Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கருங்காலி மாலையும் கண்மூடிச் செயல்களும்!-செந்துறை மதியழகன்

மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றும் ஒருவகை என்றால் எளிய மக்களின் பணத்தைச் சுரண்டுவதில் யாவும் ஒரே வகைதான். அதில் ஒன்றுதான், கருங்காலி மாலை சகல தோஷத்தையும் நீக்கி சகல அய்ஸ்வர்யத்தையும் தரும் என்கிற புருடா!

கருங்காலியை அணிந்தாலும், வீட்டில் வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்குமாம்!

“பொய் புகழ்வார் ஆன்மா – அது

புரட்டர்களின் கோட்டை,

காசைப் பிடுங்குவதற்கே – பலர்

கடவுளென்பார்” – என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படி மக்களின் காசைப் பிடுங்குவதற்கு, கருங்காலி வியாபாரிகள் சமூக வலைத்தளங்களில் அவிழ்த்து விடும் கதைகள் ஏராளம்! ஏராளம்!

‘கருங்காலி மாலை அணிவதால் தீய சக்திகள் நெருங்காது, செவ்வாய் தோசம் விலகும், திருமணத் தடை நீங்கும், கணவன் – மனைவி பிரச்சனை நீங்கி உறவு மேம்படும், குழந்தைகள் தேர்வில் வெற்றி பெறுவார்கள், தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு பணம் கொழிக்கும், வாகன விபத்துகளைத் தடுத்து நமது பயணங்களைப் பாதுகாக்கும்’ இத்தியாதி… இத்தியாதி… சரடுகளை விட்டு, கருங்காலி மரத்தில் அல்ல, கருவேல மரத்தின் வைரத்தில் கூட மணிகள் செய்து கம்பியில் கோத்து வியாபாரம் செய்கின்றனர். ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம் ஏன், பத்தாயிரம் வரையில் பக்தர்களின் அறியாமைக்கு ஏற்ப விலை மாறுபடும்.

தந்தை பெரியார் தெளிவாகச் சொன்னார்கள், “கடவுள் இல்லை என்று சொல்பவன் மேல் உனக்கு வரும் அதே கோபம் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவன் மீது உனக்கு வரவில்லை என்றால், உன்னை உண்மையான பக்தனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று! பக்தியை முதலீடாக வைத்துத் திருடுபவர்கள். மதக்கலவரம் செய்பவர்கள், ஆசிரமம் வைத்துக் கயமை வேலைகளில் ஈடுபடுவோர், கடவுள் சிலைகளையே கடத்துபவர்கள் இவர்கள் மீதெல்லாம் பக்தனுக்கு ஏன் கோபம் வருவதில்லை?

பக்தி வந்தால் புத்தி போகும்!

புத்தி வந்தால் பக்தி போகும்!

கருங்காலி மாலை அணிவதால் செல்வம் கொழிக்கும் என்றால், படிக்கவும், பணிக்குச் செல்லவும் வேண்டாமா?

சண்டை சச்சரவு முடிவுக்கு வரும் எனில், காவல் நிலையம், நீதிமன்றங்கள் எல்லாம் தேவையில்லை அல்லவா?

விபத்துகளைத் தடுக்கும் என்றால், சாலை விதிகள், மருத்துவமனைகள் தேவையா?

நண்பர் ஒருவர் முகநூலில் மூழ்கி இருக்கையில் வந்த கருங்காலி மாலை விளம்பரத்தில் தவறுதலாக விரல் வைத்துவிட்டார். உடனடியாக வாட்ஸ் ஆப் லயனில் வந்த அந்தப் பெண்மணி “வீட்டில் கருங்காலிக் கட்டையை வாங்கி வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்” என்றாராம். “ஏன் அதை விற்பனை செய்கிறீர்கள்? உங்கள் இல்லத்திலேயே வைத்திருங்கள்; நற்பலன்கள் கிடைக்கட்டும்” என்று நண்பர் சொல்லவும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் சொன்னாலும் சொல்வார்கள், ‘எல்லையில் கருங்காலி மாலையைக் கட்டிவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவமே தேவையில்லை’ என்று!

கொரோனாவை விரட்டியடிக்க ஒரு நாள் இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீட்டு விளக்குகளை அணைத்துவிட்டு, பால்கனியில் அல்லது வீட்டின் முன் அகல் விளக்கு, மெழுகுவத்தி அல்லது மொபைல் விளக்கை ஒளிரச்செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அவ்வண்ணமே செய்து, அதனைப் படமெடுத்து, சமூக ஊடகங்களில் பரப்பி, ‘நமது பிரதமருக்குத் தான் எவ்வளவு அறிவு’ என்றெண்ணி அகம் மகிழ்ந்தனர் பாரதக் குடிமக்கள்.

சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநர் காமகோடி என்பவர் ‘கோமூத்திரத்தில் (கோமியம்) மருத்துவக் குணம் உள்ளது, அது ஜீரண மண்டலத்துக்கு நல்லது’ என்று கூறி மருத்துவத்துறையை அலறவிட்டார்.

கோமியத்தில் மருத்துவக் குணம் உள்ளதென்று அதிகாரப்பூர்வமாக எந்த மருத்துவ அமைப்பு அறிவித்தது? அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனத்தில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் நிரூபிக்கப்படாத கருத்துகளை அறிவியல் உண்மைபோல் பேசலாமா? என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்பட பல அறிஞர்களும் கேள்வி எழுப்பினர். ஆடுகள் பதில் சொல்லாமல் ஆட்டுக் கொட்டகையில் தஞ்சமடைந்தன!

உலகில் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் போலியோ, தட்டம்மை, காலரா, மஞ்சள் காமாலை, காய்ச்சல், ஏன் கொரோனா போன்ற மக்களைக் கொல்லும் பல கொடிய வைரஸ்களுக்குத் தடுப்பூசிகள் கண்டறிந்து கட்டுப்படுத்தியுள்ளனர். இந்தப் பக்தி வைரசுக்கும் அதனைப் பரப்பும் கொசுக்களுக்கும் தந்தை பெரியாரின் தத்துவங்கள் தவிர வேறு தடுப்பூசி உலகில் ஏது?

தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலை அணிந்திருப்பதைப் படம்பிடித்துப் போட்டு, ‘பார்த்தீர்களா… இவர்கள் கருங்காலி மாலை அணிந்ததால்தான் திரைத்துறையில் ஜொலிக்கிறார்கள்’ என்ற விளம்பரங்களின் மூலம் பக்தர்களை வலைவீசி இழுக்கின்றனர்.

சென்ற தலைமுறை நடிகர் ஒருவர் ருத்ராட்சக் கொட்டை அணிந்து சிவபெருமானுடன் ஆன்மிகத் தொடர்பில் இருப்பதாகக் கிளப்பி விட்டார். உடனே அதையும் நம்பி ரசிகர் பட்டாளம் ருத்ராட்சத்தில் அய்ந்துமுகம், ஆறுமுகம் என்று தேடிப்பிடித்து வாங்கி கழுத்தில் கட்டிக்கொண்டு பைத்தியம் ஆனார்கள் ஒரு காலத்தில்.

எபோனி (Ebony) என்ற கருங்காலி மரம் ஆப்பிரிக்கா, ஆசியா வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் Diospyros பேரினத்தைச் சேர்ந்தது. (டையோஸ்பைரோஸ் என்பதை தமிழில் பனிச்சை மரம் என்கின்றனர்) இந்தியா, இலங்கை, மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்பட்டாலும், நைஜீரியாவில் கருங்காலி மரங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அங்கெல்லாம் இது கித்தார் பியானோ விசைப்பலகைகள், செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், நகைகள் மற்றும் கைப்பிடிகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதன் அடர்த்தி மற்றும் அழகிய நிறத்திற்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது.

நமது தமிழ்நாட்டுக்கும் இது பழைமை வாய்ந்த மரம்தான். இதன் பட்டை, வேர், பிசின் உள்பட அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துவர்ப்புச் சுவையாக இருக்கும் இந்த மரம் வயிறு சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும்; நீரிழிவு மற்றும் இரத்தம் சார்ந்த குறைபாடுகளுக்கும் மருந்தாகச் சித்த மருத்துவத்தில் காலம் காலமாகப் பயன்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காகக் கற்பிக்கப்படும் மாயப்(புனித) பிம்பம் மனிதச் சுரண்டல் ஆகும்.

அரைவை இயந்திரங்கள் வருகைக்கு முன் வீடுகளில் நெல் குத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கைகள் பெரும்பாலும் கருங்காலி மரத்தாலேயே செய்யப்பட்டவை. பெண்களின் மாதவிடாய் நாள்களில் வீட்டுக்கு வெளியே தாழ்வாரங்களில் 3 நாளிலிருந்து, 7 நாள்கள் வரையில் அவர்களைத் தென்னை ஓலை (கிடுகு)மறைப்பில் தங்க வைத்து, பாதுகாப்புக்காக இந்தக் கருங்காலி மரக்கட்டையையோ – உலக்கையையோ குறுக்கே போட்டிருப்பார்கள். இது உறுதியான மரம் என்பதால், பாம்பு போன்ற விஷப் பூச்சிகளை விரட்ட, எளிதில் உடையாத இந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி உள்ளனர். பிற்காலத்தில் கருங்காலி மரங்கள் அருகிப்போனதனால், வீட்டிலிருந்த வேறு மரங்களில் செய்த உலக்கையைப் போட்டு வைத்தனர். பிற்காலத்தில் பெண்ணை வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்து உலக்கை வைப்பது வழக்கமாகியது.

இது கொஞ்சம் பழைய கதைதான் என்றாலும் வேறுவழி இல்லை, படியுங்கள்.

‘ஒரு ஞானியின் மடத்தில் தினமும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அந்த மடத்தில் ஒரு பூனையும் இருந்தது.

அந்தப் பூனை கூட்டுப் பிரார்த்தனையின் போது ஒவ்வொரு நாளும் சத்தம் எழுப்பியது. ஒரு நாள் அந்த ஞானி இனி மேல் கூட்டுப் பிரார்த்தனைக்கு முன் அந்தப் பூனையைத் தூணில் கட்டி விடுங்கள் என்று கூறினார். அன்று முதல் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுவதற்கு முன் பூனையைத் தூணில் கட்டி வைத்தனர்.

சிறிது காலத்தில் அந்த ஞானி இறந்துவிட்டார். அன்றே அந்தப் பூனையும் இறந்துவிட்டது. புதிய குருவாக தலைமைச் சீடராய் இருந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நாள் கூட்டுப் பிரார்த்தனை புதிய குருவின் தலைமையில் நடைபெற இருந்தது. புதிய குரு சீடர்களிடம் உடனே போய் ஒரு பூனையைப் பிடித்து வாருங்கள். நமது குரு பூனையைத் தூணில் கட்டிய பிறகுதான் பிரார்த்தனையை ஆரம்பிப்பது வழக்கம் என்றார். அதன்படி ஒரு பூனையைப் பிடித்துவந்து தூணில் கட்டி வைத்த பின் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் வழக்கமாகி, அந்த ஆசிரமத்திற்கு பூனை கட்டி ஆசிரமம் என்று பெயர் ஏற்பட்டதாம்!

இந்தக் கதை, ஒரு செயலுக்கான உண்மையான காரணம் தெரியாமல் பின்பற்றுவதும் அர்த்தமற்றதும் ஆன செயல் என்பதைச் சொல்கிறது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் கருங்காலி மாலை `பவர்ஃபுல்’ என்கிறார். கருங்காலி மாலைக்குப் பவர் – ஆற்றல் இருக்குமாயின் பிறகு கடவுளுக்கு இங்கென்ன வேலை?

கருங்காலி மாலை என்பது ஏமாற்றுக் காரர்களின் வியாபார யுத்தி; அதை நம்பிப் போகலாமா பக்தனின் புத்தி?n