ஒருமுறை சிறைக்குச் சென்று வாருங்கள் என்று உங்களிடம் சொல்ல வருகிறேன்! விருப்பத்தோடு செல்வீர்கள் என்று நம்புகிறேன்!!
இளைஞர்கள் உலகத்திற்கு எப்போதும் சினிமா ஒரு ஈர்ப்புச் சக்தியாகும். தன்னை நாடிவரும் ரசிகருக்கு அந்தச் சினிமா எதைக் கடத்துகிறது என்பது மிக முக்கியமானது. உலகத்தைப் புரிந்து கொள்ள திரையரங்குகளுக்கு ஓடிவரும் இளைஞர்களுக்கு வெறும் வசீகர மயக்கத்தை அவை கொடுக்கிறதா? வேடிக்கை காட்டுகிறதா? வன்முறையைத் தூண்டி விடுகிறதா? அல்லது அவர்களை நெறிப்படுத்தித் தருகிறதா என்பது பேசப்பட வேண்டியதாகும். அந்த வகையில் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “சிறை”… அடடா அருமை!
அச்சம் நடுநடுங்கும், ஆசை பிடுங்கித் தின்னும் கிராமத்துக் காதலர்கள் அவர்கள்… அவளுக்கு அவனைப் பிடிக்கும், அவனோடு வாழப் பிடிக்கும்,
ஊருக்கெல்லாம் அவன் பெயரும் அவன் சார்ந்த மதத்தின் மீதும் சந்தேகப் பார்வை உண்டு. ஆனால் அவளுக்கில்லை… அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ‘அப்துல்’ என்ற ஒரு மனிதனான தன் காதலன் மட்டுமே!!
அவள் காதலை விரும்பும் அந்த அப்பாவியை எப்படியெல்லாம் கைது செய்து சிறைக்குள் அடைக்கிறது அந்தக் கிராமத்துச் சமூகச் சூழல் என்ற கதைக் கருவில் உள்ளூர ஜாதி மதம் பெரும் பங்கு வகிக்கிறது.
சதா குடித்துவிட்டு மாட்டை அடிப்பது போல் வீட்டுப் பெண்களை அடிப்பது, வாய் வீராப்புக் காட்டி பெண்களைக் கொச்சைப்படுத்தும் சொற்களைச் சர்வ சாதாரணமாக அளந்து விடுவது, சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க பெண்ணின் வாழ்க்கையைப் பலி கொடுக்கும் திருமணம் செய்து வைப்பது என கால்நூற்றாண்டுக்கு முன் நடந்த பெண்ணடிமைத்தனங்களின் அப்பட்டமான காட்சிகளைத் திரையில் காணமுடிகிறது. அத்தகைய காட்சிகளினூடே
படம் நெடுகிலும் பெரியார் கருத்துகளின் பிரதிபலிப்பான வசனங்கள் தொடர்வது இப்படத்தின் சிறப்பு எனலாம்.
“குழந்தைக்காக நான் எல்லா இடத்துக்கும் ஏறி இறங்கினது போதும், நீ வந்து டாக்டர் முன்ன உட்காரு” என்று கணவனுக்குச் சூடு கொடுக்கும்போதும்,
“பரவாயில்ல டி நீ… அடி மிதி வாங்கினாலும் வைராக்கியமா இருக்க… அதே வைராக்கியத்தோடு புடிச்சவனோட வாழ்ந்து விடு”
“அவனுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை முதலில் நீ ஒரு வேலையைத் தேடிக்கோ…
யார் தயவிலும் இருக்கக்கூடாது” எனத் தங்கையுடன் பேசும்போதும்,
கதாநாயகி கலையரசியின் அக்காவின் சொற்களில் பெரியாரின் பெண்ணுரிமை பளிச்சிடுகிறது…
அடுத்ததாக இசுலாமியர் என்றாலே அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் சமூகத்தின் மனநிலைக்கும் சரியான பதிலடி கொடுக்கிறது. அதுவும் இலை மறை காயாக இல்லை, அழுத்தமான வெட்ட வெளிச்சமான இயல்பு வாழ்வின் நடப்புகளில் கேள்விகளை முன் வைக்கிறது. அதற்காக காதர் பாட்ஷா எனும் துறை அதிகாரி கதா பாத்திரம் மக்களிடம் நியாயம் கேட்கிறது… “நாங்களும் உங்களோடு தமிழர்களா இந்தியர்களா வாழ்ந்துட்டு தானேடா இருக்கோம்” என்று அவர் சொல்லும்போது நம் மனம் கனக்கும்…”நான் இந்தப் பெயரை வைத்துக் கொண்டு கைதியாக எங்கே தப்பித்துச் சென்று விட முடியும்?” என்று அப்பாவியான அப்துல் சொல்லுகிற இடம் நம் மனம் வலிக்க வைக்கும். இப்படி மதத்தை வைத்து வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் மிருகத்தனத்தின் மீது ஆர்ப்பாட்டம் இல்லாமல் கேள்வி கேட்கிறது இந்தத் திரைப்படம்… மதவெறி அரசியல் செய்பவர்களுக்கு புத்தி புகட்டுமா?
படத்தின் பெயர் தான் சிறை, இத்தகைய பொதுப்புத்திகளுக்குக் கொடுத்திருக்கிறது ஓங்கி ஓர் அறை!
சினிமாத்தனங்கள் பிரம்மாண்டங்கள், கவர்ச்சி என்ற திரை வழக்கங்கள் ஏதுமில்லை… மனிதனுடைய உணர்ச்சிகளையும் பலவீனங்களையும் உரசி உரசி நகரும் அன்றாட வாழ்க்கையிலேயே தொடக்கம் முதல் முடிவு வரை கொஞ்சமும் விறுவிறுப்புக் குறையாமல் படம் எடுக்க முடியும் என்பது இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, கதை, வசனம் எழுதிய இயக்குநர் தமிழ், கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரின் தனித்திறமையாகும்… பல இடங்களில் பதற்றம் தானாய்த் தொற்றுகிறது. பின்பு, தானே விலகுகிறது… படம் சுவைத்துப் பார்க்கும் சிறந்த அனுபவத்தையும் தருகிறது.
கைதி என்றால் இப்படித்தான், காவல் துறை என்றால் இப்படித்தான் என்ற முன் முடிவுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து மனிதநேயம் எல்லா இடத்திலும் இருக்கும் என்ற மாற்றுப் பார்வையைத் தந்ததோடு, எந்தக் கதாநாயக பிம்பத்தையும் ஊதிப் பெருக்காமல் இயல்பாக ஒரு AR பிரிவு காவலரின் உள்ளத்தில் கசியும் ஈரத்திற்கே உருக் கொடுத்திருப்பது இந்தச் சிறையின் சிறப்பம்சமாகும்! “முகத்தில் காத்தடிப்பது பிடிக்கும் சார், அதான் வேடிக்கை பார்த்துட்டே வரேன்” என பேருந்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து அப்துல் சொல்வதில் சிறைப் படுத்தப்பட்டவர்களின் வெளிஉலகிற்கு ஏங்கும் மனது வெளிப் படுகிறது. ஒவ்வொருவரும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜாதி மதம் மறுத்த காதல் வெட்டுண்டு போகாமல் போராடி வென்று வாழும் என்ற திரைப்படத்தின் முடிவும் நமக்கு இதமான வருடலாகும். அதுவே இனி வரும் உலகமும் ஆகும். அதற்கு ஒரு காக்கிச்சட்டை அணிந்த கதாநாயகன் கைதிக்கு எப்படி உதவுகிறார் என்பது தமிழ் திரையுலகுக்குப் புதிது. ‘Long escort duty’ என்ற அவர்கள் பணி பற்றிய ஒரு புரிதலையும் இப்படம் தருகிறது.
காவலர்களிலும் முன் கோபிகளும் அவர்கள் பலவீனங்களும், நீதி விசாரணை களிலும் நடக்கும் தாமதங்களும் தவறு களும் மாறுதல்களும் எனப் பல்வேறு உண்மைகளைப் போட்டுடைத்துக் கொண்டே வருகிற இத்திரைப்படத்தின் முடிவில் கதாநாயகன் பயிற்சிக் காவலர் களிடம் இப்படிச் சொல்வார், “ஒவ்வொரு காவலருக்கும் அவரவர்க்குரிய குறைந்த பட்ச அதிகாரம் இருக்கிறது. அதை எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்கப் பயன்படுத்துங்கள்! அவர்களை உங்களின் தோழனாக – சகோதரனாக – எண்ணிப் பேசுங்கள். அவர்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் சிறு உதவியும் பெரிய மாற்றத்தைத் தரும். செய்வீர்களா?” என்று கேட்பார்…
அதிகாரம் அதித காரமாக இல்லாமல் அதிகாரிகள் என்றாலே இறுகிய மனம் என்றில்லாமல், மற்றவரின் கண்ணீரைத் துடைக்கும் இளகிய மனிதமாகட்டும் என்பதை உரக்கப் பேசுகிற சிறை மொத்தத்தில் நல்ல புத்தி புகட்டுகிறது என்பது உண்மை! ஊருக்குத் தந்த நன்மை!n





