[தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க இலக்குகளில் முதன்மையான சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
மாண்புமிகு திரு. சி.என். அண்ணாதுரை:
சட்டமன்றத் தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானத்திற்குச் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டுமென்று திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இந்த மசோதா, இதே மன்றத்தில் இரண்டு துறைகளுக்குமேல் கருத்துச் சொல்லப்பட்ட ஒரு பிரச்சினையாகும். முன்னாலே, என்னுடைய நினைவு சரியான நினைவாக இருக்குமேயானால், குட்டி கிருஷ்ணன் நாயர் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கென முயற்சியெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1957இல் ஒரு முறை முயற்சி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1965லேயும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுதும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினைகள் மூன்று, நான்கு முறைகள் வந்த நேரத்தில் இதைப்பற்றிக் கருத்து தெரிந்தவர்கள் படிப்படியாக எப்படி மாறி வந்திருக்கிறார்கள் என்பதை அந்த விவாதங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும். முதன்முதலில் இப்படிப்பட்ட திருத்தம் வந்தபோது பதறியவர்கள் பலர் இப்பொழுது பதறுகின்றவர்கள் ஒருவருமில்லை. இரண்டாவது முறை இந்தப் பிரச்சினை வந்த நேரத்தில் பதறுகின்றவர்கள் குறைவாக இருந்தாலும் சில பேர்களிடம் பயம் இருந்தது. இப்பொழுது அப்படிப்பட்ட பயம் கூட இல்லை. இப்பொழுது இருக்கும் பிரச்சினையெல்லாம், நம்முடைய டாக்டர் ஹாண்டே அவர்கள், திரும்பத் திரும்ப உங்களுக்கு இந்துதானா கிடைத்தான். அவன் தலையிலேயே குட்டுகிறீர்களே என்கிறார். முஸ்லிம்களைத் திருத்த வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் முயற்சி எடுத்துக் கொள்வார்கள். அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்; இந்து சமுதாயத்தை மாத்திரம் பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வருகிறது என்றால், மற்ற எல்லா மார்க்கங்களையும்விட இந்து மார்க்கத்தில் தத்துவத்தைப் பொறுத்தவரையில் இதில் விடப்பட்டது ஒன்றுமில்லை. எல்லாத் தத்துவமும் இதனிடம் உள்ளன என்றும் இதற்கு இந்து மதத்தில் அழிவற்ற தன்மைதான் காரணம் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அதன் நிர்ணயமற்ற தன்மைதான் காரணம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இதில் எது உண்மையாக இருந்தாலும், இந்து மதம் என்று சொல்வதாலே டாக்டர் ஹாண்டே அவர்கள் அது இந்துவுக்குத்தானே உள்ளது. மற்றவர்களுக்கு இல்லையா என்றெல்லாம் எண்ணத்தேவையில்லை. உண்மையான இந்து, திருத்தத்திற்குப் பயப்படக்கூடாதென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாக நினைவு. உண்மையான இந்து காலத்தின் கருத்துகளுடைய பகுதிகளைக் கொள்ள வேண்டுமென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாக நினைவு. உண்மையான இந்து ஜாதியை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று இந்து மதத்தைச் சார்ந்தவர்களே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், தலைப்பைப் பார்த்து இது இந்துவுக்குத்தானா என்று கவலை கொள்ளத் தேவையில்லை.
டாக்டர் ஹாண்டே அவர்கள் சிறந்த நண்பர். முதன் முதலில் அவர் பெயரைச் சொன்னதும் அது இந்துப் பெயர் என்றுகூட எனக்கு நினைவுக்கு வரவில்லை. நண்பர்கள் என்னிடம் டாக்டர் ஹாண்டே என்று இருக்கிறார். நல்ல திறமையாக அரசியல் கருத்துகளைப் பேசுவார்கள் என்று சொன்னபொழுது அவர் ஓர் இந்துவாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அந்தப் பெயர் அப்படி இருந்தது. ஆனால், அவர் எனக்கு அறிமுகமான பிறகுதான் அவர்கள் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைவே வந்தது. முதன் முதலில் அது ஆங்கிலோ-இந்தியரின் பெயர் என்றுதான் நினைத்தேன் கன்னட மொழியிலே என்ன பொருளோ எனக்குத் தெரியாது.
திரு. கே. விநாயகம்: வெங்கட்ரமணா
ஹாண்டே என்பது பெயர்
ஹாண்டே என்பது ஜாதியின் பெயர்.
மாண்புமிகு திரு. சி.என். ‘அண்ணாதுரை’:
வெங்கட்ரமணா ஹாண்டே என்று முதலிலேயே சொல்லியிருந்தால் எனக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்காது. டாக்டர் ஹாண்டே அவர்கள் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்த பிறகு ‘டாக்டர் ஹாண்டே’ என்று தெரிவித்து அதன் பிறகு அவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். அதனால் வந்திருக்கலாம். இப்படித் தனிப்பட்ட மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வதைவிட நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டியது. கடந்த 30 ஆண்டு காலமாக 35 ஆண்டு காலமாகத் திருமண முறையிலே ஒரு மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. பெருத்த எதிர்ப்புக்கிடையில், பல்வேறு அய்யப்பாடுகளுக்கிடையில், மக்கள் அச்சத்திற்கு மத்தியில் இது துவக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் இந்த முறையிலே நடைபெற்று அந்தத் திருமணங்களைச் செய்து கொண்டவர்கள் அடுத்த தலைமுறையைப் பெற்றுத் தரத்தக்க அளவிற்கு இந்தத் திருமண முறையில் வயது ஏறியிருக்கிறது.

பொது மக்கள் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை மேற்கொண்டவர்களானால் அந்தப் பழக்கவழக்கங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்பதுதான் சட்டம் என்று ஏற்படுத்தப்படும்.
CUSTOM BY USAGE BECOMES LAW, CUSTOM BY USAGE GETS LEGAL SANCTION.
அந்த மாதிரி 30, 40 வருஷங்களாகத் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய முறைக்கு இப்பொழுது நாம் ஒரு சட்ட வடிவம் கொடுக்கிறமே தவிர, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அனைவரும் சுயமரியாதைத் திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம் அல்ல இது. வழக்கறிஞர் மொழியிலே சொன்னால் IT IS PERMISSIVE LEGISLATION.
இப்படியும் செய்து கொள்ளலாம். இந்தத் திருமணம் சட்டபடி செல்லத்தக்கது. தமிழகத்திலே திருமணம் நடத்துவது என்றால் இப்படித்தான் செய்யவேண்டுமென்று மற்றவர்களைக் கட்டுப்படுத்துகின்ற, மற்ற திருமண முறைகளைத் தடுக்கின்ற சடடம் அல்ல. இது மற்றவர்களைத் தடுக்கிற, கட்டுப்படுத்துகின்ற சட்டமாக இருந்தால் பொது ஜன அபிப்பிராயத்தைக் கட்டாயம் அறிய வேண்டும் மற்ற முறைகளைக் கட்டுப்படுத்தாத, மற்ற முறைகளைத் தடுக்காத இந்த முறையை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டவர்கள், இந்த முறையின்படி செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் ஆகிய இவர்களுக்கு அனுமதி தருகிற சட்டமாக இருப்பதானாலும், இதற்கு நம்முடைய நண்பர் பொன்னப்ப நாடார் போன்ற அறிவுடையோர்களுக்குச் சொன்னாலும் போதுமென்று நம்புகிறேன். அவர்களுக்குத் தட்டுப்படாத சில கருத்துகளை உலகத்திலே தேடிதேடிப் பார்க்கப் போகிறோம் என்ற காரணத்தினால் சொன்னார் என்றுதான் நான் எண்ணிக் கொள்கிறேனே தவிர, அவசியத்தின் காரணமாகச் சொன்னார் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், திருமணத்தைப் பற்றியும் அவருக்குத் தெரியும். அவருடைய பருவத்தில் திருமணச் சுவையின் பகுதியே அதிகம். இப்பருவத்திலேயே இருக்கிறார்.
THIRU R. PONNAPPA NADAR: I AM THE FATHER OF SIX CHILDREN.
மாண்புமிகு திரு சி.என். அண்ணாதுரை: நம்முடைய பொன்னப்ப நாடார் அவர்கள் ஆதரிக்கிறார்கள். அந்தச் சுவையை அவ்வளவு அனுபவித்திருக்கிறார்கள் சட்ட நுணுக்கமும் தெரிந்திருக்கிறார்கள். ஆகையினால் அவரைப் போன்றவர்கள் இதற்கென உள்ள பொறுக்குக் கமிட்டியிலேயிருந்து நல்ல பல கருத்துகளைக் கொடுத்து, இந்தச் சட்டம் தேவையுள்ள சட்டம் என்பது மட்டுமல்லாமல், இது நல்ல நிலையிலுள்ள சட்டம் என்று சமுதாயம் சொல்லுகின்ற அளவுக்கு ஆக்கித் தருவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. உரிமைகள் இருக்கின்றன; திறமையும் இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய நண்பர்களைப் பொறுத்தவரையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் இந்த அவையிலேயுள்ள மற்றவர்கள் எனக்கு அனுமதி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதை நாங்கள் மிகச் சாதாரண சீர்திருத்தம் என்று கருதவில்லை. எத்தனையோ ஆண்டுகளாக எங்கள் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருந்து, எததனையோ இரவுகள், எத்தனையோ பகல்கள் இப்படி ஒரு சட்டத்தை உருவாக்க முடியுமா, முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்த எங்கள் எண்ணத்திற்கு மதிப்பு அளிப்பீர்களேயானால், இப்படியெல்லாம் நிறைவேற்றப்பட முடியும் என்ற நிலைமை தோன்றாத நாட்களில், இந்தவிதமான திருமண முறையில் பல்லாயிரக்கணக்காகத் திருமணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தச் செய்தி பாரதியாருடைய கவிதைப்படி கூறினால், அவர்களுடைய காதில் “செந்தேனாக”ப் பாயும் இதில் கஞ்சத்தனம் வேண்டாம் அவர்கள் இன்பத்தில் குறுக்கிடத் தேவையில்லை. இதற்குப் பின்னால் திருத்தங்கள் வரலாம் மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் போட்டுக் கொள்வது. இவை போன்றவைகளைப் பற்றி வரலாம். அவற்றை விட்டுவிடலாம். ஆனால், பழைய திருமண முறையை மாற்றி, இப்போதுள்ள புதிய முறையிலே திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள். மன்ற நிலையை நிச்சயமாகக் கவனித்து, அவர்களுக்கு ஒரு சட்டப் பாதுகாப்புத் தரவேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. நம்முடைய நண்பர் திரு. பொன்னப்ப நாடார் என்று கருதுகிறேன் அக்கினி சாட்சியாக இருந்தால் தான் திருமணம் செல்லும் என்று வழக்கு மன்றத்திலே சொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். சயமரியாதை திருமணங்களிலே பேசிப் பேசி, அந்தக் கருத்துகளெல்லாம் என்னுடைய நினைவுக்கு வருகின்றன. விரிவாகப் பேச நேரம் இல்லை. கடிகாரம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆகையால், அக்கினி சாட்சியாக என்று சொல்வதில், இந்த நாட்களிலே எவ்வளவு பொருள் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. திருமணத்திற்கே சாட்சி தரத்தக்க அக்கினி பகவான் ஏழைகளை என்ன பாடு படுத்துகிறான், மயிலைப் பகுதியில் என்பதை எண்ணுவது உண்டு. இந்த நேரத்தில் அக்கினி பகவானுக்கு இருக்கிற பெருமையைக்கூடக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால், அவைகளையெல்லாம் நம்பிக்கை வைத்திருந்த காலத்திலே இருந்து வந்த கருத்துகளுக்கும் இருக்கின்ற கருத்துக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
அக்கினி தேவனைப்பற்றிப் பேசிய நம்முடைய நண்பர் திரு.பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்ன அந்தக் கருத்தின் அடிப்படையில், சந்திரனும் ஒரு தேவன் என்று இன்றைய தினம் அவர்கள் அதைச் சொல்லுவார்கள் என்று கருதவில்லை. எப்பொழுது சந்திரமண்டலத்திற்குப் போகலாம் என்று சோவியத் நாட்டு விஞ்ஞானிகளும், அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளம் போட்டி நடத்திக் கொண்டிருக்கிற இந்த நாட்களில், சந்திரன் ஒரு தேவன் என்றும், அவன் ரிஷியிடத்தில் பாடம் கேட்கப் போனான் என்றும், அவனாக வேறு பாடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றும், “நீ தேய்ந்து தேய்ந்து வளரக் கடவாய்” என்று சொன்னவுடன், அதிலிருந்து பவுர்ணமி, அமாவாசை மாறி மாறி வருவதாகவும் சொல்வது ஒரு காலத்திலே எல்லோரும் ஒப்புக் கொண்ட கதை. இன்றைய தினம் எல்லோரும் வேடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிற கதை. இன்னும் எதிர்காலத்தில் புத்தகத்திலேகூட இருக்கத் தகாத கதை என்று தள்ளிவிடப்படக்கூடும். இப்படி வளர்ந்து இருக்கிற இந்த நாட்களில் அக்கினி சாட்சியாக வைத்த திருமணம்தான் செல்லும் என்று சட்டம் இருக்குமானால், எங்களுக்கு அது பிடிக்கவில்லை. நாங்கள் இந்த முறையிலே திருமணம் செய்து கொள்ளுகிறோம் என்று சமூகத்திலே ஒரு பகுதியினர் ஒரு விதத்திலே திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு அனுமதி தருவதற்காக ஒரு சட்டமே தவிர, இது வேறு பல சர்வாதிகார நாடுகளில் வரும் சட்டத்தைப்போல 6ஆம் தேதியிலிருந்து நீங்கள் இன்ன மாதிரி நடக்க வேண்டும்’ என்று சமூகத்திற்குக் கட்டளையிடுகிற சட்டம் அல்ல இது. அல்லது உணவு நெருக்கடியை உத்தேசித்து ஆளுக்கு இவ்வளவுதான் கொடுக்கப்படும் என்று சொல்லுகிற சட்டமும் அல்ல. யாரும் எந்தவிதத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு கருத்திருமன் அவர்கள் சொன்னார்கள். “மணவறையில் நான் இரண்டே நிமிஷம்தான் இருப்பேன்” என்று வாலிபப் பருவத்தினர் பெரும்பாலும் மணவறையில் அதிக நேரம் இருப்பதில்லை. சீக்கிரம் முடித்துக் கொண்டு வெளியே போய், நண்பர்களைப் பார்த்து, ‘எப்படி? பார்த்தாயா? சரியாக இருக்கிறதா? அதிகம் பார்க்க முடியவில்லை?” என்றெல்லாம் பேசுவதிலே மணமக்களுக்கு இன்பம் இருக்கிறது. அந்த மண மேடையிலே ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதெல்லாம் – நம்முடைய நண்பர் திரு ம.பொ.சி. அவர்களோ அவரையொட்டி நானோ செய்து கொள்ளக்கூடிய அறுபதாம் திருமணத்திலேதான் அதிக நேரம் மணவறையில் உட்கார்ந்திருக்க முடியும் (சிரிப்பு!). ஆகையால், இந்தத் திருமணச் சட்டத்தைத் திருத்தியமைப்பதிலே இந்தப் பொறுக்குக் கமிட்டியே போதுமானது என்று தான் கருதுகிறேன். நம்முடைய நண்பர் திரு. பொன்னப்ப நாடார் அவர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் இதைப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்பி, அதற்குப் பிறகுதான் முடிவு கட்டவேண்டும் என்று கருத வேண்டாம். ஏனென்றால், இப்படிப்பட்ட திருத்தங்களையெல்லாம் செய்வதற்குத்தான் பொதுமக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ஆகையால், பொதுமக்களுடைய அபிப்பிராயம் என்று அவர்கள் அளித்திருக்கிற அந்த ஆணையை நாம் மாற்றாமல் மதிக்கத் தவறாமல் நம்முடைய நண்பர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் கொடுத்த திருத்தத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்தப் பொறுக்குக் கமிட்டியின் மூலம் நல்ல பல கருத்துகளைக் கொடுத்து, நாங்கள் முப்பது ஆண்டுகள், நாற்பது ஆண்டுகள் எண்ணிக்கொண்டிருந்த ஒரு எண்ணத்திற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் திருமண முறைகளைப்பற்றிப் பல பேர்கள் கருத்துகள் தெரிவித்தார்கள். நண்பர் திரு. அரங்கண்ணல் அவர்கள், இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட திருமண முறை என்று சொன்னார்கள். சென்ற வாரத்தில் அகில இந்தியத் தலைவர் திரு. காமராஜர் விருதுநகருக்குச் சென்று அங்கு நடந்த திருமணம்கூட பழைய வைதிக முறையையொட்டி நடந்த திருமணமாக இருந்திருக்க முடியாது. எனக்குத் தெரிந்த வரையில் விருதுநகர் பக்கத்தில், சாத்தூர் பக்கத்தில், சிவகாசிப் பக்கத்தில் அந்தக் குலத்தின் பெரியவரை அழைத்துக் கொண்டு வந்து, அந்தத் திருமணத்தை நடத்திக் கொள்ளுவதை முப்பதாண்டுகளாக அவர்கள் பழக்கத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள். நம்முடைய திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், அந்தக் குமரி மாவட்டம் இருந்த கேரள இராச்சியத்திலேயே வைதிகத் திருமண முறையிலிருந்து மாறி, முண்டு மாற்றிக் கொள்ளுவது என்று பெரியவாகள் நடத்தி வைக்கின்ற திருமணங்கள் அவருக்குப் பழக்கமானது. வங்காளத்தில் பிரம்ம சமாஜக்காரர்கள் பாஞ்சாலத்திலே அப்படிப்பட்ட மாறுதலை உண்டாக்கினார்கள். தமிழகத்திலே சுயமரியாதை இயக்கக்காரர்களும், தமிழ்ப் பெரும்புலவர்கள் மறைத்த மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார் போன்றவர்கள், இலக்கியச் சான்றுகள் அளித்து ‘இது தேவை’ தீது பயக்காதது. காலத்திற்கு ஒத்தது. தமிழ்ப் பண்பாட்டோடு இணைந்தது என்றெல்லாம் ஒப்பம் அளித்திருக்கிறார்கள். நம்முடைய தமிழரசுக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய திரு ம.பொ.சி அவர்களுடைய இயக்கமும் இதை ஆதரிக்கிறது. இஸ்லாமியரை எடுத்துக் கொண்டாலும்கூட இஸ்லாமியத் திருமணத்திலேகூட அவர்கள் அந்த மணப்பெண்ணும், மணப்பிள்ளையும் உட்கார்ந்த பிறகு கூட, திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று மணப்பெண்ணைக் கேட்கும் பழக்கத்தைக்கூட அவர்கள் கையாண்டு வருகிறார்கள்.
ஆகையால், இந்தத் திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான அருவருக்கத்தக்க நிலைமையோ அச்சப்படத்தக்க தன்மையோ இல்லை. பொது மக்களிடத்தில் மறுபடியும் இதை அபிப்பிராயத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியில் சொல்லுகிறார்கள். எந்தச் சட்டம் வந்தாலும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அப்படிப்பட்ட திருத்தத்தைக் கொடுக்க வேண்டியது தான் பாராளுமன்ற முறை. அதே பாராளுமன்ற முறை நாங்கள் கேட்டுக் கொள்ளுகிற நேரத்தில், தேவையானது என்றால், அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுவதுதான் சிறந்த பாராளுமன்ற முறையும் ஆகும். ஆகவே, பாராளுமன்ற முறையை நன்கு அறிந்திருக்கும் நம்முடைய நண்பர் திரு.பொன்னப்ப நாடார் அவர்கள், அவர்கள் கொடுத்த திருத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்தச் சட்டம் நல்லவிதத்தில் அமைவதற்குப் பொறுக்குக் கமிட்டியோடு ஒத்துழைத்து உருப்படியான ஒரு சட்டத்தைத் தமிழகத்திற்குத் தந்தோம் என்ற பெருமையில் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, என்னுடைய வார்த்தையை முடிக்கின்றேன்.
THIRU R. PONNAPPA NADAR : IN VIEW OF THE ASSURANCE GIVEN BY THE HON. CHIEF MINISTER, I AM NOT PRESSING MY AMENDMENT.
திரு. கே. விநாயகம்: கனம் முதல் அமைச்சர் அவர்களிடமிருந்து மேலும் ஒரு விளக்கம் பெற விரும்புகிறேன். முதலமைச்சர் பேசியதற்குப் பிறகு இதிலே சந்தேகத்திற்கு இடமில்லை என்று எனக்குப் புரிகிறது ஆயினும், இந்தக் கொள்கையைப் பரப்புகிற தலைவர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.
எல்லாக் கட்சிகளிலும், அவர்கள் குடும்பங்களிலேயே திருமணங்கள் வரும்போது, அவர்கள் இந்தக் கொள்கையை அனுசரிப்பதாக இல்லையே! எனக்குக் கிடைத்த தகவல் அப்படி அதைப்பற்றிக் கனம் முதலமைச்சர் என்ன சொல்லப் போகிறார்?
மாண்புமிகு திரு. சி.என். அண்ணாதுரை: தொடர்ந்து நம்முடைய நண்பர் திரு.விநாயகத்திற்குத் தப்புத் தகவலையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (சிரிப்பு). அதுமட்டுமல்ல, இது திருமணத்தைப் பற்றிய விவகாரம். விநாயகத்திற்குத் திருமணம் ஆனதாகக் கதையிலே அப்படி இல்லை. n





