கடவுள் நம்பிக்கையென்பது, காரணம் புரியாதவற்றுக்கு எல்லாம் காரணமாகக் கற்பிக்கப்பட்டதனால் ஏற்பட்ட ஒன்று. அச்சம், வியப்பு, விடை காணமுடியாமையின் விளைவாய் மனிதர்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை உலக அளவில் வந்தது.
அறிவு வளரவளர அந்த நம்பிக்கை கேள்விக்குறியானது. கடவுள் மறுப்பும் மக்கள் மத்தியில் எழுந்தது. கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் மாறுபட்டவை, வேறுபட்டவை, முரண்பட்டவை. எனவே, கடவுள் சார்ந்த கோட்பாடுகள் கடவுள் பற்றிய சிந்தனையாளர்களிடம் வந்தன. அக்கோட்பாடுகளே மதமாயின. அக்கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் மதத் தலைவர்கள் ஆக்கப்பட்டார்கள். தனிமனித நம்பிக்கையாய் இருந்த கடவுள் நம்பிக்கை அதன்பின் அமைப்பு ரீதியான நம்பிக்கையாக்கப்பட்டது. அதன்பின் மரபுவழியாக அந்நம்பிக்கைகள், அந்நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகள் ஏற்கப்பட்டன.
கடவுள் நம்பிக்கை அமைப்பு ரீதியாக ஆனதும் அது அரசியலாகவும் மாற்றப்பட்டது. தனி மனித நம்பிக்கையாய் இருந்த கடவுள் நம்பிக்கை எப்போது அரசியல் சார்ந்ததாய் மாறியதோ அப்போதே மதவெறுப்பும், மோதல்களும் வளரத் தொடங்கின.
உலகில் போர்களால் சாகடிக்கப்பட்டவர் களைக் காட்டிலும், மதமோதல்களால் கொல்லப்பட்டவர்களே அதிகம் என்ற கொடுமை உருவானது. அரசியல் ஆதிக்கப் பரவலால் மதம் நாடுகடந்து பல நாடுகளுக்கும் பரப்பப்பட்டது. இதன் மூலம் மதமாற்றங்களும் நிகழ்ந்தன.
இந்தியாவைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க தமிழர் மண். சரியாகச் சொல்வதென்றால் தெற்காசியப் பகுதி முழுவதும் தமிழர் மண். இப்பகுதியில் எந்தக் கடவுள் நம்பிக்கையும், ஜாதிப் பிரிவுகளும் இல்லை. பயன்படுபவை வணங்கப்பட்டன; பயன்படுபவர்கள் வணங்கப்பட்டனர். ஆண், பெண் உறுப்புகள், இயற்கையாய் உள்ள சூரியன், நெருப்பு, நீர் போன்றவை, நிலத் தலைவர்கள், வீரர்கள், சாதனைப் பெண்கள், குலப்பெரியோர் ஆகியோர் வணங்கப்பட்ட நிலையே தொடக்கக் காலத்தில் இருந்தது.
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர்கள், தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் குடியேறிப் பரவத் தொடங்கியபின், அவர்களிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. இயற்கைச் சக்திகளையே வழிபட்டனர். தமிழர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்தனர். தமிழ்ப் பெண்களைச் சேர்ந்தே தங்கள் வாரிசுகளைப் பெற்றனர்.
தமிழர்கள் மண்ணில் குடியேறியவர்கள் ஆரியர்கள் என்பதால், அவர்கள் மிகச்சிறு எண்ணிக்கையில் இருந்தனர். எனவே, தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள, இயற்கை வழிபாடுகளையும், பயன்பாட்டு அடிப்படையிலான வழிபாடுகளையும் கடவுள்களாக்கினர். மக்களிடையே தொழிலின் அடிப்படையில் இருந்த பிரிவை வருணாசிரமப் பிரிவாக்கினர். இவையெல்லாம் கடவுள் செய்தவை என்று உறுதி செய்ய சாஸ்திரங்களை உருவாக்கினர்.
ஆரியர்களின் செயல்பாடுகளை, கொள்கைகளை, ஆதிக்கத்தை, பேதப் படுத்தலை எதிர்த்து புத்த, சமண சங்கங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் அந்த அமைப்புகளில் ஆரியர்கள் ஊடுருவிச் சிதைத்தனர், திரித்தனர், செல்வாக்கு இழக்கச் செய்தனர்.
பிற்காலத்தில் அயல் நாட்டார் படை யெடுப்பின் காரணமாக கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் இந்தியாவில் பரவி வளர்ந்தன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்த கடவுள் சார்ந்த அமைப்புகளையெல்லாம் ஒன்றிணைத்து ஹிந்து மதம் என்று அழைத்தனர். அதன்பின் ஹிந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம் என்ற மூன்று முதன்மை மதங்கள் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டன.
ஆங்கிலேய ஆட்சியை அகற்ற இந்தியாவில் விடுதலைப் போராட்டங்கள் காந்தியின் தலைமையில் தொடங்கின. ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் திராவிட உணர்வுடன், சமூகநீதிக்காக, ஆதிக்க ஒழிப்புக்காக நீதிக்கட்சி உருவாக்கப் பட்டது. பின், 1925ஆம் ஆண்டு வாக்கில் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது.
இது ஹிந்துக்களுக்கான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், ஆரியப் பார்ப்பனர் களின் அமைப்பாகவே அது செயல்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கெதிரான போராட்டம், ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிரான போராட்டம்; இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பிரச்சாரங்கள் என்று மும்முனைச் செயல்பாடுகள் தீவிரமடைந்தன.
சமூக அமைப்பாக, அரசியல் சார்பற்றதாக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்தாகத் தன்னைச் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அது அரசியல் நோக்க முடையதாகவே செயல்பட்டது. ஜனசங்கம் என்ற அமைப்பை அரசியல் செயல்பாட்டுக்காகவே உருவாக்கினர். அதுவே பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக ஆக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பல கிளை அமைப்புகளைக் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டாலும், எல்லாம் அரசியல் ஈடுபாடு கொண்டவையாக, நோக்கமுடையதாகவே செயல்படுகின்றன.
மதம் அரசியலாக்கப்படுவது மாபெரும் தீங்கு
மதம் என்பது தனிநபர் விருப்பம். அது பரம்பரையாக்கப்படுவதும், பிறர் மீது வலிய திணிக்கப்படுவதும் குற்றமாகும். அதேபோல் மதம் என்பது தனிப்பட்ட உரிமை. அது அரசியலோடு கலக்கக்கூடாது. அரசியல் மூலமாய் செல்வாக்குப் பெறக்கூடாது. மதம் சார்ந்த அரசியல் நிலைப்பாடும், உரிமையும் சட்ட ஆதிக்கமும் கூடாது.
ஆனால், இந்தியாவில் அரசியல் சாசனம் இயற்றும்போதே மத ஆதிக்கத்தை நுழைத்துவிட்டனர். அதன்பின் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் கட்சிகள் மதச்சார்பின்மை கொள்கையைப் பின்பற்றினாலும் நடைமுறையில் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியலில் மதத்தின் செல்வாக்கு மிகுந்து வருகிறது.
குறிப்பாக பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் மதச்சார்பு நிலை அதிகமாகி வருகிறது. மத ஆதிக்கம் நீதிமன்றங்களிலும் தற்போது தலை தூக்கி நிற்பது மிகவும் ஆபத்தானது. வெளிப்படையாகவே சில நீதிபதிகளின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருவது, நீதித்துறையின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.
இராமஜென்மபூமி, பாபர் மசூதிச் சிக்கலில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் செயல்பாடுகள் அவர்களின் உளச்சான்றையே உலுக்கியுள்ளது என்பது அவர்களின் வார்த்தைகள் மூலமே வெளிப்பட்டுள்ளது.
இருக்கும் நிலை ஏற்பே இந்திய அமைதிக்குக் காப்பு!
மசூதி இருக்கும் இடத்தில் கோயில் இருந்தது, சர்ச் இருக்கும் இடம் ஹிந்துக்களுக்கு உரியது, சமணக் கோயிலைத் தகர்த்துவிட்டு ஹிந்துக் கோயிலாக்கினர் என்பது போன்ற சிக்கல்கள் புதிதுபுதிதாய் எழுப்பப்பட்டு, பெரும் மோதல்களுக்கும், உயிரிழப்பிற்கும் காரணமாகி வருகின்றன.
பாபர் மசூதி பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நிலையில், அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார்; எனவே, மசூதியை இடித்துவிட்டு இராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பெரிய கலவரத்தை உண்டாக்கினர். அச்சிக்கல் அரசியலாக்கப்பட்டு இரதயாத்திரை நடத்தப்பட்டு, பல இடங்களிலும் கலவரம் வெடித்து, உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆட்சி அதிகாரங்களையும் மீறி, இராணுவ பலத்தையும் மீறி, நீதிமன்ற ஆணைகளையும் மீறி, சட்ட ஒழுங்கையும் மீறி, வன்முறைக் கும்பல் பட்டப்பகலில் பலரும் பார்க்க, அரசும், இராணுவமும் பார்த்துக் கொண்டிருக்க பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
அடுத்து மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில்தான் மசூதியுள்ளது. எனவே, மதுரா மசூதியையும் இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
இப்படி நாடு முழுவதும் உள்ள மசூதிகளும், சர்ச்சுகளும் குறிவைக்கப்பட்டு, சிக்கல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக, மக்களை வெறியேற்றி வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் மதமோதல்களும், உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும், பேரழிவுகளும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு என்ன தீர்வு?
நாடு விடுதலை அடைந்தபோது என்ன நிலை இருந்ததோ அந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வது ஒன்றே ஒரே தீர்வு. மாறாக மசூதி இருக்கும் இடத்தில் கோயில் இருந்தது, கோயில் இடத்தில் சமணப்பள்ளி இருந்தது என்று நாள்தோறும் சிக்கல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் பெற முயற்சித்தால், நாடு நாசமாகி விடாதா?
யார் சிறுபான்மையினர்?
இந்த மண்ணின் மக்கள் அயல் நாட்டிலிருந்து வந்த ஒரு மதத்தைப் பின்பற்றிய காரணத்தால், அவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்களா? பெரும்பான்மையினர் பின்பற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டதால், அயல் நாட்டிலிருந்து வந்த ஆரிய பார்ப்பனர்கள் பெரும்பான்மையினர் ஆகிவிடுவார்களா? இது ஒரு மோசடி வேலையல்லவா?
இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் மதச்சிறுபான்மையினரே ஒழிய, இனச் சிறுபான்மையினர் அல்ல. அவர்கள் உண்மையிலே இந்த மண்ணின் மக்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது; மறைத்துவிடக் கூடாது!
உண்மைநிலை இப்படி இருக்க, இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்க முயற்சிப்பதும், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், வலிமையையும், மதச் சார்பின்மையையும் தகர்த்துவிடும் என்பதை நாம் அனைவரும் ஆழமாக மனதில் கொள்ள வேண்டும்.
அரசியல் ஆதாயத்திற்கு மதக்கலவரங் களைத் தூண்டலாமா?
இன்று அரசியலில் கோலோச்ச, வாக்குகளை மொத்தமாகப் பெற. மக்களின் உணர்வுகளைத் தூண்ட, மதக்கலவரங்கள் இரகசியமாகத் தூண்டப்படுகின்றன. கோயில்களில் உள்ள சிலைகளைச் சிதைப்பது, கோயில் வளாகத்தைச் சேதப்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதன் மூலம் அதை மதக்கலவரமாக மாற்றுவது போன்ற சதிவேலைகள் மூலம் மதமோதல்கள் உருவாக்கப்படுகின்றன. இது எளிதில் மக்கள் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளை அதிக அளவில் பெற உதவுவதால், அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட செயல் திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் அஜண்டாவாகவே உள்ளன.
சாஸ்திரங்களின் பெயரால் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்களாக்கி, உரிமைகளைப் பறித்து, இழிவுபடுத்துவது சனாதனக் கோட்பாடு என்பதால், அதை எதிர்த்துக் குரல் எழுப்பினால் அது ஹிந்துக்களுக்கு எதிரான செயல் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதும் செயல்முறையில் உள்ளதால், இந்த முயற்சிகளை விழிப் போடிருந்து முறியடிக்க வேண்டும்; மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.
ஜாதிக் கலவரங்கள்: மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட வர்ணப் பிரிவுகள், அதைச் சார்ந்த ஜாதிப் பிரிவுகளை, மக்களிடையே ஜாதி உணர்வை, வெறியைத் தூண்டி, அதனடிப்படையில் ஜாதிக் கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஜாதி உணர்வை இரகசியமாகத் தூண்டும் செயல்களும் நடக்கின்றன. இதன் வழி இளைய தலைமுறைக்கு ஜாதி வெறியும் மதவெறியும் ஊட்டப்படுகின்றன.
சமுதாய மக்கள் ஒற்றுமையாய் இணக்கமாய் வாழ்வதை இந்தச் செயல்பாடுகள் அழித்துக் கெடுக்கின்றன. அரசியலில் ஜாதியும், மதமும் செல்வாக்குச் செலுத்தினால், ஆதிக்கம் செலுத்தினால் அந்த அரசியலும் அதனால் வரும் ஆட்சியும் ஆபத்தானதாக மாறும்!
திராவிட, பொதுவுடைமை அரசியல்
இந்தியாவில் திராவிட இயக்க ஆட்சியும், பொதுவுடைமை இயக்க ஆட்சியும் நடைபெறும் இடங்களில் மதமோதல்களும், ஜாதி மோதல்களும் அதிகம் நடைபெறுவதில்லை. மக்கள் மத இணக்கத்தோடு, அண்ணன் தம்பிகளாய் அமைதியாய் வாழ்கின்றனர். மதவெறி அரசியலை இம்மாநிலங்கள் அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை. அதேபோல் அம்மாநிலங்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், வளர்ச்சியிலும் சிறந்து, உயர்ந்து நிற்பதை நடைமுறையில் காணமுடிகிறது. காரணம், திராவிட இயக்கங்களோ, கம்யூனிச இயக்கங்களோ, அரசியலில் ஜாதி, மதத்தைக் கலப்பதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகளைத் தனிப்பட்ட விருப்பங்களாகக் கருதி ஒதுக்குகின்றன. எனவே, நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஆன்மிகத்தை அரசியலாக்கும் செயலை அறவே தவிர்க்க வேண்டும். மூடநம்பிக்கைகளைக் களையவும், பகுத்தறிவை வளர்க்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, சமத்துவம், சமூகநீதி போன்றவற்றில் மக்கள் பற்றுக் கொள்ளவும், பின்பற்றவும் செய்ய வேண்டியது அனைவரின் கடமை. நமது அரசியல் சாசனமும் இதையே வலியுறுத்துகிறது.n





