதை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைத்திருந்தால் மட்டுமே அது பயனளிக்கும். பாம்புக்கடி என்பது உடனே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. சரியாக வேலை செய்யாத மருந்தைச் செலுத்தினால், பாதிக்கப்பட்டவரின் உயிருக்கே ஆபத்தாக முடியும். பாம்புக்கடி மருந்து அவ்விடங்களில் இல்லை என்றால்கூட, வேறு ஊர்களுக்குக் கூட்டிச்சென்று வைத்தியம் பார்ப்பார்கள். எனவே, பாம்புக்கடி மருந்துகளைக் கிராமங்களில் வைத்துப் பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலில் அந்த நாவல் ஆசிரியர் தங்கர் பச்சான், காட்டில் மகனுக்குப் பாம்பு கடித்துவிட, அவனைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் தந்தையைப் பார்த்ததும், நமது கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு எழுதி இருப்பார். இன்றைக்கும் பல கிராமங்களில் அதுதான் நிலைமை.
நஞ்சுள்ள பாம்பு கடித்தவுடன், அது நமது நரம்பு மண்டலத்திற்குள் ஊடுருவுகிறது. எனவேதான், அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. அல்லது பாம்பு கடித்துச் சாகவில்லை என்றாலும்கூட, நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பால், பாம்பு கடித்தவர் ஊனமுற்ற ஒரு நிலையை அடைகின்றார்.
இதற்கான ஒரு தீர்வு என்பது நரம்பு மண்டலத்திற்குள் ஊடுருவும் பாம்பின் நச்சுத்தன்மை அல்லது நரம்புகளை உடனடியாகப் பாதிக்கும் தன்மை நீக்கப்பட்டால், பாம்பு கடித்தவருக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவரைக் காப்பாற்றலாம்.
இப்படிப்பட்ட ஒரு தன்மையை அறிவியல் உலகம் சென்ற ஆண்டு கண்டுபிடித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) என்னும் அறிவியல் முறை மூலமாக ஒரு மாபெரும் மாற்றத்திற்கான விதை தூவப்பட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு உலகத்தையே மாற்றிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கும் தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.” மூலக்கூறு மட்டத்தில் நஞ்சை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கைப் புரதங்களை (Synthetic Proteins) செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியுள்ளனர்.
இது வெறும் முன்னேற்றம் மட்டுமல்ல; பாம்புக்கடி சிகிச்சையில் இது ஒரு முற்றிலும் புதிய வழிமுறை. விலங்குகளிடமிருந்து எடுக்கப்படும் நோய் எதிர்ப்புப் புரதங்களுக்குப் பதிலாக, விஞ்ஞானிகள் இப்போது மிக விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் பிரத்யேக மூலக்கூறுகளை வடிவமைக்கிறார்கள்” என்று டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில் நுட்பவியல் துறை இணைப்பேராசிரியர் திமோதி ஜென்கின்ஸ் (Timothy Jenkins) விளக்குகிறார்.
திமோதி ஜென்கின்ஸ் குழுவினரை உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.” கொரனா பெருந்தொற்று காலத்தில் உயிரியல் சிக்கல்களுக்கு இயந்திர வழி கற்றல் (Machine Language) பயன்படுத்தப்பட்ட விதம் இந்தப் புதிய முயற்சிக்கு ஊக்கமளித்தது.வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் பேக்கர் ஆய்வகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் திமோதி ஜென்கின்ஸ் குழுவினருக்கு ஒரு புதிய பாதையைக் காட்டின” என்று குறிப்பிடுகின்றனர்.
“தற்போது இந்தச் செயற்கைப் புரதங்களை ஈஸ்ட் (Yeast) அல்லது பாக்டீரியாக்களைப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளில் எளிதாகத் தயாரிக்க முடியும். இதற்குக் குதிரைகளோ மற்ற விலங்குகளோ தேவையில்லை. மேலும், இவை அதிக வெப்ப நிலையிலும் நிலைப்புத் தன்மையுடன் இருப்பதால், குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே தொலைதூரக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லமுடியும்
இந்தச் செயற்கைப் புரதங்கள் ஆய்வகத்தில் மட்டுமல்லாமல், உயிருள்ள வற்றிலும் சோதிக்கப்பட்டன. எலிகளுக்கு உயிருக்கு ஆபத்தான அளவு நஞ்சைச் செலுத்தியபிறகு, இந்தச் செயற்கைப் புரத சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அனைத்து எலிகளும் உயிர் பிழைத்தன. இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது“ என்று சயின்ஸ் நியூஸ் என்னும் இணையதளம் பல்வேறு செய்திகளை வெளியிட்டிருக்கிறது. https://sciencenews.dk/en/scientists-develop-ai-designed-antivenom.
“இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகள் முதலியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடு நிலைமை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவையாகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன” என்கிறார் தந்தை பெரியார் – இனிவரும் உலகம் என்னும் புத்தகத்தில்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. பாம்பு கடித்துச் சாவது என்பது இன்றைக்கும் கூட இந்தியக் கிராமங்களில் மிகவும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. நகரங்களில் இருந்து தொலைதூரக் கிராமங்களில் இருப்பவர்களுக்கு இன்னும் உயிரைச் சட்டெனப் பறிக்கும் ஒரு நிகழ்வாகப் பாம்புக்கடி என்பது இருக்கிறது.
இந்த நிலைமை மாறும் என்ற பெரும் நம்பிக்கையை அறிவியல் அளித்திருக்கிறது. நீரிழிவு (Diabetes) உள்ளவர்கள் கையில் ஓர் இன்சுலின் ஊசி வைத்திருப்பது போல, பாம்பு கடித்தால் உடனே ஓர் ஊசியைப் போட்டால், பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இது அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று சேருகிற வாய்ப்புக் கிடைக்கும்போது படை மட்டுமல்ல, மனிதர்களும் பாம்பைப் பார்த்து பயந்து நடுங்காமல் வாழும் நிலைமையை, வசதியை ஏற்படுத்தும் அளவிற்கு இன்றைய மருத்துவ அறிவியல் முன்னேறி இருக்கிறது. மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.n





