Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைஞரும் சமூக நீதியும் நா.முத்துநிலவன்

அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்குப் புகழஞ்சலி செய்யும்போது, நான் நினைத்துக் கொள்வேன் – வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அனைவருமே நம் நினைவில் இல்லையே! ஏன்? ஒரு சிலர் மட்டும் நம் நினைவிலிருந்து மறைவதில்லையே, எப்படி? அப்படி மறக்கமுடியாத தலைவர்களில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு நிலையான ஓரிடம் உண்டு!

நானும், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவ – மாணவியர் மற்றும் அவரது கட்சிக்கும் அப்பாற் பட்ட பொதுமக்கள் என, அனைவருமே நல்லபடி வாழ, ஏதாவது ஒரு நல்ல சூழலை அமைத்துத் தந்துவிட்டுப் போனவர் கலைஞர்! அவரது சமூகநீதிப் போராட்டத்தை அவர் எடுத்த முயற்சிகளை, இந்தத் தலைமுறை அறிந்து கொள்வது அவசியம்.

‘சமூக நீதி’ என்றால் என்ன?

100மீட்டர் ஓட்டப் போட்டியில் வீரர்கள் அனைவரையும் ஒரு நேர்க் கோட்டில் நிறுத்தி ஓடச் செய்வார்கள். ஆனால், 800, 1,500, 5,000மீ. ஓட்டப் போட்டிகளில் சமமாக ஒரே கோட்டில் நிறுத்தாமல் நீள் வட்டக் கோடுகளில் – அளவிட்டு – தள்ளித் தள்ளி நிறுத்துவார்கள். ஏனெனில், பந்தய வீரர் அனைவரும் சமமான தூரம் ஓட அப்படித்தான்  நிறுத்த வேண்டும். இதுதான் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும்! சமூகத்தின் கால ஓட்டத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பலலட்சம் மக்களைக் கைதூக்கி விடுவதுதான் இட ஒதுக்கீடு, பொத்தாம் பொதுவாக நமது சமூகத்தில் உள்ள அனைவரையும் சமமாக நினைத்துச் செயல்படுவதன் அடுத்த கட்டம் இது! நுண்ணிய பார்வை!

குழந்தைகள், முதியவர், உடற்குறை உள்ளவர்களுக்குத் தரப்படும் முன்னுரிமை போல, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களுக்கும் மற்றவர்க்குச் சமமாக வாழ்வதற்குத் தரப்படும் முன்னுரிமை! இது பல்லாண்டுக் காலம் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை ஈடுகட்டும் முன்னுரிமை! ஆமாம்! இட ஒதுக்கீடு என்பது, கேவலமும் அல்ல! சலுகையும் அல்ல! பறிக்கப்பட்ட உரிமையின் மறுபங்கீடு!

அனைவரும் சமமானவரே எனும் நிலை சமூகத்தில் வரும்வரை இடஒதுக்கீடும் இருக்கத்தான் வேண்டும். இந்த வாய்ப்பை வழங்குவதே சமத்துவ சமூகம் அமைப்பதற்கான சமூக நீதிக் கொள்கை!

நான் கல்லூரிகளில் பேசும்போது மாணவ – மாணவியரிடம் ஒரு கேள்வி கேட்பேன்! “ஏறத்தாழ 1500 மாணவ மாணவியரில் யார்யார், “என் பெற்றோர் இருவரும் பட்டதாரிகள் என்போர்? கை உயர்த்துங்கள்”  அநேகமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளிலும் ஒருசில கைகள்தான் உயரும்! இதில் ஒன்றும் வியப்பில்லை! இந்த 2025ஆம் ஆண்டிலும் இதுதான் நமது சமூகத்தின் கல்வி நிலை! எனில், பல நூறாண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் நிலை எப்படி இருந்திருக்கும்?

இன்று, ஒரு வேளை, பெற்றோர் இருவரில் ஒருவர் பட்டதாரியாக இருக்கலாம். பெற்றோர் இருவருமே பட்டதாரிகள் என்பதே கல்வியை உடைய சமுதாயம்! அந்த நிலை வருவதற்கே நாம் பாடுபட வேண்டும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்புடைத்து

என்னும் குறளுக்கு – பரிமேலழகர் உள்ளிட்ட – பலரும் சொன்ன உரை என்ன? ‘ஒரு பிறவியில் படித்தால் அந்தக் கல்வி, ஏழு பிறவிக்கும் உதவியாக இருக்கும்’ என்பது தான்.  கலைஞர் தான், ‘ஒரு தலைமுறையில் ஒருவர் பெறும் கல்வி, ஏழு தலைமுறைக்குப் பாதுகாப்பாகும்” என்கிறார்! (குறள்-398–கலைஞர் உரை) இதுதானே சரியான உரை? கல்விக்கான உண்மைத் தேவை அறிந்து, கற்க வேண்டியதை உணர்த்தி, படிப்போரை உந்தித் தள்ளும் உரை!

சாதி ஒழித்திடல் ஒன்று

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும், இதர பல முற்போக்காளரும் தொடர்ந்து போராடித்தான் இன்றைய வளர்ச்சி வந்தது. கலைஞர், இந்தப் போராட்ட நோக்கத்தை உள்வாங்கி, அதைச் செயற்படுத்தத் திட்டமிட்டு, சட்டமிட்டார்! அதுதான் கலைஞரின் வெற்றி.

இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர் செயற்படுத்திய திட்டங்கள் பலபல, பற்பல! அதை மட்டுமே ஒரு பெரிய பட்டியல் போடலாம். தமிழ்நாட்டில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கலைஞர் தந்தது. அதற்குள் தேவையான உள் ஒதுக்கீடுகள் தந்ததும் கலைஞர்தானே?! இதில் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பங்கு முக்கியத்துவமானது.

“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல – தமிழ் வளர்த்தல் மற்றொன்று” என்று, பாரதி தன்னிடம் சொன்னதாகப் பாரதிதாசன் சொல்வார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற, ஒவ்வொரு கட்டமாக, பள்ளிக் கல்வி படிக்கும் அனைவருக்கும் உரிய உதவித் தொகை தந்து, படிப்பைத் தூண்டிக் கொண்டே இருந்தார் கலைஞர். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதிருந்த புகுமுக வகுப்பு (பியூசி) வரை இலவசக் கல்வி தந்தவர் அவரே! பின்னர்  மாணவர்க்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கினார். கிராமப்புற மாணவர்க்கு உயர்கல்வியில் 5விழுக்காடு வழங்கினார்!

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலனுக்குத் தனி வாரியம் அமைத்தவர் அவரே! நூற்றாண்டுகளாகச் “ஜாதிவாரித் தெரு” இருந்த தமிழ்நாட்டில், ஏற்றத்தாழ்வை அகற்ற பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் அமைத்தார். நாடெங்கும் உழவர் சந்தைகளை உருவாக்கினார்.

வர்ணம் வேறு, சாதி வேறு:

வர்ணமாவது, பிராமணர், சத்திரியர், வைசியர், மற்றும் சூத்திரர் என நான்கு வகைப் படுத்தி ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்ட்டம்’ என கீதையும் மநுவும் சொல்கின்றன! ஆனால், இந்த நால்வர்ணங்களின் கலப்பில் வந்தவையே ஜாதிகள். இதை கீதை மநு இரண்டுமே ஏற்கவில்லை!  இதை அவை ‘அவர்ணர்’ என்கிறது! இதில் ‘ஜாதிக்கலப்பு’ என்று பொருள் வருவதாலேயே மநுவும் கீதையும் இதை ஒப்புக்கொள்ளவில்லை! இது பற்றி அய்யா கி.வீரமணி அவர்களின் ‘கீதையின் மறுபக்கம்’ நூல் மிக முக்கியமான, இன்றைய இளைஞர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்’.

இந்த ஜாதிய வேறுபாடுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்துள்ளன. கல்விக்கான போராட்டம் என்பது ஒரு வகையில் ஜாதி ஒழிப்புப் போராட்டம்தான்! சங்க இலக்கியத்தில், (புறநானூறு–183) ‘வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் மன்னனே  கல்வியின் சிறப்பைச் சொல்கிறான்! அதாவது கல்வியால் சமூக ஏற்றத் தாழ்வை மாற்றலாம் என்கிறான்.

அதனாலேயே – பிறப்பால் வேறுபாட்டை நிலைப்படுத்த – உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது! இரண்டு நூறாண்டுக்கு முன்னர் வந்த மெக்காலே (1800-1859) கல்வி முறைதான் எல்லாரையும் சமமாக ஓரிடத்தில் உட்கார வைத்தது! (அது மனப்பாடக் கல்வியாக இருந்ததால், தமது வேதக்கல்வியை மனப்பாடம் செய்து பழகிய பார்ப்பனர்கள் இதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த உதவினர்) அதையும் மீறிப் படித்த உழைக்கும் மக்களைப் படிக்க விடாமல் செய்ய இப்போது ‘நீட்’ மற்றும் ‘தேசியக் கல்விக் கொள்கை’யை நுழைக்கின்ற அடாத செயல் விடாது தொடர்கிறது! நாமும் விடாமல் போராடிவருகிறோம்

பெண்கல்வி

சங்க இலக்கியக் காலத்தில், ‘ஆணைவிடத் தான் குறைந்தவள் தான்’ எனப் பெண்ணே கருதிக் கொள்ளும் கருத்து (குறுந்தொகை-135) இருந்தது! இதுவும் மநுவும் கீதையும் சொன்ன ‘தத்துவம்தான்’ என்பது பலரும் அறியாதது! இதை மாற்றும் வழி, கல்வி ஒன்றுதானே?

வெகுநாட்களாகத் தந்தை பெரியார் முன்வைத்த, ‘பெண்களுக்கும் சொத்துரிமை’  என்பதை 1989இல் சட்டமாக்கினார் கலைஞர். பெண் கல்விக்குப் பள்ளியில் மட்டுமின்றிப் படிப்படியாக உயர்கல்விக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் வேறு மாநிலங்களில் இல்லாதவை! இணையத் தமிழ் மாநாடுகள் நடத்தியும் ‘டைடல் பார்க்’ அமைத்தும் கல்வி, தொழில் நுட்பத்தோடு வளரச்செய்தது கலைஞரின் நுண்ணறிவு!

தமிழில் வழிபாடு – சமூக நீதியின் ஒரு பகுதியே!

‘வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்சு நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேம் … திருவாசகம் இங்கு ஒருகால் ஓதில்.. அன்பர் ஆகுநர் அன்றி, மன்பதை உலகில் மற்றையர் இலரே” என்பார் சிவப்பிரகாசர். பக்தி இலக்கியம் நிறைந்த தமிழில், கோவில்களில் தமிழில் வழிபட அனுமதியில்லாத நிலையில், கோவிலில் தமிழில் வழிபாடு நடத்தவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவும் வழிசெய்தவர் கலைஞர்!

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, நமது தமிழுக்குச் ‘செம்மொழி’ எனும் தகுதியைப் பெற்றுத் தந்ததும் அவரே! இதை வலியுறுத்தி, டில்லிக்குச் சென்று போராடிய த.மு.எ.க.ச. தோழர்களில் ஒருவன் என்பதைப் பெருமையோடு நினைவு கூர்கிறேன்!

‘நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர்’.

வேளாண்மையை ஊக்குவிக்க, இந்தியாவிலேயே முதன்முதலாக வேளாண்மைக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞரே!

தமிழ்வழியில் படித்தோர்க்கு அரசுப் பணிகளில் 20விழுக்காடு தர 2010-கோவை செம்மொழி மாநாட்டின்போது ஆணையிட்டவர் கலைஞர்

அனைவர்க்கும் ஆரம்பக்கல்வி தந்தவர் அய்யா காமராசர் எனில், அனைவர்க்கும் உயர்கல்வி தர முன்னின்றவர் கலைஞர்! சிறுதொழில் வளர்ச்சிக்கு சிப்காட் தந்தவர், பேருந்துகளை அரசுடைமை ஆக்கியவர், குடிசை மாற்று வாரியம் தந்தவர், இலவசக் கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, பெண்களுக்கு அரசுப் பணியில் 33விழுக்காடு இட ஒதுக்கீடு, பற்பல வட இந்திய மாநிலங்களில் இன்றும் கூட ஒழிக்கப்படாத – மனிதரை வைத்து மனிதரே இழுக்கும் – “கை ரிக்ஷா” வை ஒழித்து, அவர்களுக்கு “சைக்கிள் ரிக்ஷா” வழங்கியவர்,  என அவரது சமூகநீதிப் பணிகளால் இன்றைய தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

கலைஞர் அவர்களின் வழித்தோன்றலாம் இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிஎன்பது போல, பெண்களுக்கு விடியல் பேருந்து, மாணவர்க்கு நான் முதல்வன், மாணவியர்க்கு புதுமைப் பெண், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டி, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவ – மாணவியர்க்கும் மாதம் 1000ரூபாய் போலும் சமூகநீதித் திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டே இருக்கிறார். இவற்றை இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவும் நம்முடைய முதலமைச்சரை அடுத்து, நடைமுறைப்படுத்தி வருவதே இதன் சிறப்பு!

அவர் விதை என்றால் இவர் விளைச்சல்! எனவே இப்போது, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு அல்ல, வளர்ந்த நாடுகளோடு தான் ஒப்பிடமுடியும் எனும் நிலை எழுந்துள்ளது. (இதை பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனே சொல்லியிருப்பதுதான் தவிர்க்க இயலாத சிறப்பு!) எனவே ‘நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர்’ என்பது மிகையல்ல!

இதை இன்றைய இளைய தலைமுறை அறிந்து, பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பு.

 07-08-2025 – மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய சிறப்புரையின் எழுத்தாக்கம்.

               கட்டுரை ஆசிரியர் – புதுக்கோட்டை, பணிநிறைவு பெற்ற அரசுப்பள்ளித் தமிழாசிரியர்,                           வலைப்பக்கம் – https://valarumkavithai.blogspot.com/  –  செல்பேசி – 94431 93293.