Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

விழியனைய தமிழ்மொழியின் வேர்ச்சொல் ஆய்ந்த

வீறுமிகு மொழிஞாயிறு பாவா ணர்தம்

செழித்தபுகழ் எஞ்ஞான்றும் நிலைத்து நிற்கும்!

செந்தமிழே முதன்மொழியாம் உலகில் என்றார்!

அழிந்துவிட்ட ஓர்மொழியின் செருக்கை வீழ்த்தி

அனைத்துக்கும் மூலம்நம் தமிழே என்றார்!

விழித்தெழுவீர் செந்தமிழீர்! தமிழைக் காக்க

வினைத்திட்பம் மனத்திட்பம் பெறுவீர் என்றார்!

 

ஆர்ப்பரிப்புச் சிறிதுமிலா அமைதி ஆழி!

ஆன்றவிந்த பெரும்புலமைக் கழனி! என்றும்

போர்ப்பரணி முழங்கிவந்த பொதிகைத் தென்றல்!

புலவரெலாம் வணங்குகிற அறிவுச் சோலை!

நார்களையே மலர்களெனப் புகழ்ந்து நாளும்

நஞ்சுமிழ்ந்த நரியாரின் திமிரை மாய்த்துப்

சீர்மிக்க ஆய்வுவிதை ஊன்றி வைத்த

செம்மல்நம் பாவாணர் வரலா றானார்!

 

தனித்தமிழ்க்கே உரமூட்டி மரமாய் ஆக்கித்

தாய்த்தமிழை வாழ்வித்தார்; பெருமை சேர்த்தார்!

கனிச்சாறாய்ப் பற்பலவாம் பனுவல் ஆக்கிக்

களங்கமிலாப் புகழ்சேர்த்தார்! தமிழைச் சூழ்ந்த

நனிதுயரை வல்லிருளை நாளும் போக்கி

நயத்தகுசீர் ஆய்வுகளால் மோதி, நின்ற

பனிமூட்டம் விலகிடவே பாதை தந்தார்

பாவாணர் பைந்தமிழின் மீட்பர் ஆனார்!

 

வேர்ச்சொல்லின் ஆய்வினிலே திளைத்தார்; யார்க்கும்

விளங்காத தெரியாத சொற்கட் கெல்லாம்

கூர்த்தமதி நுட்பத்தால் எடுத்துக் காட்டால்

குறிப்புரையால் விளக்கத்தால் தெளிவை நல்கி,

ஆர்த்தெழுந்தார் அரிமாவாய்; தமிழே என்றும்

அனைத்துலகில் வளமிக்க மொழியே என்றார்!

சீர்த்திமிகு முதல்மாந்தன் தமிழன்; அன்னோன்

சீர்குமரிக் கண்டத்தில் பிறந்தோன் என்றார்!

 

உள்ளொன்றும் புறமொன்றும் பேசார்; யார்க்கும்!

ஒடுங்காத நடுங்காத ஆண்மை யாளர்!

விள்ளரிய செந்தமிழின் புலமை ஊற்று!

வெகுண்டெழுந்து தமிழ்நலத்தைக் காத்த வேங்கை!

கள்ளமன ஆரியத்தின் கரவை நாளும்

கடிந்துரைத்த பேராசான்! இணையே யில்லா

வள்ளுவமாய் வரலாறாய் என்றும் வாழ்வார்

வளையாத பாவாணர் தறுகண் மிக்கார்!

 

எல்லோரும் வியக்கின்ற புலமை வாய்ந்த

இணையற்ற அறிஞர்பா வாணர் என்றும்

சொல்லாய்வில் முன்னோடி ஆவார்; நந்தம்

சுவைத்தமிழின் ஒப்பரிய சிறப்பை ஆய்ந்து

நல்லபல ஆய்வுநெறி நமக்குத் தந்தார்!

நற்றமிழே உயர்தனிச்செம் மொழியாம் என்று

பொல்லாதார் செருக்கடக்கி வென்றார்! என்றும்

பூந்தமிழே நமதுவிழி மூச்சாம் என்றார்!

 

தமிழர்மதம் தமிழர்வர லாறு, பண்டைத்

தமிழாட்சி திரவிடத்தாய் தகைமை சான்ற

தமிழர்தம் நாகரிகம் பண்பாட் டோடு

தனிச்சிறப்பாம் ஒப்பியலின் மொழிநூல் தந்தார்

அமிழ்தனைய கட்டுரைகள் இலக்க ணத்தை

ஆய்ந்துரைத்தார் அருந்தமிழின் மேன்மை தன்னை

நிமிர்ந்தெழுந்து கருத்தரங்கம் மாநா டெங்கும்

நெஞ்சுரத்தால் முழங்கியவர் புகழும் வாழ்க! n