Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆளுநர் எப்போது உண்மை பேசினார்?

கே:   ஓய்வு ஊதியத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்ததற்கு மகிழ்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்த அடுத்த கணமே, பத்ரி சேஷாத்திரியும், தினமலரும், பாண்டேக்களும் எதிரான கருத்தைத் தெரிவித்து, ஊழியர்களைக் குழப்பும் முயற்சியில் இறங்கியதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

– க.வேல்முருகன், கடலூர்.

ப :     நரிகள் என்றாவது ‘சைவ’மாக முடியுமா? எட்டி பழுத்தாலும் யாருக்கும் பயன்படாத அதன் தன்மை மாறுமா?

கே:   “ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்புடன் உள்ளது” என்ற திருமாவளவனின் கருத்துக்கு எதிராய், ஹிந்தியைத் தடுத்து தமிழர்களைக் கிணற்றுத் தவளையாக்கியது தான் திராவிடம் என்ற ‘தினமலர்’ கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– எம்.காஞ்சனா, கும்மிடிப்பூண்டி.

ப :     தவளையாக இருந்தவர்களை மனிதராக்கி, உரிமை உணர் வோடும், மானத்தோடும் வாழ வைப்பதே தந்தை பெரியாரின் இயக்கமான திராவிட இயக்கம் தான் என்பதை மறந்துவிட்ட அந்த மன்னார்சாமிகளிடம் இதைத் தவிர, வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

கே : மேற்கு வங்கத்தையும், தமிழ்நாட்டையும் அமித்ஷா குறிவைக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமை இன்னும் தீவிரமாய் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தி வளர்க்க வேண்டியதற்கு மாறாய், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பத்தை அனுமதிப்பது சரியா?

– ஆ.கோவிந்தன், மதுரை.

ப :   இதற்குப் பதில் சொல்ல வேண்டியவன் நான் அல்லவே!

கே :  மகாராஷ்டிரத்தில் மாறியுள்ள அரசியல் சூழலை, இந்தியா கூட்டணி தனக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்க வாய்ப்புண்டா?

– உ.தங்கவேல், திருச்சி.

ப :   நிச்சயம் உண்டு – சுயநலம் துறந்தால்!

கே :  நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் உருவாக்க முற்படும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டிக்காது, மென்மையாகச் செயல்படும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்லவா?

– ஈ. கயல்விழி, சாலிக்கிராமம்.

ப :   அடகு வைக்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு அப்பொருள் சொந்தமாக முடியாதே – மீட்கப்படும் விரைவில்!

கே : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி நடக்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளது ஏற்புடையதா?

– ஜெ.ராஜுலு, பாண்டிச்சேரி.

ப :   ஆளுநர் எப்போது உண்மை பேசினார்? வாயைத் திறந்தால் ‘திராவிட மாடல்’ அரசு மீது வக்கணையான அவதூறு தானே – இதில் மட்டும் அவரால் உண்மை பேசிட முடியுமா?