Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இதைத்தான் கூறுகிறது! நூறு நாள் வேலைத் திட்டம் –

பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!-கி.வீரமணி

 

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு விபிஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்தச் சட்டத்தின் மூலம் இனி 100 நாள்களுக்குப் பதில் 125 நாள்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்து இருக்கிறது.

ஆனால், இந்தத் திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கிப் போட்டு விடும் என்று எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான ஊதியம் முழுவதும் ஒன்றிய அரசு வழங்கியது. அதே நேரத்தில் திட்டத்தின் கீழ் பொருள்களுக்கான செலவில் ஒன்றிய அரசு 75 சதவிகிதமும், மாநில அரசின் பங்கு 25 சதவிகிதமும் இருந்தது.

ஆனால், புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருள்களுக்கான செலவில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவிகிதமும், மாநில அரசின் பங்கு 40 சதவிகிதமும் இருக்கும். இது மாநிலங்களுக்குப் பெரும் நிதிச் சுமைய ஏற்படுத்தும். குறிப்பாக இந்தத் திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாய்ப் பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால், இந்தியாவிலேயே, இந்தத் திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்குக் கூடுதல் செலவு ரூ.4,600 கோடி!

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாள்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால், அதே மதிப்பில் இந்தத் திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒரு மாநில அரசால் ஒதுக்க முடியாது. எனவே, இந்தத் திட்டத்தின் செலவைக் குறைக்க மாநில அரசு முற்படும். அப்படிச் செய்தால் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

இது தவிர, இந்தப் புதிய திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-

பழைய திட்டத்தில் தமிழ்நாடு  அரசு, ஒரு நிதியாண்டுக்கு எவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறோம் என்று கூறி, ஒன்றிய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களைக் கூடுதலாகச் செயல்படுத்தினாலும், அந்தத் தொகையையும் ஒன்றிய அரசு கொடுத்து விடும். ஆனால், இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவிகிதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.

இந்தத்  திட்டத்தின் கீழ் எந்தப்  பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தன. ஆனால்,  இனி ஒன்றிய அரசு அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.

தமிழ்நாட்டுக்குக் குறைவான நிதி!

முன்பு தமிழ்நாடு  அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், இனி நிதி ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள் தொகை போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு தான் ஒன்றிய அரசால மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே,  குறைவான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்குக் குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.

கிராமப்புறங்களில் இந்தத்  திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மய்யம், ரேஷன் கடை மற்றும் சிமென்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாள்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இதற்கான பொருள்கள் செலவில் மத்திய அரசு 75 சதவிகிதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவிகிதம் தான் வழங்கும். எனவே, அதற்கும் தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.

கலைஞர் கனவு இல்லத்திற்கும் பாதிப்பு

மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தின் கீழ், மனித உழைப்பு நாள்கள் கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கும் ஒதுக்கப்படுகிறது. அதாவது கலைஞர் கனவு இல்லத் திட்டப் பயனாளிகள் வீடு கட்டும் போது 100 நாள் திட்டத்தின் கீழ் பயனாளிகளைப்  பணியில் அமர்த்திக் கொள்ளலாம். அதற்காக இந்தத்  திட்டத்திற்கு மனித உழைப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இனி மாநில அரசின் திட்டங்களில், இந்த மனித உழைப்பு நாள்கள் வழங்கப்படாது. எனவே,  அந்த உழைப்பு நாள்களுக்கான நிதியை தமிழ்நாடு  அரசு இனி ஒதுக்க வேண்டி வரும்.! n