அண்மையில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில், ஏராளமான பதிப்பகங்களில், ஒரே ஒரு தலைப்பைத் தேடி வந்து இளைஞர்கள் அதிகம் வாங்கிய நூல் “தீ பரவட்டும்!”.
காரணம், “பராசக்தி”. கடந்த 20 நாட்களில் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இளைஞர்கள் உச்சரித்தது தான்!
1952ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திரைக்கதை வசனத்தில் உருவாகி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து, உலகில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தப் போகிறார்கள் என்றதும் அதிர்ச்சியடைந்தவர்களும் கவலையுற்றவர்களும் ஏராளம்.
புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வைத்துக் கொள்வதற்கு யாருக்கும் அனுமதி உண்டு என்கிறது – தமிழ்நாடு திரைப்பட வட்டாரம். அப்படி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கின்றன; பழைய திரைப்படங்களின் தடங்களை அளித்திருக்கின்றன. ஆனால், எப்போதும் அழிக்க முடியாத, காலத்தை வென்ற தடத்தைப் பதித்து இருப்பது கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படம்.
அத்திரைப்படத்தின் பெயரையே மீண்டும் ஒரு முறை சூட்டி இருக்கிற திரைப்படம் அந்த உயரத்தை எட்ட முடியவில்லை என்றாலும், அதன் தளத்திலிருந்து விலகாமல் பயணித்திருக்கிறது என்பது, பெயர்க் கலக்கத்தில் இருந்தவர்களை ஆறுதல் அடையச் செய்தது மட்டுமல்லாமல், அதன் கதைக்கரு இன்றைய இளைஞர்களைச் சென்றடைந்தது என்பதில் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தது. பெயரைக் காத்த பேத்தியாக ‘பராசக்தி’ பரிணமித்திருக்கிறது.
‘தீ பரவட்டும்’ என்ற அண்ணாவின் புத்தகத்துக்கும், இந்தத் திரைப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதைக்களத்திற்கும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதைக் களத்திற்கும் யாதொரு தொடர்ச்சியும் இல்லை. ஆனால், இவற்றை எல்லாம் பிணைப்பது – திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் உருவாக்கிய மொழி, இன, பண்பாட்டுப் பகுத்தறிவு அரசியல்.

தமிழ்நாட்டில் இதுவரை பேசப்படாமல் இருந்த இந்தப் பண்பாட்டு அரசியலின் வரலாற்றைத் துணிச்சலோடு இந்தக் கால இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ரசிக்கும் வகையில் திரைப்படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு 1938ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களாக நடைபெற்ற வரலாறு உண்டு. அவற்றில், 1960, 1965 காலகட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களைத் தனது கதைக் களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
1950களின் மத்தியிலும், இறுதியிலும் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக, ஆங்கிலம் இந்தியாவின் அலுவல் மொழியாகத் தொடரும் என்று உறுதி வழங்கினார் பண்டித ஜவகர்லால் நேரு. அந்த உறுதிமொழிக்குப் பங்கம் ஏற்படுமோ என்ற அச்சம் அவர் மறைந்த பிறகு ஏற்பட்டது. 1965ஆம் ஆண்டு மாணவர் போராட்டமாக வெடித்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் வன்முறை, கலவரம், உயிர்ப் பலிகள், உயிர்க் கொடைகள், துப்பாக்கிச் சூடுகள் எல்லாம் நிகழ்ந்தன. அதை மோசமாகக் கையாண்டது பக்தவத்சலம் அரசு. போராட்டத்தின் விளைச்சலின் காரணமாகவும் தூக்கியெறியப் பட்டது அரசாங்கம். இன்றும், என்றும் ஆறாத வடுக்களையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள ஹிந்தி எதிர்ப்புப் போரை மீண்டும் ஒரு முறை கண்ணுக்கும், கருத்துக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது பராசக்தி.
எழுதப் படிக்கத் தெரிந்தவரைக் கூட ஹிந்தித் திணிப்பு தற்குறியாக்கிவிட்டது என்று வரும் வசனமும், ஹிந்தித் திணிப்பு அரங்கேறியிருந்தால் இன்று கிடைக்கும் வேலைவாய்ப்புகளுக்கு எப்போதோ சாவு மணி அடிக்கப்பட்டிருக்கும் என்று இன்றைய இளைஞர்களுக்கும் புரியும் வண்ணம் வைக்கப்பட்டுள்ள மனதைத் தொடும் காட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் நியாயத்தைச் சொல்லுகின்றன.
உண்மை நிகழ்வுகளின் பதிவுகளோடு, திரைக்கதைக்கும், இன்றைய சூழலுக்கும் ஏற்ற கற்பனையையும் கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன. பாடல்கள் பரபரக்க வைக்கின்றன. காட்சிகளின் தீவிரம் எவர் ஒருவரின் கண்களையும் அகலாமல் கட்டிப் போடுகிறது. போராட்டக் காலத்தில் வாழ்ந்த தாத்தா – பாட்டியும் படம் பார்த்துக் கலங்குகிறார்கள். இப்படியொரு வரலாற்றை இதுவரை ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்கும் பேரப் பிள்ளைகளும் கலங்குகிறார்கள்.
இன்றைய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் நீட் திணிப்பு, ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, தேசியக் கல்விக் கொள்கைத் திணிப்பு – அவற்றுக்கெதிராக உறுதியாக நிற்கும் தமிழ்நாட்டின் அரசியல் என்ன என்பதை ஜென்ஸீ தலைமுறைக்கு முழுமையாகப் புரிய வைக்காவிட்டாலும், அதன் அடித்தளத்தைத் தொட்டுக் காட்டியிருக்கிறது பராசக்தி.
திரைப்படத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவராகச் செழியன் பாத்திரமேற்று நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரனை நினைவுகூரும் சின்னத்துரை பாத்திரமேற்றிருக்கும் அதர்வா, போராட்டத்தை ரத்தக்களரியாக்கும் ஆதிக்கவாதிகளின் அதிகார முகமாக எதிர்நிலைக் கதாபாத்திரமான திருநாடனாக நடித்திருக்கும் ரவி மோகன், பெண்கள் போராட்டக் களங்களில் நின்றதைப் பறைசாற்றும் ரத்னமாலா பாத்திரமேற்ற சிறீ லீலா, அண்ணாவாகவே காட்சியளிக்கும் சேத்தன், பக்தவத்சலமாகத் தோன்றிய பிரகாஷ் பெலவாடி என்று பட்டியல் போட்ட பிறகு தான் அவர்களை நடிகர்களாகப் பார்க்கலாம் – படத்திற்குள் அவர்கள் மிகப் பொருத்தமாகப் பொருந்திப் போன பாத்திரங்கள்!
எல்லா மொழியினருக்கும் இந்தப் பிரச்சினை உண்டு – அன்றும், இன்றும் என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு மாநில மாணவர்களுக்குள்ளும் இருந்த ‘புறநானூற்றுப் படை’, அதன் தமிழி வடிவ செய்திப் பரிமாற்றம், ரேடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டு (ஏ வாட்டன் மேரே வாட்டன் படத்தைக் கொஞ்சம் நினைவூட்டவே செய்கிறது) படத்தின் நிறைவுக்கு இட்டுச் செல்லும் காட்சிகள், பரபரக்கும் ரயில் சண்டை என கற்பனைக் காட்சிகள் திரைக்கதைக்கு வேகம் கூட்டுகின்றன.
ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தனி ஒருவரின் பழிவாங்கல் நடவடிக்கையாக மட்டும் சுருக்கிவிட முடியாது. சில இடங்களில் அப்படியொரு உணர்வு தோன்றினாலும், அதையும் கடந்து படம் எல்லோருக்கும் கடத்துவது ஹிந்தித் திணிப்பின் கோர முகத்தையும், அதற்குத் தமிழர்கள் கொடுத்த கடுமையான விலையையும், பெற்ற வெற்றியையும் தான்!
எல்லா படங்களுக்கும் ஆயிரம் குறை சொல்லலாம். அதிலும் வரலாற்றுப் படம் என்றால், குறை சொல்லலும், குற்றம் காணலும் இன்னும் எளிமை. அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வரவேற்க வேண்டிய படம் பராசக்தி. இன்றைய ஆட்சியாளர்களின் தணிக்கைக் குழுவின் (Censor Board) 43 வெட்டுகளையும் கடந்து இத்திரைப்படம் வெளிவந்திருப்பதும், தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதும் இப்படத்தின் வெற்றிகளே!
படம் பார்த்து முடித்து வெளியில் வரும்போது பலரும், பல ஊர்களிலும் வேறுபாடில்லாமல் கவனித்த ஒன்று – குழந்தைகள் பெற்றோரை நோக்கி, இன்றைய மொழித் திணிப்பு குறித்து எழுப்பிய கேள்விகள். எதுவும் சாமானியத்தில் கிடைத்துவிடவில்லை – கிடைத்துவிடாது என்பதை சமூகத் தளத்தில் இப்படம் குழந்தைகளுக்குச் சொல்லும்!
திரைப்படத்தைப் பாராட்டும் அதே காலகட்டத்தில், இத்திரைப்படத்தை மக்கள் மத்தியில் போய் விடக் கூடாது என்று துடித்த சில குறு மதியாளர்களையும், குல்லூகப் பட்டரின் பரம்பரையினரையும் நாம் பதிவு செய்தே ஆக வேண்டும். அன்றைய காங்கிரசின் நிலைப்பாடு வேறு; இன்றைய காங்கிரசின் நிலைப்பாடு வேறு பக்தவத்சலத்தின் தவறு காங்கிரசால் இன்றும் நியாயப்படுத்த முடியாதது. ‘வைடு’க்குப் போன பந்தை அப்படியே விட்டுவிடாமல், எட்டிப் போய் அடிக்க முயன்று ‘அவுட்’டானார்கள் அதில் இன்று சிலர்! ஆண்டுதோறும் எதற்காக மொழிப் போர்த் தியாகிகள் நாள் கூட்டம் நடத்துகிறோம் என்பதையே மறந்து படத்தைப் பற்றி எதிர்க்கருத்து பரப்பினார்கள் அ.தி.மு.க.வினர். பதறிப் போய் நின்றது பா.ஜ.க! தங்கள் விருப்ப நடிகரின் படக் குழு, தணிக்கைக் குழுவுக்கு எதிராக எடுத்த தவறான நிலைப்பாடுகள் காரணமாக, விளம்பரத்துக்காக வழக்கைப் பயன்படுத்த நினைத்தவர்களுக்கு அதுவே வினையாகிப் போன விரக்தியில் பராசக்தியை விழுந்து பிராண்டிக் கொண்டிருந்தார்கள் சில தற்குறிகள்! இதைத் தி.மு.க. ஆதரவுப் படம் என்றும், எடுத்தவர் தெலுங்கர் என்றும் தாங்கள் யாருக்காக ஆடுகிறோம் என்பதையே மறந்து கூவிக் கொண்டிருந்தனர் சுயநலம் கொண்ட ஸோம்பிகள்! இவர்கள் அனைவரையும் புரிந்து கொள்ளவும், புரியாதவர்களுக்கு அடையாளம் காட்டவும் உதவியது என்பதையும் பராசக்தியின் வெற்றிகளுள் ஒன்றாகக் கருதலாம்.
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? அது பேசாது,”
கலைஞரின் வசனத்தில் கை வைத்துக் குளோசப்பில் சிவாஜி கணேசன் பேசிய ‘கல்’லின் ஒலியை நீக்கியது அன்றைய தணிக்கைத் துறை. திரையரங்கமே அந்த இடத்தில் ‘கல்’ என்று கத்தியது.
“தீ பரவட்டும்!’ என்பதை அனுமதிக்க முடியாது; “நீதி பரவட்டும்!” என்று இருக்கலாம்!” என்றதாம் இன்றைய தணிக்கைத் துறை. நீதி பரவட்டும் என்பதற்காகத் தானே அன்று அணைக்க முடியாத அந்தத் ’தீ பரவியது.’ அதை இன்றும் பரவவிட்டிருக்கிறது இன்றைய பராசக்தி. எப்படி என்பதை இப்போது மீண்டும் முதல் பத்தியைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
இது என்றும் அணைக்க முடியாத இன உணர்வுத் தீ!n





