Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீர சிவாஜியின் கோழை வரலாறு!- மருத்துவர் இரா.கவுதமன்

சிவாஜியின் முடி சூட்டு விழாவில் ஓர் இந்து அரசனின் முடி சூட்டு விழாவில் ஓதக்கூடிய அனைத்து மந்திரங்களும், தானும் சத்ரியன் ஆகிவிட்டதால் ஓத வேண்டும் என சிவாஜி எதிர்பார்த்தான். மந்திரம் ஓதும் பார்ப்பனர்கள் உரத்த குரலில், அவன் காதுகளில் விழும்படி சொல்ல வேண்டும் எனக் கூறினான். இது அங்கிருந்த பார்ப்பனர்களிடையே சல சலப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. வேத மந்திரங்களை “துவி ஜாதியினர் மட்டுமே ஓத வேண்டும். தற்காலத்தில் பார்ப்பனர் தவிர வேறு எந்த வருணத்தாரும் தூய இரு பிறப்பாளர்கள் அல்லர். உலகில் உண்மையான சத்ரியர்கள் என்போரே இல்லை. எனவே “துவி ஜாதியினர் பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்களே வேத மந்திரங்களைச் சொல்ல அருகதை உள்ளவர்கள் என்று கூறி, கலவரம் செய்தனர். காகப்பட்டனும் பயந்து மந்திரம் சொல்வதை நிறுத்தி விட்டான். பிறகு திருத்தம் செய்த மந்திரங்களைச் சொல்லி, சடங்குகளைச் சொல்லி சிவாஜியைச் சத்ரியனாக்கி விட்டார். ஆனால், சுற்றியிருந்த பேராசைக்காரப் பார்ப்பனர்கள் வேத மந்திரத்தின் ஒரு சொல் கூட அவன் காதில் விழாதவாறு வெறுமனே வாயசைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேத மந்திரங்களால் சூத்திரர்கள் நன்மை அடைந்து விடக்கூடாது என்றே இப்படிச் செய்தனர். ஏராளமான பொருள்களைக் கையூட்டாகப் பெற்றும் பார்ப்பனர்கள் சிவாஜிக்குத் துரோகம் செய்தனர். (ஆதாரம்: சிவாஜி முடிசூட்டலும், பார்ப்பனீயமும், தமிழில் பேரா.காளிமுத்து.)

5.6.1674 அன்று துவங்கிய கோலாகலமான விழா சிவாஜி பட்டமேற்கும் விழா! அன்று காலையே கங்கை நதியில் இருந்து கொண்டு வரப் பெற்ற “புனித” நீரில் குளித்து, தன் உடலை வருத்தி.சூத்திரப் பட்டம் ஒழியவும், சத்ரியனாக்க வேண்டி வேண்டியும், கடவுளைத் தொழுது, நோன்பிருத்தலில் அந்த நாள் முழுதும் செலவிட்டான். அன்றைய தினம் பார்ப்பான் காகப்பட்டனுக்கு 5000 ஹீன்களையும் (அக்கால நாணயம்), மற்ற முக்கிய பார்ப்பனர்களுக்கு தலைக்கு 100 ஹீன்கள் என லட்சக்கணக்கில் கொடுத்தான் பார்ப்பனர்கள் சிவாஜியின் பட்டமேற்பு விழாவில் அடித்த கொள்ளைகள் கணக்கில் அடங்காது (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமய் வரம்பன்).

1674 ஜூன் 6ஆம் தேதி.சிவாஜியின் இரண்டாம் நாள் முடி சூட்டு விழா! அவனைத் தீமையில் இருந்து தடுக்கவல்ல சடங்குகள் என பார்ப்பனர்கள் கூறியவற்றை சிவாஜி செய்து, குளிக்கச் சென்றான். குல தெய்வங்களையெல்லாம் வணங்கினான். தாய் ஜீஜிபாய், குரு இராமதாசர், குடும்பப் புரோகிதர் பாலன்பட்டர், காகப்பட்டன், மற்றும் முக்கிய புரோகிதர்களின் கால்களில் விழுந்து வணங்கினான். காகப்பட்டன் உட்பட எல்லாப் பார்ப்பனர்களுக்கும் விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் முதலிய கொடைப் பொருள்களை வழங்கினான். தூய வெண்ணிற ஆடையில், பூமாலைகள் வாசனைத் திரவியங்கள், தங்க நகைகள் அணிந்து நீராடும் இடத்திற்கு சிவாஜி சென்றான். பிறகு நீராட்டும் சடங்குகள் துவங்கின. (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமய் வரம்பன்)

நீராடுமிடத்தில்,இரண்டடி சதுரமும்.இரண்டடி உயரமும் உள்ள தங்கத் தகடுகளால் வேயப்பட்ட இருக்கை ஒன்றின் மீது அமர்ந்தான். அவனது பட்டத்து ராணியாகிய சோயிராபாய் இந்து சாஸ்திரம் கூறியபடி இம்மைக்கும், மறுமைக்கும் அவள் அவனின் சம கூட்டாளி என்பதைக் காட்டும் அறிகுறியாக ராணியின் ஆடையோடு. சிவாஜியின் ஆடை நுனி முடியப்பட்டிருந்தது. சிவாஜியின் அருகில் அவள் அமர்ந்தாள். பிறகு 8 திக்குகளிலும் கங்கை முதல் பல முக்கிய நதிகளிலிருந்தும் கொண்டு வரப் பெற்ற நீர் நிரம்பிய 8 தங்கக்குடங்களுடன் தயாராய் இருந்த அவனது 8 அமைச்சர்களும் (அதில் 7 பேர் பார்ப்பனர்)அரசன் அரசி மீது தலையின் மீது அந்தத் தண்ணீரை மந்திரங்களும், இசைக்கருவிகளும் முழங்க ஊற்றி நீராட்டினர்.திருமணமான 16 பார்ப்பனப் பெண்கள் ஒவ்வொருவரும் 15 விளக்குகள் கொண்ட தங்கத் தட்டுகளைக் கையில் ஏந்தி அரசனுக்கு ஏற்படும் தீமைகளை விலக்குவதற்காக என்று தீப ஆரத்தி எடுத்தார்கள் இது போன்ற மேலும் பல சடங்குகள் தோஷ நிவர்த்தி என்ற பெயரில் நடந்தன. (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமய் வரம்பன்).

சிவாஜி நீராடியபின், அரசர்க்குரிய பகட்டான தங்கச் சரிகைகளால் ஆன பட்டாடைகளையும் அணிந்து கொண்டான். ஜெலிக்கும் வைரங்களையும், விலையுயர்ந்த மணிகளையும், தங்க ஆபரணங்களையும் விலை மதிக்கமுடியாத கண்ட மாலைகளையும் பூமாலைகளை மார்பில் தாங்கியும், மாணிக்கங்கள். முத்துக்கள் பதித்த தலைப் பாகையினை சூடி.அவனுடைய கேடயம் வாள்,  வில்,  அம்புகள் ஆகியவற்றை வணங்கி,பின் தன் மூத்தோர்களை வணங்கியும், அங்கிருந்த அனைத்து பார்ப்பனர்களின் கால்களில் விழுந்தும் வணங்கினான். நல்ல நேரத்தில் முடி சூட்டு விழா மண்டபத்தில் நுழைந்தான். அந்த மண்டபம் இந்து சனாதன தர்மப்படியும் பல்வேறு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட 32 அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமய் வரம்பன்).

தலைக்கு மேலாக மணிகள், முத்துக்கள் ஆகியவற்றால் இழைக்கப்பட்ட துணிச் சேலைகள் தோரணங்கள், தரையில் வெல்வெட் மெத்தை. அதன் மத்தியில் வேலைப்பாடுகள் நிறைந்த 32 மணங்கு (அந்நாளைய அளவீடு) தங்க அரியாசனம். அதன் அடிப்புறம், கால்கள் அனைத்தும் தங்கத்தாலேயே செய்யப்பட்டிருந்தது. அதன் மேல் சிவாஜி அமர்ந்தான்.இளவரசன் சம்போஜி, தலைமைப் புரோகிதன் காகப்பட்டன், பிரதம அமைச்சன் மோரோ டிரிம்பக் பின்கிள் (Moro Timbak Pingle) ஆகியோர். அரசனின் அரியாசனத்தை விட உயரம் குறைந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். மற்ற அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அவர்கள் பதவியின் தகுதிக்கு ஏற்ப பின்னால் நின்றனர்.முதல் ஆணையாக அரசு அதிகாரிகளின் பாரசீக மொழிப் பெயரை மாற்றி, சமஸ்கிருத பட்டங்களையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டான்.

பதவியேற்ற 3 மாதங்களில் சிவாஜியை மீண்டும் பதவியேற்கும்படி பார்ப்பனர்கள் வலியுறுத்தினர். அவனும் ஒத்துக் கொண்டு 2ஆம் முறையும் முடி சூட்டிக் கொண்டான். “ஷிவராஜ் ராஜ்ய விஷேக் கல்பதரு என்ற சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதி சிவாஜியின் அரசப் பதவியேற்பின் முழு விவரத்தையும் குறிப்பிடுகிறது. பார்ப்பனர்களின் பிரிவுகளையும் போட்டி மனப்பான்மையையும், சுரண்டல்களையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஹிந்து மதத்தில் நிலவிய வைதிக முறையைப் போலவே “தாந்திரிக நெறி முறை” என்ற ஒன்றும் நிலவி வந்தது. வேத நெறிமுறையில் காகப்பட்டன். போலவே தாந்திரிக நெறிமுறையில் சிறந்தவனாக “நிஷ்சல் பூரி கோசாமி” என்ற பார்ப்பனன் விளங்கினான். வேத முறையில் பதவி ஏற்ற சிவாஜி, வேதப் பார்ப்பனர்களுக்கு அளவற்ற செல்வம் வழங்கிய நிலையில் தாந்ரிக முறைக்காரர்களும். அவர்கள்  தலைமை குரு நிஷ்சல் பூரி கோசாமியும் அவமானப்படுத்தப்பட்டு விரட்டி அடிக்கப் பட்டார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பொருள்களும் கொடுக்கப்படவில்லை. தலைமை தாந்ரிக குருவும் இதற்கு கழுவாய் தேட வாய்ப்பை எதிர் பார்த்திருந்தான்.

முடி சூட்டு விழா முடிந்து சிவாஜி வெளியே புறப்பட்ட போது, ஒரு மரத்துண்டு மேலிருந்து விழுந்து காகப்பட்டன் மூக்கில் அடிபட்டு விட்டது. கூட்ட நெரிசலில் தாமரை வடிவ மரத்தூண் சாய்ந்து சிவாஜியின் புரோகிதன் பால பட்டாவின் மேல் விழுந்தது. அரசன் படிக்கட்டு ஏறும் போது, தென்கிழக்கு மூலையில் யாரோ தும்மினார்களாம். சிவாஜியின் கழுத்து மாலையில் இரண்டு முத்துக்கள் காணவில்லை. அவன் வணங்கு வதற்காக வைக்கப்பட்டிருந்த உடை வாள் உறையினின்று கழன்று விழுந்ததாம்.தட்டாஜி என்ற அமைச்சன் தடுக்கி விழுந்து விட்டான். இது போன்ற பல சகுனத்தடைகள் ஏற்பட்டதைப் பார்த்து சிவாஜி கலக்கமடைந் தான். அதைப் பயன்படுத்திக் கொண்ட தாந்திரிக குரு,நிஷ்சல் பூரி கோசாமி” அவர்களை அவமானப்படுத்திய “தோஷத்தால் இவை நடந்ததாகக் கூறி,” தோஷ நிவர்த்தி” செய்ய வேண்டி இரண்டாம் முறை பட்டம் ஏற்கச் சொன்னான். பயந்து போன மாவீரன் சிவாஜி, இரண்டாம் முறையாக மகுடம் சூட்டிக் கொண்டான். தாந்திரிக பார்ப்பனர்களுக்கும் ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்தான்.

சிவாஜிக்கு அவன் வாழ்நாளின் லட்சியமான அரச பதவி கிடைத்த பின்னும் பார்ப்பனர்கள் விடவில்லை. பதவி ஏற்ற அடுத்தநாள் சூத்திரனாக இருந்தபொழுது செய்த பாவங்களுக்குப் பரிகாரம் கழிக்க, கழுவாய் தேடும் விதத்தில் அவனது எடைக்கு எடை பொன் வெள்ளி, செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், ஈயம், இரும்பு ஆகிய ஏழு, உலோகங்களும், வேலைப்பாடு  மிக்க விலை உயர்ந்த துணிமணிகள், கற்பூரம், உப்பு, சாதிக்காய், எண்ணற்ற நறுமணப் பொருள்கள், வெண்ணெய், சர்க்கரை, பழங்கள், நாட்டுச்சாராயம், வெற்றிலை நிறுக்கப்பட்டு, அதோடு ஒரு லட்சம் தொகையும் அங்கிருந்த அத்தனைப் பார்ப்பனர்களுக்கும் வழங்கப்பட்டன. சிவாஜியின் எடை ஒரு 100கிலோ இருக்கலாம். ஏராளமான செல்வத்தையும்,விலை உயர்ந்த அத்துணைப் பொருள்களையும் பார்ப்பனர்கள் மகுடம் சூடிய மறுநாள் அள்ளிச் சென்றனர். (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமய் வரம்பன்) n