Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மத்தியப்பிரதேசத்திலும் பெரியார் பயணத்தைத் தொடங்கி விட்டார்!

கே:   “லிவ் – இன் உறவில் உள்ள பெண்கள் மனைவிக்கான உரிமைகளைப் பெற முடியும்” என்ற உயர்நீதிமன்ற அமர்வின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– முத்துவேல், கோவை.

ப :     சமூக மாற்றச் சிந்தனைகள் கருத்துக் களங்களாக மாறுவது வரவேற்கத் தக்கதுதானே!

கே:   போதையால் சீரழியும் இளைய தலைமுறையைக் காக்க, உடனடி நடவடிக்கையை அரசு மேற்கொள்வது கட்டாயமல்லவா? அனைத்துத் தரப்பினரையும் அழைத்து, அவரவர் கருத்தைக் கேட்டு தீர்வு காணவேண்டும் அல்லவா?

– வான்மதி, தருமபுரி.

ப :     அரசு, இதில் போதிய கவனத்துடன், அனைவரது அனுபவக் கருத்தாக்கங்களை நன்கு அறிந்தே உள்ளது என்பதால், இனி ஒரு தனி முயற்சி தேவையற்றது!

கே:   ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊழலை மாநில காவல்துறை விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கலாமா?

– தமிழ்மணி, வாணியம்பாடி.

ப :   ‘டபுள்’ வரவேற்பு கூறலாம்! ஓர்ந்து கண்ணோடாது நடந்தால் சரி!

கே :  “பூஜைக்கு மட்டுமே பண்டிதர்கள்; அரசைப் பிற சமூகத்தினர் நிருவாகிக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளது சரியா?

– மணிக்குமார், நாகப்பட்டினம்.

ப :   ம.பி.,க்கு உள்ளும் தந்தை பெரியார் பயணத்தைத் தொடங்கிவிட்டார் போலும்!

கே :  ‘இனமலர்’ என்று ‘விடுதலை’ ஏடு விமர்சிக்கும் நிலையில், தினம் சிலரை விட்டு, அவ்வேடு பற்றிப் பெருமையாக எழுதச் சொல்லும் முயற்சி எப்படிப்பட்டது?

– கயல்விழி, லால்பேட்டை.

ப :   விளம்பர மோகத்தால், அதற்குக் கிடைக்கும் விளைச்சல்!

கே : சனாதனம் பற்றிய வழக்கில் உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், தி.க., தி.மு.க., உதயநிதி ஸ்டாலின் பற்றி எல்லை கடந்து கடுமையாக விமர்சித்திருப்பது பற்றியும், சனாதன ஒழிப்பு என்பது இனப்படுகொலை, பண்பாட்டுப் படுகொலை என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது பற்றியும் தங்கள் கருத்து என்ன?

– செங்குட்டுவன், மதுரை.

ப :   விரிவான அறிக்கை வெளிவரும். அதனைக் காண்க!

கே : “துரோகி பழனிசாமி” டூ “பங்காளி பழனிசாமி” எப்படிப் பார்க்கிறீர்கள்?

– வெற்றிச்செல்வி, குடியாத்தம்.

ப :   ‘பசி வந்தால், பத்தும் பறந்து போகும்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! பசிகளில் மோசமானது பதவிப் பசி! இல்லையா? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. திரிசூலத்தின் மகிமை!

கே : காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தேவை என்று பஞ்சாப் மாநில பா.ஜ.க. முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

– திருமாறன், செங்கற்பட்டு.

ப :   ‘அதிக’ என்பதை மாற்றி, ‘உரிய’ என்ற சொற்றொடரே மிகவும் சரியானதாக இருக்கும்!