Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முதலாம் சுயமரியாதை மாநாட்டின் எண்பதாம் ஆண்டு தொடக்க விழாவில் கலைஞர் உரை- கி.வீரமணி

தஞ்சையில் 11.2.2008 அன்று காலை சி.பிரபாகரன் – சத்தியா ஆகியோர் மணவிழாவை நடத்தி வைத்தோம். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் வே. துரைமாணிக்கம் அவர்கள் சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து அவர்கள் உடனடியாக தஞ்சை வினோதகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியைக் கேட்டவுடன், தஞ்சை வினோதகன் மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துரை மாணிக்கம் உடல் நிலை குறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம்.. முன்னாள் எம்.எல்.ஏ மன்னை அம்பிகாபதி, ஆர். திருஞானம் ஆகியோர் உடனிருந்தனர். எம்முடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங், கு.வடுகநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.

சேலத்தில் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணி கழகத்தின் சார்பில், அமைந்துள்ள டாக்டர் மரகதம் – மாரியப்பன் மருத்துவமனையின் நிறுவனரும், சிறந்த சுயமரியாதை உணர்வாளரும்,கொடை வள்ளலுமான டாக்டர் திருமதி மரகதம் அவர்கள் சேலத்தில் 13.2.2008 அன்று இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு நாம் மிகுந்த வேதனையும் துன்பமும் துயரமும் அடைந்தோம்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, மருத்துவராகி, சிறப்பான வகையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
அவரது வாழ்விணையரும் பெரு மதிப்பிற்குரியவருமான அய்யா
திரு.மாரியப்பன் அவர்கள் மிகவும் தெளிவுள்ள சுயமரியாதைக்காரர்; இருவரும் பெரியார் கொள்கைப் பற்றாளர்கள், நமது இயக்கத்திற்குப் புரவலர்களாகத் திகழ்ந்தவர்கள்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற பிளஸ் டூ தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண் பெறவேண்டும் என்ற விதிமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தலைவர்கள்

அவ்விருவரும் உருவாக்கிய மருத்துவமனையைப் பொதுப் பணிக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற தொண்டறச் சிந்தனையோடு, நமது பெரியார் – மணியம்மை கல்வி அறக்கட்டளை கல்வி மருத்துவப் பணிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்திடும் வண்ணம் அதற்கே அளித்திட்ட, விளம்பரம் விரும்பாத லட்சியவாதிகளாக அவ்வாழ்விணையர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் விரும்பவில்லை என்றாலும், தந்தை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் கணினி மய்யத்திற்கு அவ்விருவர் பெயர்தான் சூட்டப்பட்டது!

சேலத்தில் நகராட்சி உறுப்பினராக இருந்த சுயமரியாதை வீரர் மானமிகு அய்யா மாரியப்பன் அவர்கள் தள்ளாத வயதிலும், அந்த மருத்துவமனையைக் கவனித்து வந்ததுடன், ‘விடுதலை’ வாசகர்களாக அவர்கள் தொடர்ந்து. கழகப் பணிகளுக்கு ஊக்கமூட்டியவர். அதற்கு முந்தைய மாதம் 4ஆம் தேதி அன்று (சேலத்தில்) மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நம்பிக்கையுடன் திரும்பினோம்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர், பொத்தனூர் க.சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேலம் பழனி. புள்ளையண்ணன் ஆகியோரை தலைமைக் கழகத்தின் சார்பில் அனுப்பினோம்.

மறைந்த மரகதம் அம்மையார் அவர்களது உடல் சேலம் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது. மானமிகு மாரியப்பன் அவர்களிடம் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினோம்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று தொழில் பட்டப்படிப்பில் சேர்ந்து கல்வி உதவித்தொகை பெற்றிட 60 சதவிகித மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு நீக்கக் கோரியும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து நிறைவேற்றிட கோரியும், திராவிடர் கழகத்தின் சார்பில் 16.2.2008 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது.

சென்னை – அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தோம். பல்வேறு கட்சித் தோழர்கள் பங்கேற்றனர். ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற 60% மதிப்பெண் நிர்ணயம் எப்படியான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை விளக்கினோம். முன்பே இது குறித்து அழுத்தமான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இதில் முதலமைச்சர் கலைஞர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். நம் வேண்டுகோளை ஏற்று கலைஞரும், ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தோம். இதற்குக் கை மேல் பலனாக 22.2.2008 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 60% விழுக்காடு நிபந்தனையை வலியுறுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு நன்றி தெரிவித்து கருத்துத் தெரிவித்த நாம், மத்திய அமைச்சரவையில் சமூகநீதிக்கு எதிரான ஆதிக்கச் சக்திகள் எப்படியெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நுழைந்து விடுகிறார்கள் என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது என்று குறிப்பிட்டோம்.

திருச்சி மு.சேகர் இல்லத் திருமணத்தில் ஆசிரியர்

திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் திருவெறும்பூர் மு.சேகர் – ஜானகி ஆகியோரின் மகன் சே.குலோத்துங்கன் திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை சண்முகவேல் – விஜயலட்சுமி ஆகியோரின் மகள் கீர்த்திகா பிரியதர்ஷினி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 17.2.2008 அன்று திருவெறும்பூர் பாரத் திருமண மண்டபத்தில் எமது தலைமையில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து சுயமரியாதைத் திருமண முறையின் தத்துவத்தை
யும், வரலாற்றையும் விளக்கி உரையாற்றினோம். திருமணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை வேந்தர் வீகேயென். கண்ணப்பன் துணை மேயர் மு.அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.சேகரன், அன்பில் பெரியசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டில் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் சுயமரியாதை மாநாட்டின் எண்பதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல அரிய தீர்மானங்களுக்குச் சட்ட வடிவம் தந்த முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழாக்கள் 18.2.2008 அன்று செங்கல்பட்டு நகரில் எழுச்சியோடு நடைபெற்றன.

சுயமரியாதை மாநாட்டு கல்வெட்டை டாக்டர் கலைஞர் திறந்து வைக்கிறார்

திராவிட இயக்கத்தின் வெற்றி திருவிழா என்று போற்றத்தக்க அளவில் எழுச்சியோடு நடைபெற்றன. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மாநாடு தென்னிந்தியாவின் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் தாக்கத்தை – மறுமலர்ச்சியை உருவாக்கியது. அன்றைய சமூகச் சூழலில் அது ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பாசறை என்றே கூறலாம்.

அம்மாநாடு நடைபெற்ற 80 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், மாநாட்டின் தீர்மானங்களான பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, பெண்களுக்கான வேலை வாய்ப்பு உரிமை, ஜாதிப் பட்டம் நீக்குதல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில், அவற்றைச் சட்ட வடிவமாக்க பெரும் முயற்சி எடுத்தமைக்காகவும், தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித் தமைக்கும், தமிழ்நாடு முழுவதும் 240 சமத்துவ
புரங்களில் தந்தை பெரியார் சிலைகளை நிறுவுவதற்காகவும் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழாவாக இந்நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டு மலரை கலைஞர் வெளியிட்டார்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்திருந்த கே.ஆர்.சி. திடலில் தமிழ்நாடு வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இது நடைபெற்றது. இம் மாநாட்டை ஒட்டி சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் இருந்து 25க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் இரண்டு மணி நேரம் பயணம் செய்து செங்கல்பட்டில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர். ‘அறிவு வழியில் அமைதிப் புரட்சி’ என்னும் தலைப்பில் பெரியார் கல்வி நிறுவனங்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாநாட்டின் இருபுறமும் ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டு கலைஞர் ஆட்சியின் மணிமகுடச் சாதனைகளைப் பட்டியலிட்டு, கலைஞரையும் மாநாட்டிற்கு வந்தோரையும் மகிழச் செய்த ஆடல் பாடல் உரையாடல் என்று பலவண்ண கலை அம்சமாக அவை அமைந்திருந்தன. கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பாராட்டு விழா தொடங்கிய நிலையில் கலைஞர் அவர்களுக்கு நம் பாராட்டைத் தெரிவித்தோம். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராய் இருந்த
தா.மோ.அன்பரசன், கழகப் பொதுச்செயலாளர்கள்
கவிஞர் கலி.பூங்குன்றன், சுஅறிவுக்கரசு ஆகியோர் பாராட்டுரையாற்றினர்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டின் நினைவுக் கல்வெட்டை
முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் மாநாடு நடைபெற்ற இடத்தின் ஒரு பகுதியை,
செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்
அ.கோ.கோபால்சாமி அவர்கள் வாங்கி, பெரியார்
படிப்பகம் அமைக்க முடிவு செய்திருந்த நிலையில்
அப்படிப்பகத்துக்கான கல்வெட்டையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இவ்விழா மேடையில் செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் சதீஷ் பாபு – ரேவதி ஆகியோர் மணவிழா நடைபெற்றது. மணவிழாவை முதலமைச்சர் கலைஞர் நடத்தி வைத்தார். அப்பொழுது பாராட்டு உரை வழங்கிய நாம் மணமகனுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், அம் மேடையிலேயே அன்புச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.

எழுச்சிமிக்க உரையை முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். இரண்டு வரலாற்று ஆவணங்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன. ஒன்று, 1929ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டு திராவிடன் செய்தித் தொகுப்பு, மற்றொன்று, அம் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் புதிய பதிப்பு. இந்த நூல்களை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்த கலைஞர் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘‘நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ள – தந்தை பெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள – அண்ணாவைப்பற்றி தெரிந்துகொள்ள – எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்பு இருந்தது; பின்னாளில் எப்படி அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.

இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு, 1929 – ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன் – அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாருடைய வழித்தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).

இதிலே உண்மைகள், வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்துகொண்டவர்கள், அவர்களைப்பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனாருடைய உருவத்தைப் பார்க்கிறேன்; வி.வி.ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன். அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும் “வேலைக்காரி” படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதாசல முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார், ஒரு முக்கியப் பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்ல வேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரைப் பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலசுத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணி யாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்
லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும். என்று எங்களுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக்கிறார்கள், மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்கூட, இன்றுமுதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை
எல்லாம் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’ என்று குறிப்பிட்டார்.

(நினைவுகள் நீளும்)