குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம். இருக்கமுடியும். ஏனென்றால் அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால் எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர் என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருஷரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.
திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில் தான் ஒத்துக்கொள்ள முடியும்.
அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி, என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள், நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டுமே என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா?
திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்கு ஆகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி, வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் 1,330 பாட்டுகளிலும் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல் காணப்படவேயில்லை.
அதுமட்டுமல்ல; குறளாசிரியர் கடவுளையும், மோட்ச, நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காண முடியுமே தவிர, வீடு, மோட்சம் பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை. அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவு கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு.
திருவள்ளுவர் கடவுளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில் கடவுள் வாழ்த்து என்று ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழ் பாசுரம் அந்தப் பத்துப் பாட்டுகளிலும் கிடையாது. n
23.5.1950 அன்று பெங்களூரு திருவள்ளுவர் கழக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து





