அறிவியலின் வளர்ச்சியால் மனித குலத்தை அச்சுறுத்திய பல நோய்கள் காணாமல் போய்விட்டன. அப்படிப்பட்ட நோய்களுள் ஒன்று தொழு நோய். முற்பிறவியில் செய்த பாவத்தால் கிடைத்த பலன் என்று ஆத்திகவாதிகள் பலர் அந்த நோயாளிகளை ஒதுக்கிவைத்துக் கொடுமைகள் பல புரிந்தனர். உடலால் வேதனைப்பட்ட அவர்கள் உள்ளத்தாலும் வேதனைப்படும் நிகழ்வுகள் பலவும் நடந்தன.
தொழு நோய்ப் பாதிப்பு என்பது மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கும் ஒரு பாதிப்பு. உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும். கை, கால் விரல்கள் மடங்கிப் போகும். மூக்கு சப்பையாகும், கண் இமைகள் மூட முடியாத நிலைமை ஏற்படும். நன்றாக இருக்கும் மனிதர்களை விகாரமாக மாற்றும்.இந்த நோய் எப்படிப் பரவுகிறது, இந்த நோய் பரவுவதைத் தடுப்பது எப்படி என்று தெரியாத நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பது போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், தொழு நோய் பாதித்தவர்களை எல்லாம் கொண்டுபோய்க் கண்காணாத தீவிலே கொண்டுபோய்விட்ட நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன.
‘அற்றவைகளால் நிரம்பியவள்’ என்று ஒரு நாவல். எழுத்தாளர் மருத்துவர் பிரியா விஜயராகவன் அவர்கள் எழுதியது. அதில் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சீஷெல்ஸ் (Seychells) தீவுகளில் ஒன்றான க்யீரியஸ் (curieuse island) தீவுகளில் இருந்த லெபிரசி காலனி பற்றி எழுதியிருப்பார். 1830ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழு நோயாளிகளை இங்கு கப்பலில் கொண்டு வந்து ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றிருப்பதையும், அங்கிருக்கும் சில கல் தூண்களில் அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழ்த் தொழுநோயாளிகள் தங்கள் துயரங்களை எழுதியிருப்பதையும் படித்து, அந்த நாவலின் கதாநாயகி மருத்துவர் அஞ்சனா அழுவதாக வரும். அங்கு தன்னந்தனியாக விடப்பட்ட தொழு நோயாளிகள் எப்படியெல்லாம் தங்கள் உறவுகளை, தங்கள் வீட்டை, தங்கள் நிலத்தை இழந்ததை எல்லாம் எண்ணி அழுது குவித்திருப்பார்கள்! அந்தத் துயரங்களை எல்லாம் அங்கு இருக்கும் கல்தூண்களும் அதில் இருக்கும் தமிழ் எழுத்துகளும் காட்டுவதாகப் பல பக்கங்களில் எழுதியிருப்பார். (அற்றவைகளால் நிரம்பியவள்,பிரியா விஜயராகவன், பக்கம் 202-210).
அதே புத்தகத்தில், தான் மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றியபோது, தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெரியவர், தன்னுடைய புண் மேல் கட்டியிருந்த துணியை அவிழ்த்ததும் நூற்றுக் கணக்கான வெண்மை நிறப்புழுக்கள் ஓடியதை, அந்தப் புழுக்கள் எல்லாம் அந்தப் புண்ணுக்குள் இருந்து கடித்துக்கொண்டிருந்ததை,பின்பு மற்ற மருத்துவர்களோடு இணைந்து அந்தப் புண்ணுக்குள் இருந்த புழுவை ஒவ்வொன்றாக இழுத்து, வேதியியல் கரைசலில் போட்டுக் கொன்றதையும், பின்பு அந்தப் பெரியவருக்குச் சிகிச்சை அளித்து அவரது புண் ஆறிக் குணமான தையும் எழுதியிருப்பார். இது சில பத்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு.இந்த நோய்க்கு மருத்துவமே இல்லாத காலத்தில் எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த நோயின் கொடுமை நமக்குப் புரியும்.
தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை கட்டாயமாக நீக்கித், தனித்து விடப்படும் ஒரு நோயாகத் தொழுநோய் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது.கடவுளின் தண்டனை என்று காலம் காலமாக நம்பப்பட்டு, பரப்பப்பட்டு வந்த இந்த நோய்க்குக் காரணம் ஒரு பாக்டீரியாவே என்று 1873இல் கண்டுபிடித்து உலகிற்குச் சொன்னவர் கெரார்டு அர்மவுர் ஹான்சன் (Gerhard Armauer Hansen). இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். தொழு நோயாளிகளைக் கண்டு எல்லோரும் ஒதுங்கி ஓடிய நேரத்தில், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புண்களை, கொப்பளங்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து இந்தப் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தார்.அவரின் அர்ப்பணிப்பால் மிகப்பெரும் மாற்றம் தொழுநோயாளிகளுக்கு ஏற்பட்டது. அதனால் இந்த நோயே ஹான்சன் நோய் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
இன்று மருத்துவம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக் கிறது. அன்னை தெரசா அவர்கள் கல்கத்தா நகரில் தெருவில் கிடந்த தொழுநோயாளிகளுக்கு எல்லாம் சிகிச்சை அளித்து, அவர்களுக்கென விடுதி ஏற்படுத்தி பெரும் மனித நேயத் தொண்டு புரிந்தார் என்பதை நாம் அறிவோம். அதனாலேயே தெரசா அவர்கள் அன்னை தெரசா ஆனார். அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் பல முன்னெடுப்புகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு,இன்றைக்குத் தொழுநோய் என்பது பெருமளவில் குறைந்திருக்கிறது. எனக்குத் தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீரி (செட்டி) அவர்கள், இந்தத் தொழுநோய் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, தான் செய்த ஒரு காரியத்தைச் சொன்னார். ‘நேரு, 1960-70களில் தொழுநோயின் பாதிப்பு மிகுந்த அளவில் இருந்தது. அரசு ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போலத் தொழுநோயை ஒழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்தினார்கள். ஆனால், எப்படிச் செயல்படுத்துவது? எங்கிருந்து ஆரம்பித்து இந்த நோயை ஒழிப்பது எனக் குழப்பம் இருந்தது. அப்போது நான் ஆசிரியராக இருந்தேன். மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று, தலைமை மருத்துவரைச் சந்தித்தேன். தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கையைப் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பியுங்கள், தொழுநோய்ப் படை அறிகுறி யார் யாருக்கு இருக்கிறது என்பதனைப் பள்ளிக்கூடங்களுக்கு வந்து சோதனை செய்யுங்கள். அப்படிப் படை இருக்கும் மாணவ, மாணவிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மருந்து கொடுங்கள். அப்படியே பெரியவர் களுக்கும் மருத்துவம் செய்யுங்கள்.குணமாவார்கள்’ என்று சொன்னேன்.அந்தத் தலைமை மருத்துவர் எழுந்து வந்து கட்டித்தழுவி ‘அருமையான யோசனை சொன்னீர்கள்’ என்று பாராட்டினார் என்று சொன்னார். மேலும் அவர் ‘இன்றைக்குப் பெருமளவில் தமிழ்நாட்டில் தொழு நோய் மறைந்திருக்கிறது. அதற்கு அரசுகளின் நடவடிக்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’ என்றார். இப்படித் தொழு நோய் ஒழிப்பை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, யாரிடமிருந்து நல்ல கருத்து வந்தாலும் அதை எடுத்துச் செயல்படுத்தித் தொழுநோயை ஒழித்திருக்கிறார்கள்.
எனது சொந்த ஊரில் (சாப்டூரில்) சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் ஓர் இயக்கம்போல, எனது உறவினர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் இணைந்து வீடு வீடாகச் சென்று யாருக்கும் தொழுநோய் படை இருக்கிறதா என்று கணக்கெடுத்தோம். இருந்த மிகச் சிலருக்கு மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்தோம். நோயைப் பரப்ப ஏதுவாக இருந்த ஒரு குட்டையை மூடுவதற்கு ஏற்பாடு செய்தோம்.அந்த நோய் முற்றிலுமாக ஊரில் இப்போது இல்லாமலேயே போனது.
தொழு நோயை ஒழிப்பதற்கு மருத்துவமும் அறிவியலும் இணைந்து ஆற்றிய பணிகள் பற்றி நிறையச் செய்திகள் இணையதளத்தில் உள்ளன. உலக அளவில் தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு நாளாக ஜனவரி மாதம் கடைசி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில், தொழுநோயாளிகளிடம் பெரும் கருணை காட்டிய அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 அன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
காந்தியடிகளைச் சுட்டுக்கொன்ற அதே ஹிந்துத்துவா பயங்கரவாதக் கும்பலில் ஒன்றான பஜ்ரங்தள் என்னும் ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த தாராசிங் என்பவன் தலைமையில், 1999ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் ஒரிஸா மாநிலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இரு குழந்தைகளும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். எரித்த தாராசிங்கிற்கு கீழ்க்கோர்ட் மரணதண்டனை விதித்தது. மேல்கோர்ட் அவனுக்கு அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்து விட்டது.
‘இந்தியாவைப் பொறுத்த அளவில் வெள்ளையர்களின் பங்களிப்பை மருத்துவத்திலும் கல்வியிலும் நாம் மறுக்க முடியாது. ஹிந்து மதத்தில் தொடக்கூடாது என்றான், பார்க்கக்கூடாது என்றான். ஆனால் எங்கிருந்தோ வந்த அன்னை தெரசாவும், கிரஹாம் ஸ்டேன்ஸும் நாம் ஒதுக்கிய தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர். ஜாதி வேற்றுமை இல்லாமல் படிக்க, வெள்ளையர்கள்தான் வாய்ப்புக் கொடுத்தனர். நம் நாட்டில், இத்தனை மடாதிபதிகள் இருந்தார்களே… எத்தனை பேர் தொழு நோய் மறுவாழ்வு மய்யம் கட்டி வைத்திருந்தார்கள்?’ என்னும் கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார். உண்மைதானே… ஜனவரி 30 என்பது அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள். அதுபோல் தொழுநோய் விழிப்புணர்வு நாள். அந்த நாள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளை அடையாளம் காட்டும் நாளுமாகும் என்பதை நினைவில் கொள்வோம்.அவர்களை அம்பலப்படுத்துவோம். மனித நேயத்தோடு நோயாளிகளை அணுகுவோம்.’n





