Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதச் சுதந்திர உரிமை – ஒரு விளக்கம்

‘‘மத சுதந்திர உரிமை’’ என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் (Article) 25, 26 ஆகிய பிரிவுகளில் இருக்கிறது. ஆனால், அது, லகான் இல்லாத குதிரையா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். மத சுதந்திர உரிமை அவர்கள் எப்படி கொடுத்து, எதைச் சொல்லுகிறார்கள்? தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மதச் சுதந்திர உரிமை உண்டு. ஆனால், அந்த மதச் சுதந்திர உரிமை என்பதில் மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி.

Right to Freedom of Religion  (Indian

Constituion 25)

மதச் சுதந்திர உரிமை என்பது Not an absolute Right. வரம்பில்லாமல், அதை  யாருமே கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை இல்லை! நான் நினைத்தால், அதுதான் நடக்கும்; நான் உத்தரவு போட்டால் அதுதான் நடக்கவேண்டும். நான் செய்ய வேண்டும், என்னுடைய மதம், நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். 87 சதவிகிதமாக இருக்கிறோம் என்று சொல்லும் நிலை உண்டா? நீங்களெல்லாம் சிறுபான்மையாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், மதம் உள்ளவர்களுக்கு எப்படி உள்ளதோ, அதுதான் மிகவும் முக்கியம். அந்த உரிமைக்குக் கட்டுப்பாடு உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதை நன்றாக கவனிக்க வேண்டும்.

Subject to Public Order, health, and morality and to the other provisions of this Part  என்றுதான் தொடங்குகின்றது.

பொது அமைதி, சுகாதாரம், இவை அத்தனைக்கும் இது கட்டுப்பட்டதுதான். இதற்கு என்ன அர்த்தம்?  கலவரம் வரும் என்றால், ஓர் அரசாங்கம் பொது அமைதியைக் காக்க வேண்டும். ஒரு நெரிசல் ஏற்பட்டு எல்லாரும் இறந்துவிட்டால், யார்மீது குற்றம் சொல்கிறீர்கள், முதலில்?

அரசாங்கத்தைத்தான் சொல்வார்கள். அது கும்பமேளாவில் நடந்தாலும் சரி, அல்லது திருவிழாவில் நடந்தாலும் சரி, கிரிக்கெட் வீரர்களுக்கான பாராட்டு விழாவாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சினிமா நடிகர், இப்போது  எல்லா இடங்களிலும் வெளியில் இருந்து ‘தரிசனம்’ கொடுக்கிறார்களே! அவர் மூடிய வாகனத்தில் சென்றிருந்தபோது, கரூரில் பேசியபோது, எத்தனை பேர்  இறந்து போனார்கள்?

அன்றைக்கு நடந்த உயிரிழப்புகளுக்கு அரசாங்கம்தானே பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள். எப்படியாவது இந்த அரசாங்கத்துக்கு ஓர் இழிவை, ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும்  என்று அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

பொது அமைதி என்பது அதுதான். சட்டம், ஒழுங்கு, அமைதி என்பது முழுக்க முழுக்க யாரைச் சார்ந்தது? அரசைச் சார்ந்தது.  இங்கே  அய்யா சொன்னார் பாருங்கள், ‘‘இந்த விளக்கை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள்;  நீங்கள் அவர்களைக் கூட்டிட்டுப் போங்க; 10 பேர் போனால்,  நீங்களே கையில் எடுத்துக் கொள்ளலாம்; நீங்கள் தனியாவும் போகலாம்; அல்லது வழக்குப் போட்டவரே 10 பேருடன் நுழையலாம்’’  இந்த மாதிரி  தீர்ப்பு சொன்னால், ராஜ்ஜியம் நடத்துகின்றவர் சுவாமிநாத நீதிபதியா?

நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் சொல்கிறார். உங்களுக்கு என்ன அதிகாரம்? தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் போங்கள் என்று சொல்வதற்குச்  சட்டத்தில்,  எந்த இடத்தில் அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது? இதைக் கேட்கிறோம், இப்படி கேட்கும்போது, அதற்குப் பதில் இல்லை.

அதுவும், அரசுக்கு தாக்கீது, உரிய அவகாசம் எதுவும் கொடுக்காமல், தமது இஷ்டத்திற்கு செயல்பட்டால், அது சட்டப்படி ஏற்கத்தக்கதா? நியாயமா?

தமிழ்நாட்டில் உள்ள எதிர் அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிரான – எது கிடைத்தாலும், தி.மு.க. விற்கு அதை அரசியல் அவதூறுக்கு உரிய மூலதன மாக்கிக் கொள்ள முயலுவது மிகவும் தவறானது. பொதுநலன், மக்கள் நலனை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டாமா?

ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன், நாமெல்லாம் கூட்டத்திற்கு வரும்போது, ‘‘உங்களுக்கு ஆபத்து இருக்கிறது; நீங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போகக்கூடாது; அந்தக் கூட்டத்தை ரத்து செய்கிறோம்’’ என்று காவல்துறை சொன்னால், ‘‘இல்லை, இல்லை, நாங்கள் கூட்டத்தை நடத்தித்தான் தீருவோம்’’ என்று சொல்ல முடியுமா? காவல்துறை அனுமதியோடு நடத்தவேண்டிய நிகழ்வாகும். அந்த நிகழ்வால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் என்று காவல்துறை தகவல் பெற்று, தடை செய்தால், பொறுப்பானவர்கள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டாமா?

கட்டுப்பாடு என்பது  உண்டா, இல்லையா? எனவே 144 தடை உத்தரவு போடுகிறார்கள் என்றால், ‘அதை நான் ரத்து செய்கிறேன்’ என்று சொன்னால், நிலைமை என்னாகும்? கலவரம், உயிர்ச்சேதம் ஏற்பட்டால், பொறுப்பு ஏற்பீர்களா? வழியில் கலவரம் நடந்தால், நீதிபதிகள்கூட வீட்டிற்குப்போக முடியாதே? காவல்துறையினர்தானே அவர்களுக்கும் கூட தக்கப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும்?

இந்தப் பக்கம் ஒரு பெரிய கலவரம் நடக்கிறது; நீங்கள் அந்த வழியாகப் போகக்கூடாது என்று சொன்னால், ‘‘இல்லை, இல்லை, அந்த வழியாகத்தான் நான் போவேன்’’ என்று சொன்னால், அதனுடைய விளைவு என்னாகும்? என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் மதச் சுதந்திர உரிமைகூட கட்டுப்பாட்டுக்கு அடங்கியதே ஆகும்.

அரசியலமைப்புச் சட்டம் Article 25, 26 என்பவை

‘‘subject to Public Order, Morality and Health and to the other provisions of this Part’’ என்றுதானே கூறுகிறது!

நீதிபதிகள் இதனை சரிவரப் புரிந்து தீர்ப்பளிக்க வேண்டியது அவர்களது கடமை அல்லவா?

கரோனா தொற்றுக் காலகட்டத்தில்,  நடந்தது என்ன? நெருக்கமாகத் தும்மினாலே தொற்று பரவி விடும் அபாயம் இருந்தது! அதனால், கடவுள்களுக்கெல்லாம்கூட போர்வை போர்த்தி விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடந்தனவா? அன்றைய காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி இல்லையே! அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்தது! ஏன் கோயில் திருவிழாக்கள் தடுக்கப்பட்டன? நடைபெறவில்லை என்று யாராவது கேட்டார்களா?

‘‘நாங்கள் பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தித்தான் தீருவோம்’’ என்று ஒரு சிலர் சொன்னபோது, ‘‘முடியாது, நீங்கள் அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்’’ என்று  நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்களே அன்று, மறந்துவிட்டதா?

‘‘subject to public order, morality, and health’’

ஆகவேதான், அதில் தெளிவாகச் சொல்கிறார்கள். அதில் ஒரு பகுதியில்,

‘‘Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law’’ என்ற உரிமையை நீதிபதி மதித்தாரா?

ஓர் அரசு முடிவு செய்தால், அந்த முடிவைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது.

‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை காலையில் என் முன்னால் ஆஜராக வேண்டும். அப்படி இல்லையென்றால், அவரைக் கைது செய்து கொண்டு வாருங்கள்’’ என்று  ஒரு நீதிபதி உத்தரவு  போட்டால், அப்படி அவர் ஆஜராகவில்லை என்றால், இது நீதித் துறை அவமதிப்பு செயல்.

ஆகவேதான் நண்பர்களே,  குடியரசுத் தலைவராக இருந்தாலும், நீதிபதிகளாக இருந்தாலும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான். இதனை உடைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதன்படிதான் நாம் பேசுகிறோம்.

அதே மாதிரி அரசியலமைப்புச் சட்டம் 26 ஆவது பிரிவு  என்று சொல்லும்போது, ஒரே ஒரு விஷ யத்தைத்தான் மாற்றியிருக்கிறார்கள்.

‘‘Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right’’ —

என்று சொல்லி முடித்துவிட்டார்கள்.

ஆகவே, எங்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது, நாங்கள் யாருக்கும் கட்டுப்படமாட்டோம் என்று சொல்வதற்கு ஒழுக்கம் இருக்கிறதா?

ஆனால், இதைத் தூக்கி எறிந்துவிட்டு, பல நீதிபதிகள் ஆணையிடலாமா?

அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். எனவே, ‘தயவு செய்து மாண்பமை நீதிபதிகளே, அரசியலமைப்புச்  சட்டத்தைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்கிறோம். பதவிப் பிரமாணம் எடுத்ததை மறந்துவிட்டுக் கட மையாற்றலாமா? இதில் என்ன தவறு? நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் என்பதற்காகத்தானே இந்தக் கூட்டம். அந்த உறுதிமொழிப்படி நீங்கள் நடக்கவேண்டாமா? அந்த உறுதிமொழிப்படி நீங்கள் நடக்கவில்லை. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி அதைச் செய்து கொண்டிருக்கிறார்.

யார் மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது. உடனே கொண்டுவாருங்கள்; உடனே ஆறு மணி என்றால், 6.05 மணிக்கு வாங்க. அன்றைக்கு ஒரு பக்கத்தில் மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்களே, சட்ட திட்ட வரைமுறை இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விடலாமா?

நாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும் போது, ஜஸ்டிஸ் கைலாசம்  அவர்களை, சட்டக் கல்லூரி விடுதி விழாவிற்காக அழைத்திருந்தோம். அவர் பின்னா ளில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக வந்தவர். அவர் எங்களுக்கு சுவையான செய்தி ஒன்றைச் சொன்னார்: ‘‘நான்  கிரிமினல் லாயராக இருந்து ‘பிராக்டீஸ்’ செய்யும்போது, ஒரு ‘மெத்தட்’ உண்டு. அது என்னவென்றால், அப்போ திருந்த  (வெள்ளைக்கார) அரசு, யாரையாவது கைது செய்து, வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாலையில்  கொண்டு வருவார்கள். அடுத்த நாள் அவர்கள் சிறையில் இருந்தால், உடனே மொட்டை அடித்துவிடுவார்கள்.

அதனால், உடனே தங்களுக்கு அவசர ஜாமீன் (Bail) வாங்கவேண்டும் என்பதற்காக, பீஸ் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார்கள். காரணம், அடுத்த நாள் இருந்தால், மொட்டை அடித்திடுவார்களே, அது அவர்களுக்கு அவமானம் என்று கருதுவார்கள்.

எதற்காக இதைச் சொல்றோம் என்றால்,  நியாயங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான். அதுதான் அடிப்படை.

அடுத்தபடியாக மிக முக்கியமான ஒன்றைச் சுட்டிக் காட்டவேண்டும்.   சட்டம் ஒழுங்கு என்று சொன்னால், அந்தச் சட்டம் ஒழுங்கு யாருக்கு உரியது? மாநில அரசுக்கு உரியது அல்லவா!  அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அல்லவா! அந்தச் சட்டம் ஒழுங்கு பற்றிக் கவலைப்படாமல் நீதிபதி உத்தரவு போடுவதா?

சட்டம் ஒழுங்கைக்  காப்பாற்றவேண்டும் என்று நினைக்க வேண்டிய ஓர் அரசு,  காப்பாற்றவேண்டும் என்று நினைக்கின்ற மாவட்ட ஆட்சியர் 144  தடை உத்தரவு போடுகிறார். காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற காவல்துறையினரைத் தாக்கிய, மத வாதிகள், கிளர்ச்சியாளர்கள், அவர்களது மண்டையை உடைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாமா, நீதிபதி? மாநில உரிமைகளையும் தூக்கி எறிகிறார்கள்; ஒன்றிய காவல்துறையினரை அனுப்புகிறார்கள். அதற்கு என்ன அவசியம்? அது சட்ட மீறல் அல்லவா!

இங்கே நீதிபதி அய்யா சொன்னதுபோன்று,  ஒன்றிய காவல்துறையினருடைய எல்லை எது? நாளை  தமிழ்நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருகிறார், பிரதமர் வருகிறார்  என்று வைத்துக் கொள்வோம், எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க, ஒன்றிய அரசிலிருந்தா காவல் துறையினர் வருகிறார்கள் என்பதை தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றிய அரசின் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக வந்தாலும் கூட,  மிக முக்கியமாகக் கவலைப்பட வேண்டியவர்கள்  தமிழ்நாட்டு காவல் துறையினர்தானே! அவர்களுக்குத்தானே முழுப் பொறுப்பு இருக்கிறது

முன்பு ஒருமுறை  பஞ்சாபிற்குப் பிரதமர் மோடி அவர்கள் சென்றிருந்தபோது, வழி மாறிப் போய்விட்ட பிரச்சினை ஏற்பட்டது. வேறு வழி சொல்லிவிட்டார்கள்.  அதற்காக யார் மேல் நடவடிக்கை எடுத்தார்கள்?

காவல் துறையினுடைய கடமைகளை அவர்கள் செய்யும்போது, அதற்காக அவர்கள் மீது குற்றம் சொல்லுவதா? நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு முதலமைச்சராகவோ, ஓர் அமைச்சராக இருக்கிறவருக்கோ காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். பாதுகாப்பு கொடுத்து முன்னாலே ‘கான்வாய்’ போகும். அப்படிப் போகும்போது, இந்த வழியாக நீங்கள் போகக்கூடாது என்று பாதுகாப்புக்குச் செல்கின்ற காவல்துறையினர் சொன்னால், அதை அவர்கள் ஏற்கவேண்டும், அப்படியில்லாமல், ‘‘அந்த வழியில்தான் நீங்களும் வரவேண்டும்’’ என்று சொல்வ தற்கு முதலமைச்சருக்குச் சட்டப்படி உரிமை உண்டா என்றால், கிடையாது.

காவல்துறை போகக்கூடாது என்று சொன்னால், அதை மீறினால், ‘எங்கள் பொறுப்பல்ல’ என்று சொல்வதற்குக் காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டா, இல்லையா? இந்த சாதாரண விஷயம் தெரியாதவர்களா நீதிபதிகள்? தெரியாது என்று நான் சொல்லமாட்டேன். தெரிந்து கொண்டும் நீங்கள் சட்டத்தை வளைக்கலாமா? நீதி வளையலாமா? ஆனால், காவல் துறையினுடைய மரியாதையை –  ராணுவத்தைப் பற்றிப் பேசும்போது, தடுக்கலாமா? மதிப்பைக் குறைக்கலாமா? ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; அதேமாதிரி காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே! நம் யாருக்கும் பாதுகாப்பு கிடையாதே!

ஒரு நடிகருடைய பிரச்சினை உள்பட, எந்தப் பிரச்சினை  வந்தாலும்,  முதலில் பாதிக்கப்படுவது காவல்துறையினர்தானே! ஒரு பக்கம் மட்டும் அவர்களுக்கு அடி கிடையாது; இரண்டு பக்கமும் அடி அவர்களுக்கு! இந்தப் பக்கமும் விமர்சனம்; அந்த பக்கமும் விமர்சனம். ஆகவேதான் நண்பர்களே, இன்றைக்கு ‘இம்பீச்மெண்ட்’ என்று கொண்டு வரக்கூடிய அளவிற்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பேரவைத்தலைவரிடமும், குடியரசுத் தலைவரிடமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்குக்காக மட்டுமா? இல்லை.! n

(10.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “மதக் கலவரங்களுக்கு நீதித்துறை துணை போகலாமா?” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)