Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீர சிவாஜியின் கோழை வரலாறு! – மருத்துவர் இரா.கவுதமன்

பார்ப்பனர்கள் சிவாஜியிடம் பெற்ற பெரும் பொருளும் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. (“பேராசைக்காரனடா பார்ப்பான்”) கற்றறிந்த இரு பார்ப்பனர்கள், “சிவாஜி படையெடுப்புகளின் போது பல நகரங்களைக் கொளுத்தியுள்ளான். அந்நெருப்பில் பார்ப்பனர்களும், பசுக்களும், பெண்களும், குழந்தைகளும் இறந்து விட்டனர். இதனால் பெரும்பாவம் அவனைச் சூழ்ந்துள்ளது. ஒரு நல்ல விலை கொடுத்து அவனை அப்பாவங்களிலிருந்து விடுவித்து விடலாம்” என்றனர். சிவாஜியும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களைத் தேடி அழைத்து வரச் செய்து அவர்களுக்கு பெரும் பொருள்களை வழங்கினான். ஆனால் பார்ப்பனர்கள் நோக்கமே வேறு. சூரத் நகரைச் சூறையாடிய போது இறந்து போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு தேவையில்லை. அதற்கு பதில் கொங்கணத்தையும், தேஷ் பகுதிகளையும் சேர்ந்த பார்ப்பனர்களின் பைகளைப் பணத்தால் நிரப்பி விட்டால் போதும் எனக் கூற, சிவாஜியும் அவ்வாறே செய்தான். (ஆதாரம்: சிவாஜி முடி சூட்டலும், பார்ப்பனீயமும் பேராசியர்.காளிமுத்து)

சூத்திரன் என்ற கேவலமான வருணத்தைச் சேர்ந்த சிவாஜியை சத்ரியனாக மாற்ற பார்ப்பனர்கள் பெற்ற செல்வங்கள் கணக்கிலடங்காதவை. முடிசூட்டு விழா என்ற பெயரில் இந்தியா முழுவதிலும் இருந்த பார்ப்பனர்கள் பலனடைந்தனர். அந்த நிகழ்ச்சி தடையின்றி நடக்க சிவாஜி பார்ப்பனர்கள் கேட்டதெல்லாம் செய்தான். முடிசூட்டு விழாவிற்கு ஆன மொத்தச் செலவு ரூ.100 கோடி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆப்ரகாம் லீ பீபர் எனும் டச்சு வணிகர் முடிசூட்டு விழா முடிந்த நான்கு மாதங்களுக்குப் பின் எழுதிய குறிப்பில், நன்கொடையாக வழங்கிய பொருள்களும், பணத்தின் மதிப்பும் சேர்ந்து 150000 பகோடாக்கள் (ஏறக்குறைய 50 கோடி!) இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். முடிசூட்டு விழா சிவாஜியின் கருவூலம் முழுவதையும் காலியாக்கி விட்டது. தன் அரசு நிருவாகிகளுக்கும் படை வீரர்களுக்கும் ஊதியம் கொடுக்கக்கூட பணம் இல்லாத நிலை. பதவி ஏற்ற உடன் பணப்பஞ்சமும் ஏற்பட்டதால், மன்னன் ஆனாலும் மீண்டும் கொள்ளையடிக்கப் புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு சிவாஜி ஆளானான்.

சிவாஜி முடி சூட்டிக் கொண்ட ஆறாம் ஆண்டிலேயே (1680) கடுமையான வயிற்றுக் கடுப்பு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தான். “குவார்த்தா” என்பவர் அவனது கடைசி நாள்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒரு பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டே தான் இறக்க வேண்டும் தன் சவத்தைப் பாரசீகப் பன்னீரால் கழுவ வேண்டும், அதில் சந்தனம் பூசி நெய்யில் ஊறிய வாசனைக் கட்டைகளைக் கொண்டு எரிப்பதுடன், அவன் மனைவிகள் உடன் கட்டை ஏறுவதைத் தடுக்கக் கூடாது என்றும், உடல் எரிந்ததும் சாம்பலைக் கங்கையில் கரைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டான் என்பதே அக்குறிப்பு. தக்காணத்தின் அஞ்சாத சிங்கத்தை, தன் வாள் முனையால், தான் நினைத்தவற்றையெல்லாம் சாதித்த அந்த மாவீரனை, மதத்தையும், ஜாதியையும் வைத்து இழிவுபடுத்தியது மட்டுமன்றி, அவனை ஒரு களிமண் பொம்மையாக்கி பார்ப்பனர்கள் விரும்பியவாறெல்லாம் விளையாடிய சோக வரலாறும், மகுடம் ஏற்கும்போது அடித்த கொள்ளைகளையும், அவர்கள் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, அடிமையாக வாழ்ந்ததால் அம்மாவீரனை இன்றும் “சங்கி”கள் (பார்ப்பனர்கள்) கொண்டாடுகிறார்கள். (ஆதாரம்: சிவாஜி முடி சூட்டலும், பார்ப்பனீயமும், தமிழில், பேராசிரியர் காளிமுத்து)

பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்ட மாவீரன் சிவாஜி 6 ஆண்டுகள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தான். அவன் மறைவிற்கு பின், பட்டத்திற்கு உரியவன் சம்போஜி. பார்ப்பனர்கள் சிவாஜியைப் போல தங்களுக்கு அடிமையாக இருக்க மாட்டான் என்று நினைத்தனர். அதனால் சிவாஜியின் மூன்றாம் மனைவியின் மகன் ராஜாராம் என்ற 10 வயது சிறுவனை அடுத்த மன்னனாகத் தேர்ந்தெடுத்தனர். அவன் சிறுவன் என்பதால் தங்கள் விருப்பப்படி அரசனை ஆட்டி வைக்கலாம் என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டனர். ஆனால், சம்போஜிமீது உண்மையிலேயே அன்பு உடைய தளபதிகள் சம்போஜியை மன்னன் ஆக்குவது என்று முயன்றனர். அம்பிராவ் என்ற தளபதி பார்ப்பன சதிக் கூட்டத்தின் தலைவன் அண்ணாஜிதத்தோயையும், மற்ற முக்கிய பார்ப்பனர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு சம்போஜியை மன்னனாக்கினான். ஆனால் “கவிக்குலேசன்” என்ற பார்ப்பனன் – சம்போஜியின் சிறு வயது நண்பன் – அவனோடு ஒட்டிக் கொண்டான். எல்லா கெட்ட நடத்தைகளும் உடைய அவன் மன்னனுக்கு அனைத்துப் பழக்கங்களையும் கற்றுக் கொடுத்து அவனைப் பெருங்குடிகாரனாக ஆக்கி விட்டான். இந்தப் பார்ப்பானின் சதியால் சம்போஜி ஆட்சியை இழந்ததோடு மட்டுமின்றி, மிகவும் கோரமாகக் கொலையுண்டான்.

மன்னனிடம் மிக்க நன்றி உடையவனான உண்மையுள்ள தளபதி அம்பிராவ் இறந்து விட்டான். அது பார்ப்பான் கவிக் குலேசனுக்கு வாய்ப்பாகி விட்டது. மன்னனைத் தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கியவன், அவனை முழுமையாகத் தன் கைக்குள் போட்டுக் கொண்டான். தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும் என்று ஏமாற்றிய அவன், நாளடைவில் மன்னனை பெருங்குடிகாரன் ஆக்கிவிட்டான். மன்னனும் கவிக்குலேசன் தன் மந்திரத் தந்திரங்களால் தன்னைக் காப்பாற்றி விடுவான் என நம்பி கவலையற்று இருந்தான். அதனாலேயே மராட்டியப் பேரரசு அழியத் தொடங்கியது.

நாளாக, ஆக காஷ்மீரத்துப் பார்ப்பனனான கவிக்குலேசனின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போனது. அவன் வழிக்காட்டிய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான மன்னன் சம்போஜியோ அவனைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. மராட்டியப் பேரரசுக்கு நன்றியுடையோராக இருந்த தளபதிகளும் அதிகாரிகளும் எங்கிருந்தோ வந்தவன் இப்படி அட்டகாசம் செய்கிறானே என வருந்தினர். பிரஹலாத நிராஜி (Prahalad Neraji) எனும் தளபதி, மன்னன் மதி மயங்கிக் கிடந்த வேளையில் கவிக்குலேசனையும் அவன் குடும்பத்தையும் ரெய்கர் கோட்டையிலிருந்து சங்கமேஷ்வருக்கு விரட்டி அடித்தான். போதை தெளிந்த மன்னன் பிரகலாத் நிராஜியைக் கைது செய்து, கவிக்குலேசனை அழைத்து வர ஒரு படையுடன் சென்று ரெய்கருக்கு அழைத்து வர முடிவு செய்தான். சங்கமேஷ்வரில் இருவரும் அளவுக்கதிகமாகக் குடித்து மயங்கிக் கிடந்தனர்.

சம்போஜியின் நிலையை ஒற்றறிந்த முகலாயப் பேரரசன் அவுரங்கசீப், அவனது தளபதி முக்கரப்கான் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட படையுடன் சங்கமேஷ்வரைத் தாக்க உத்தரவிட்டான். மாவீரன் சிவாஜியின் கோழை மகன் சம்போஜியையும், அயோக்கியன் கவிக்குலேசனையும் எளிதாகக் கைது செய்த முக்கரப்கான் அவர்களுக்கு விலங்கிட்டு டில்லித் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, கேவலப்படுத்தி அவுரங்கசீப் முன்பு நிறுத்தினான். இந்த நிலையிலும் சம்போஜி மந்திர வித்தைகளில் கைதேர்ந்தவனான தன் நண்பன் கவிக்குலேசன் தன் மந்திரத்தால் அவுரங்கசீப்பை அழித்து விடுவான் என முட்டாள்தனமாக நம்பினான்.

சம்போஜியின் கைதைக் கண்டு மகிழ்ந்த அவுரங்கசீப், அவர்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவினால் மன்னித்து விட எண்ணினான். அல்லாவுக்கு நன்றி தெரிவிக்க இருக்கையை விட்டு எழுந்ததைக் கண்ட கவிக்குலேசன், சம்போஜியிடம், பேரரசன் தன் மந்திரத்தில் மயங்கி மன்னிப்பு கேட்க வருவதாகப் பொய்யுரைத்தான். அதை நம்பிய சம்போஜியும் திமிரோடு, அவுரங்கசீப் மகளைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கக் கேட்டான். அவுரங்கசீப் கோபத்தின் உச்சிக்கே சென்று, சம்போஜியின் கண்களைப் பிடுங்கவும், கவிக்குலேசன் நாவை அறுக்கவும் உத்தரவிட்டான். அவன் முன்பே அவ்வுத்தரவு உடனடியாக நிறைவேற்றப்பட்டது. மேலும் பல சித்ரவதைக்கு ஆளானார்கள். 11.3.1689 அன்று அவர்களின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்குப் போட்டான். சிவாஜி தன்னுடைய வீரத்தால் உருவாக்கிய மாபெரும் மராட்டிய பேரரசு ஜாதி வெறியாலும், பார்ப்பனர் சதியாலும் சிதைந்து போனது. “மலை எலி” என்று பெயர் பெற்றாலும் மாவீரனான சிவாஜி பார்ப்பனர் முன் உண்மையிலே “புலி”யாக இல்லாமல் ‘மதம்’ என்று பார்ப்பனர்களின் பொய்யுரைக்குப் பயந்து நடுங்கி “பூனை”யாகிப் போன காரணத்தால் அனைத்துமே அழிந்தன. (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும் கோ.இமயவரம்பன்)

18ஆம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜியால், அவனது முடி சூட்டு விழாவில் (1674) தோன்றிய மராட்டியப் பேரரசு 1818வரை நீடித்தது. மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரில் கிழக்கு இந்தியக் கம்பெனி வென்று மராத்தியர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த “மராத்தி” பேசும் மராட்டியர்கள் தலை சிறந்த போர்வீரர்கள். சிவாஜி காலத்தில் பரந்து, விரிந்த இப்பேரரசு வடக்கே “பெஷாவர்” முதல் தெற்கே “தஞ்சாவூர்” வரை விரிவடைந்தது. “ஹிந்தவி ஸ்வராஜ்யா” (Hindavi Swarajya- ஹிந்து அல்லது இந்திய மக்களின் தன்னாட்சி)வை நிலைநாட்டுவதையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு துவக்கப்பட்ட பேரரசு மராட்டியப் பேரரசு. மொராபாண்ட் பிங்லே (Morapant Pingle 1674-1683) என்ற சித் பவன் பார்ப்பான் “பேஷ்வா”என்ற பதவியில் சிவாஜியால் நியமிக்கப்பட்டான் ‘முக்ய பிரதான்’ என்ற பிரதம மந்திரி பதவியில் நியமனமான இவன் ஆட்டுவித்தபடியெல்லாம் சிவாஜி ஆடினான். n

(ஆதாரம்: பேஷ்வாக்கள்விக்கிபீடியா)

(தொடரும்…)