“ஏங்க, வீட்டுக் கதவை நல்லா சாத்திப் பூட்டுங்க; வர வர உங்களுக்கு ஞாபக சக்தியே ரொம்பவும் குறைஞ்சிகிட்டு வருது”
“அதெல்லாம் ஒன்றுமில்லை சங்கீதா, இதோ, பூட்டை வேண்டுமானாலும் நன்றாகப் பார்! சரியாகத்தான் பூட்டி இருக்கேன்”.
கொடையரசனும் சங்கீதாவும் கடை வீதிக்குக் கிளம்பினார்கள். அப்போது வீட்டின் கதவை நன்கு தாழிட்டுப் பூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் சங்கீதா.
“ஏங்க, வீட்டுச் சாவியை உங்க முழுக்கால் சட்டைப் பையில் வைக்காதீங்க! ஏதேனும் பையிலிருந்து பொருளை எடுக்க வேண்டியிருந்தால் சாவிக் கொத்து கீழே விழ வாய்ப்பிருக்கும். துணிப்பை எவ்வளவோ வீட்டில் இருக்கு. ஒரு பையை எடுத்து வந்து அதில் சாவிக் கொத்தை வைக்கலாம் அல்லவா?”
“இது நாள் வரை நான் இப்படித்தான் செய்து வர்ரேன். ஒன்றும் ஆகாது. புறப்படலாம்,“ என்றார் கொடையரசன்.
ஆனால், புறப்பட எத்தனித்த சங்கீதா சட்டென நின்றார். கொடையரசனிடம் வீட்டை மீண்டும் திறக்கச் சொன்னார். சற்று நேரம் கழித்துப் புறப்படலாம் என்றார்.
“ஏன்? ஏன்? என்னாயிற்று?” என்று கேட்டார் கொடையரசன்.
“சகுனம் சரியில்லை. வீட்டைத் திறந்து விடுங்கள். உள்ளே சென்று ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வோம்”, என்று சொன்ன சங்கீதாவின் பேச்சைப் பொருட்படுத்தாமல் கிளம்ப முற்பட்டார் கொடையரசன்.
“அதெல்லாம் தேவையில்லாத வேலை. நாம் கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான சில பொருள்களைத்தான் வாங்கப் போகிறோம். இதற்குச் சகுனம் என்ன வேண்டிக் கிடக்கு”, என்று சொல்லியபடியே இரு சக்கர வாகனத்தை இயக்கினார்.
“நான் சொல்வது எதையும் நீங்க கேட்பதே இல்லை”, என்று சொல்லி, கோபத்துடனேயே ஏறி உட்கார்ந்தார் சங்கீதா.
கடைவீதியில் மளிகைக்கடை, மருந்துக்கடை, பலகாரக்கடை ஆகிய கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கியபின் இருவரும் மீண்டும் வீட்டுக்குக் கிளம்பினர்.
“எனக்கு மிகவும் தலைவலியா இருக்கு. சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டுமே” என்றார் சங்கீதா.
வழக்கமான வேகத்தைவிட சற்று கூடுதலான வேகத்துடன் இரு சக்கர மோட்டார் வாகனத்தை இயக்கினார் கொடையரசன்.
வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தினார்.
“சீக்கிரம் பூட்டைத் திறங்க; உடனே நான் உள்ளே போய் ஓய்வெடுக்க வேண்டும்; தலைவலி ரொம்பவும் அதிகமாயிடுச்சு”, என்று துரிதப்படுத்தினார் சங்கீதா.
சட்டைப் பையில் கையை விட்ட கொடையரசன் திடுக்கிட்டார். காரணம், வீட்டின் சாவிக் கொத்து கால்சட்டைப் பையில் இல்லை.
“அய்யோ, சாவிக் கொத்தைக் காணோமே! எங்கோ விழுந்து விட்டதே! என்று பதற்றத்துடன் சொன்னார்.
“என்ன? சாவிக் கொத்தைக் காணோமா? அலமாரிச் சாவியும் அதில்தானே இருக்கு… வீட்டுச் சாவியோட எல்லா சாவியும் தொலைஞ்சு போயிடுச்சா? நான் அப்பவே சொன்னேன், கேட்டீங்களா? முழுக்காற் சட்டைப்பையில் வைக்க வேண்டாமென தலையால அடிச்சிக்கிட்டேன், கேட்டீங்களா? இப்படி சாவிக் கொத்தைத் தொலைத்து விட்டு நிக்கிறீங்களே! தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருக்கு. ஓய்வெடுக்க முடியலையே!” என்று புலம்பித் தீர்த்தார் சங்கீதா.
கொடையரசன் சற்று யோசனை செய்தார்.
“என்ன யோசனை? பூட்டை உடைக்க வேண்டியதுதான்!
அதற்கு ஏற்பாடு உடனே செய்யுங்க” என்று துரிதப்படுத்தினார் சங்கீதா.
ஆனால், கொடையரசன் தாங்கள் சென்ற கடைகளிலோ அல்லது சட்டைப்பையில் கையை விடும்போது கடையருகிலோ கீழே விழுந்திருக்க வேண்டுமென உறுதியாக நம்பினார். முதலில் சென்றது மளிகைக் கடை என்பதை நினைவு கூர்ந்து அங்குச் சென்று தேட முடிவு செய்தார்.
தனது எண்ணத்தையும் சங்கீதாவிடம் தெரிவித்தார்.
“தொலைந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதே… இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை. சரி, நீங்க சாவியைத் தேடி வரும் வரைக்கும் நான் தெருவிலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமா? நானும் கூட வருவேன்” என்று சொல்லி வண்டியிலும் உட்கார்ந்து விட்டார் சங்கீதா.
வேறு வழியின்றி அவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் கொடையரசன்.
முதலில் மளிகைக் கடைக்குச் சென்று தேடினார். அந்தக்கடையின் உரிமையாளர் நீதிராசனும் சேர்ந்து தேடினார். ஆனால், சாவிக்கொத்து எதுவும் அங்கு இல்லை.
“இங்கு தொலைந்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்திருந்தால் நானே உங்களுக்குத் தகவல் கொடுத்திருப்பேனே” என்றார் நீதிராசன்.
வாகனத்தை நிறுத்திய இடத்தில் தரையில் தேடினார் சட்டைப் பையில் கையை விடும்போது விழுந்திருக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சாவிக்கொத்து எதுவும் கீழே கிடைக்கவில்லை.
“அடுத்ததாக மருந்துக் கடைக்குச் செல்ல வேண்டியதுதான். கூட்டம் அதிகமாக இருந்ததால், மருந்துக் கடைக்கு எதிரில்தானே வண்டியை நிறுத்தினோம்; அங்கு ஒரு நடைபாதைக்கடை இருந்ததே. அதன் விற்பனையாளரைக் கேட்க வேண்டியது தான்” என்று எண்ணியபடியே வண்டியை எடுத்தார். சங்கீதாவிடமும் செய்தியைச் சொன்னார்.
ஆனால் அதை சங்கீதா விரும்பவில்லை.
“நான் சொல்வதை எப்போது கேட்டிருக்கீங்க. வீட்டில் எவ்வளவோ பைகள் இருக்கு; அதில் ஒன்றை எடுத்து அதில் சாவிக்கொத்தை வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.
“சங்கீதா, நடந்ததைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம்; இனி நடக்க வேண்டியதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.”
“சரி, நீங்க சொல்வதை நான் ஏற்கிறேன்.
இனிமேல் ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்போம். அதோ, பாருங்களேன்” என்று எதிரே உள்ள ஒரு வீட்டைக் காட்டினார் சங்கீதா.
“ஆமாம் ஒரு வீடு இருக்கு, அதற் கென்னவாம்?“ என்று கேட்டார் கொடையரசன்.
“அது யார் வீடு தெரியுமா?”
“எனக்குத் தெரியாது சங்கீதா. ஆனாலும் அங்கு ஒரு பெரிய பெயர்ப்பலகை இருக்கு. அதில் “இராமஜெயம் அய்யர் ஜோதிட நிலையம்“ என்ற பெயரும் இருக்கு”.
“இப்போது நாம் அந்த வீட்டுக்குச் செல்வோம்” என்றார் சங்கீதா.
சங்கீதாவின் எண்ணம் என்ன என்பதை அறிந்து கொண்டார் கொடையரசன்.
சாவிக்கொத்தைக் கண்டுபிடிக்கவும், விழுந்த இடத்தை அறியவும், கிடைக்குமா, கிடைக்காதா என்பதை அறியவும் ஜோசியக்காரரை நாட விரும்பினார் சங்கீதா.
“அவர் ஜோசியக்காரர் மட்டுமல்ல; மை வைத்துப் பார்த்து, தொலைந்து போன பொருளைப் பற்றியும், இருக்கும் இடம் பற்றியும் சொல்வாராம்! நான் ஏற்கனவே இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்” என்றார்.
“அதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை சங்கீதா! அப்படிப்பட்ட எண்ணமே உனக்கு வரக்கூடாது! ஜோசியம், மாந்திரீகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு, ஏமாற்று வேலை. முயற்சி திருவினையாக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது!
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.”
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற”.
இந்த இரண்டு குறள்களையும் நாம் நினைவில் கொண்டு முயற்சியைத் தொடர் வோம். தொலைந்து போன பொருளைக் கண்டுபிடிக்க ஜோசியர் இருந்தால் காவல் நிலையமே தேவையில்லையே! துப்பறியும் நிபுணர்களும் தேவையில்லையே! வா, மருந்துக் கடைக்குப் போய்த் தேடலாம்”.
வேறு வழியின்றி அவரைப் பின் தொடர்ந்தார் சங்கீதா. மருந்துக் கடையிலும் சாவிக் கொத்து கிடைக்கவில்லை.
“எப்படியும் நாம் ஜோசியரிடம் போய்த்தான் ஆக வேண்டியிருக்கும்”, என்று முணுமுணுத்தார் சங்கீதா.
“புத்தியுடன் செயல்பட்டு சாவிக் கொத்தைக் கண்டு பிடிப்போம்! எதிரே உள்ள நடைபாதை துணிக்கடைக்காரரிடம் விசாரிப்போம்” என்று சொன்ன கொடையரசன் அவரிடம் சென்று விசாரித்தார்.
“ஆமாம் அய்யா, விளம்பரம் செய்யக் கூடிய தானி ஒன்றின் ஓட்டுநர் ஒரு சாவிக் கொத்தைக் கண்டெடுத்துள்ளதாக விளம்பரம் செய்தபடி சென்றார். அவரைக் கண்டுபிடித்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் அந்தக் கடைக்காரர்.
“அவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் கொடையரசன்.
“அவர் பெயர் சுப்பு. ஆனால், அவர் கைப்பேசி எண் எனக்குத் தெரியாதே”, என்று பதிலளித்தார் கடைக்காரர்.
சுப்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கே தேடுவது என நினைத்த கொடையரசன், எப்படியாவது தேடித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் எதிரே நின்று கொண்டிருந்த ஒரு தானி ஓட்டுநரிடம் சென்று வினவினார்.
“சுப்பு என்கிற தானி ஓட்டுநரைத் தெரியுமா? அவரது கைப்பேசி எண் தெரியுமா?”
அவருக்குத் தெரியவில்லை. இருப்பினும் மனம் தளராமல் அருகிலேயே இருந்த இனிப்புக் கடைக்கும் சென்று விசாரித்தார். ஆனால், அங்கும் சாவிக் கொத்து கிடைக்கவில்லை.
மேலும் சில தானி ஓட்டுநர்களை விசாரித்தார்.
இறுதியாக ஓர் ஓட்டுநர்,
“சுப்புவைத் தெரியும். அவர் ஓட்டுவது விளம்பரம் செய்யும் தானி. அவரது கைப்பேசி எண் என்னிடம் இல்லை. ஆனால், வேறு யாரிடமாவது வாங்கித் தருகிறேன்,” என்று சொல்லிவிட்டு அவர் நண்பர்கள் பலரிடம் கைப்பேசி மூலம் விசாரித்தார்.
இதெல்லாம் சாத்தியப்படுமா என்று அதிருப்தியாகவே இருந்தார் சங்கீதா. ஆனாலும் கொடையரசன் செய்யும் முயற்சி களைக் கண்டு அவர் மீது அனுதாபப்பட்டார். ஜோசியரைப் பார்க்கப் போக வேண்டும் என்ற எண்ணமும் மறைந்து அவரது முயற்சிக்கு உறுதுணையாகவும் செயல்பட முற்பட்டார்.
பல பேரிடம் விசாரித்த பின், ஓட்டுநர் ஒருவர் மூலம் சுப்புவின் கைப்பேசி எண் கிடைத்தது.
உடனே சுப்புவுக்கு கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார் கொடையரசன்.
“ஆமாம், ஒரு சாவிக் கொத்து மருந்துக் கடைக்கு எதிரில் சாலையில் கிடந்தது. அதை நான் எடுத்து வைத்துள்ளேன். நீங்கள் சாவிக் கொத்தின் அடையாளத்தைச் சொல்லுங்க அய்யா” என்றார் சுப்பு.
“அந்தச் சாவிக் கொத்தில் அய்ந்து சாவிகள் இருக்கும். அதன் வளையத்தில் பெரியார் படம் கோக்கப்பட்டிருக்கும்”, என்று அடையாளத்தைச் சொன்னார்.
“சரிதான், நான் இருக்கும் இடத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்”, என்று சொன்ன சுப்பு, தான் இருக்கும் இடத்தையும் தெரிவித்தார்.
“பெரியார் படம் கோக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே, எப்போது கோத்தீர்கள்? என்று கேட்டார் சங்கீதா.
“சில நாட்களுக்கு முன்பே கோத்து விட்டேன். நீ தான் கவனிக்கவில்லை போலிருக்கு” என்று பதிலளித்த கொடையரசன் மேலும் தொடர்ந்து பேசினார்.
“முயற்சி செய்ததால்தான் சாவிகள் கிடைத்தன. உனது யோசனைப்படி ஜோசியம் பார்க்கப் போயிருந்தால் சாவிக் கொத்து கிடைக்காமலே போயிருக்கும்”.
சொன்ன இடத்தில் சுப்புவைச் சந்தித்தனர். இருவரும் கருப்புச் சட்டை அணிந்திருந்த சுப்புவிடம் சாவிக் கொத்தைக் கேட்டனர்.
“அய்யா, இந்தச் சாவிக் கொத்தில் இருப்பவை திறவுகோல்கள் மட்டுமல்ல; பெரியதாக இருப்பது சமூக நீதியின் திறவுகோல் என்றால் மற்ற திறவுகோல்கள் அதற்கு உறுதுணையாக இருக்கும் தூண்கள் போன்றவை” என்று சொல்லியபடியே வளையத்தில் கோக்கப்பட்டிருந்த பெரியார் படத்தைப் பார்த்தபடியே மகிழ்வுடன் கொடுத்தார் சுப்பு.
கொடையரசனும், சங்கீதாவும் சுப்புவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நிம்மதியுடன் வீடு திரும்பினர். n





