Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதவெறியை வீழ்த்துவோம்! முனைவர் கடவூர் மணிமாறன்

“எம்மதமும் சம்மதமே!” என்றார்நம் ஆன்றோர்கள்!

நம்முடைய பண்பாட்டை நானிலமே போற்றுகிற

பன்னரிய மாண்பினைப் பாழ்படுத்தித் துண்டாக்கி

இன்னல் இழைக்கவே இந்நாள் மதவெறியை

அங்கிங் கெனாதபடி எங்கும் தூண்டியிங்கே

வெங்கொடுமை தன்னால் விளையாடும் ஒன்றியத்தார்

ஆகாக்கொடு நஞ்சை அரசியலில் தாம்கலந்தே

வேகாத சோற்றை விருந்தென்றே ஏய்க்கின்றார்!

அன்பை மறந்தோர் அறிவை இழந்தோராய்த்

துன்பம் விளைக்கத் துணைக்கழைப்பார் வெம்மதத்தை!

ஆள்வோர் கொடுஞ்செயலால் இந்நாட்டின் ஒற்றுமையே

கேள்விக் குறியாகிக் கேடுகட்கே ஆளாகி

வேண்டாத தீங்கோ விளைவதனைக் காண்கின்றோம்!

மாண்பை அறியார் மடமைப் புதைசேற்றுள்

மூழ்கித் திளைத்துமே மூடஇருள் போர்த்தியுளார்!

பாழ்ச்செயல் செய்தே பழிவாங்கும் காவியரோ

ஊறும் பகுத்தறிவை உள்ளத்தில் ஏற்காமல்

நாறும் பழங்கருத்தை நாட்டில் நிறுத்துகிறார்!

இல்லாக் கடவுளை ஏற்பில்லாத் தொன்மத்தின்

பொல்லாப் புளுகைப் பொழுதெல்லாம் மக்களுமே

நம்பிடவே செய்கின்றார்! நஞ்சை அமிழ்தென்பார்!

செம்மொழியாம் செந்தமிழைச் சீர்சால் தமிழினத்தை

வீழ்த்தத் துடிக்கின்றார்! வீணே நடிக்கின்றார்!

தாழ்த்தியும் ஏய்த்தும் தகுதிக்(கு) உலைவைக்க

நன்மை மறுப்பார்! நடுநிலை எண்ணாமல்

புன்மை நெறிகளை, பொய்புரட்டை நாணாமல்

வெம்பிடவே சாதிமத வேற்றுமையைக் கட்டமைப்பார்!

நம்மோர் உயர்வுக்கே நாளும் குழிபறிப்பார்!

வள்ளலார் அந்நாளில் வாழ்வியல் சீர்திருத்தம்

கொள்ளும் உணர்வால் கொடிய மதப்பேயை

நாட்டோரும் நம்பா திருக்கவே நன்னயமாய்க்

காட்சிப் படுத்தினார் கற்கண்டுச் சொற்கொண்டு!

அய்யா பெரியார் அறிவார்ந்த நல்உழைப்பால்

மெய்யாய் மதவெறியும் வீழவே போரிட்டார்!

வெற்று முழக்கமிடும் வீணர் மதவெறியை

முற்றாகச் சாய்ப்போம் முனைந்து! n