Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சமுதாயச் சீர்திருத்தக்காரர்களின் முக்கியக் கடமை என்ன?- தந்தை பெரியார்

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங்கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சைத் தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்பதும் எனக்கு விளக்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமூகத்தைக் கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம் வந்துவிட்டால் – பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய ராமராஜ்யமும் சத்திய சந்தன் ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்ட தாகவும் இவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. எனவே, மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வருமானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் முக்கியமான கடமையேயாகும்.”

(தென்னிந்திய சமுதாயச் சீர்திருத்த மாநாட்டிற்குத் தலைமை வகித்து தந்தை பெரியார் ஆற்றிய உரை)

– ‘குடிஅரசு’ 02.12.1928

ஜாதியின் கொடுமை

“ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான். இது உண்மை. வாய்ப்பேச்சுக்காக நான் சொல்லவில்லை. எப்படியெனில், மல உபாதைக்குச் சென்றவன் அந்தப் பாகத்தை மட்டும் ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலால் மிதித்துவிட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுவதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன் உடலை உச்சிமுதல் உள்ளங்கால் வரை நனையக் குளித்தால் ஒழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன? தோஷமென்ன? எதுவுமில்லை. ஆனால், அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை.”

– தந்தை பெரியார், ‘திராவிடன்’ 05.10.1929

தோல்வியுற்றதே கிடையாது!

“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்களிலும் – ஜாதி வித்தியாசம், உயர்வு – தாழ்வு கூடாதென்பதிலும்; தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக்கட்டும் அநாகரிகம் ஒழியவேண்டுமென்பது வரை – நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும், ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன் – கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களே பூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்; அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்.”

– ‘விடுதலை’ 22.08.1948

பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர்

ஜாதி நிலைநிறுத்தப்படுவதற்கு நம் நாட்டில் முக்கிய காரணம், ஜாதியானது தொழிலோடு இணைக்கப்பட்டதாலேயே ஆகும். பரம்பரை பரம்பரையாக அந்தந்த ஜாதியைச் சார்ந்தவன் அந்தந்த ஜாதிக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்தத் தொழிலைச் செய்து வந்ததால் ஜாதியானது நிலைநிறுத்தப் பட்டு வருகின்றது. இதன் காரணமாகத் தான் – ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமென்பதால் தான் – பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர். பள்ளிக்கூடங்கள் வைத்தால் மனிதன் அறிவு பெற்று விடுவான். அறிவு பெற்றால் நான் ஏன் தாழ்ந்த ஜாதி? அவன் மட்டும் ஏன் உயர்ந்த ஜாதி? என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவான் என்பதோடு, எவனும் தான் தாழ்ந்த ஜாதியாக இருக்க விரும்ப மாட்டான். ஆனதால் அரசாங்கங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்க முன்வரவில்லை என்பதோடு, மனிதனின் மூட நம்பிக்கை, முட்டாள்தனம் வளரும்படியான காரியங்களையே செய்து வந்தன.

எனக்கு இந்த மருத்துவ சமுதாயத்தோடு 12 வயது முதல் தொடர்பு உண்டு. எனது வீட்டிற்குப் பின்னால் இந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் இருந்தன. அங்கிருந்து என்னோடு இரண்டு பையன்கள் பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வருவார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போதே வீட்டிலிருந்து ஓலைப் பாயைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்லாம் உள்ளே போய் வகுப்பில் உட்காருவோம். அவர்கள் வகுப்புக்கு வெளியே தாழ்வாரத்தில் பாயை விரித்து அதில் உட்கார்ந்து கொள்வார்கள். வாத்தியார் சொல்வது அவர்கள் காதில் விழாது. 8 வருஷம் படித்தால் தங்கள் பெயரை அதுவும் தப்புத் தவறுமாக எழுதவே கற்றுக் கொள்வார்கள். பள்ளிக்கூடத்தில் மட்டும் அவர்களுக்கு இந்த நிலையில்லை. டிஸ்ட்ரிக் போர்டு – தாலுகா போர்டு மெம்பராக இருந்தாலும் அவர்கள் ஆஃபீஸ் கட்டடத்திற்கு வெளியேதான் உட்கார வேண்டும். என்ன பேசுகிறார்கள், என்ன தீர்மானம் போடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ‘மினிட் புக்’கைக் கொண்டு போய் இங்கு கையெழுத்துப் போடு என்று பியூன் காட்டினால், அந்த இடத்தில் கையெழுத்துப் போடுவார்கள். காங்கிரஸ் காலத்திலும் இந்த நிலை தான். இவர்களுக்காகச் சுயமரியாதை இயக்கம் தான் போராடி அவர்களுக்கு உரிமை வழங்கச் செய்ததே தவிர, வேறு எவரும் அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை. அரசாங்கமும், ஜாதி ஆணவமும் மக்களை முன்னேற முடியாமல் செய்து விட்டன.

(14.5.1969 அன்று திருச்சி தில்லைநகரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை)

– ‘விடுதலை’ 17.5.1969