Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இளைய சமுதாயத்தை விழிப்பூட்டி நெறிப்படுத்துவோம்!- மஞ்சை வசந்தன்

இன்றைய நிலையில் இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள், விருப்பங்கள், உணர்வுகள், உந்துதல்கள், மனநிலை போன்றவை மிகவும் அதிர்ச்சி தருவதாயும், கவலை தருவதாயும், கவனம் செலுத்த வேண்டியதாயும் உள்ளன.

விழிப்பும், சுயக்கட்டுப்பாடும், பொறுப்புணர்வும், இலக்கும், முயற்சியும் இல்லாத இளைஞர்கள் திசைமாறி, மோதிச் சிதறி அழியும் நிலை காணப்படுவதோடு, இச்சமுதாயமும் அவர்களால் பெரிதும் பாதிக்கப்படும் அவல நிலையில் உள்ளது

நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்       மாந்தர்க்கு

இனத்தியல் பதாகும் அறிவு

என்ற வள்ளுவர் கூற்று இங்கு நினைவு கொள்ளத்தக்கது

நீரானது சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப மாறும். அது போல மனிதர்கள் யாரோடு சேருகிறார்கள், யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடுவர் – அவர்கள் வாழ்வு மாறுபடும் – அமையும் என்பதே இக்குறள் கூறும் வாழ்வியல் உண்மை!

இங்கு  வள்ளுவர் கருத்தை ஆழமாகச் சிந்தித்து கருத்தில் கொள்ள வேண்டும்.  மனித வாழ்வும், இயல்பும், போக்கும் பிறப்பால் அமையும் என்று கூறவில்லை. மாறாக, நாம் எந்தக் குழுவோடு, கூட்டத்தோடு, கொள்கையாளரோடு சேருகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வு அமையும் என்று கூறுகிறார்.  இதன் மூலம் பிறப்பால் உயர்வு, சிறப்பு, தாழ்வு, இழிவு கற்பிக்கும் சனாதனிகளைச் சம்மட்டியால் அடிக்கிறார்.  எனவே, பிறப்பு, விதி, பூர்வ ஜென்ம பலன் என்ற உண்மைக்கும் அறிவுக்கும் ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளி, நல்லோரைப் பின்பற்றி, அவர்கள் வழி நடந்தால் சிறக்கலாம் என்பதை உறுதிசெய்கிறார்; நம்பிக்கை ஊட்டுகிறார்; தாழ்வு மனப்பான்மையை அகற்றுகிறார்.

மேலும்,

நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை     தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்

என்றும் வள்ளுவர் வரையறுக்கிறார்.  நல்லவர்களுடனான தொடர்பு போன்று துணை செய்வது வேறு எதுவும் இல்லை.  மாறாக, தீயவர்கள் தொடர்பைப் போன்று கேடு தருவதும் வேறு இல்லையென்கிறார்.

அதாவது, நாம் யாரை, எந்த வழியை, எக்கொள்கையைப் பற்றுகிறோம், எவர்கள் வழி நடக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வு சிறப்பதும், அழிவதும் அமையும் என்று ஆணித்தரமாய் அறிவுறுத்துகிறார்.

இதுவும் இளைய சமுதாயம் மிக ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும், பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் நன்றாகத்தான் பிறக்கின்றன.  வானிலிருந்து வரும் மழை நீர் தூய்மையாகத்தான் இருக்கிறது.  அது நிலத்தில் எங்கு வீழ்கிறதோ அந்த இயல்பை அது பெறுகிறது.  கரிசல் மண்ணில் வீழ்ந்தால் கருப்பாக மாறும். செம்மண்ணில வீழ்ந்தால் செந்நிறமாக மாறும். கடலில் வீழ்ந்தால் உப்புச் சுவைபெறும். சாக்கடையில் வீழ்ந்தால் பயனற்றதாக, கேடானதாக மாறும்.

இப்படித்தான் பிள்ளைகள் சேரும் இடத்தைப் பொறுத்து தன இயல்பை, பண்பை, உயர்வை, தாழ்வை, நன்மையை, கேட்டைப் பெறுகின்றன. எனவே, பிள்ளைகள் சேரும் இடம் சரியாக இருக்க வேண்டும்.

இன்றைய நிலை என்ன ?

பெற்றோரின் இன்றைய நிலை – பிள்ளைகள் நிறைய மதிப்பெண் அல்லது முதல் மதிப்பெண் பெற வேண்டும்; எதிர்காலத்தில் பிள்ளைகள் மருத்துவர்களாக ஆகிவிட வேண்டும் என்பது.

கல்வி  நிறுவனங்களின் நோக்கு – தங்களிடம் படிக்கும் மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற வேண்டும்.  அதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பள்ளியை நோக்கி வர வேண்டும் என்பது.

பிள்ளைப் பருவத்தில் மாணவர்களின் விருப்பமும், நோக்கமும் பெரியதாய் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.  பெற்றோரும் கல்வி நிறுவனங்களுமே எல்லாவற்றையும் தீர்மானித்து விடுகின்றன.  அதன் வழி கல்வி வணிக நோக்கில் வந்து விட்டது.

கல்விதான் சமுதாயத்தின் உயர்விற்கு அடிப்படை என்பது உண்மையானாலும், கல்வி என்பது வெறும் மதிப்பெண் சார்ந்ததாக மாற்றப்பட்டது தான் இன்றைக்கு இளைய சமுதாயம் சீர் கெட்டு அழிவதற்கு முதன்மையான காரணம்.

மதிப்பெண், மதிப்பெண் என்ற ஒரே இலக்கில் பிள்ளைகள் வாட்டி வதைக்கப்படுகிறார்கள். வாழ்வியல் அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை.  உடற்பயிற்சி வகுப்புகள் பாடம் நடத்தும் வகுப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன.  நீதிநெறி, நற்பண்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை, இணக்கம், பொது நலம், உதவும் உளப்பாங்கு இவை பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை.

பாடப்பொருள் சார்ந்தவற்றைக் கற்பிப்பது போலவே, மேற்கண்டவற்றையும் கற்பிக்க வேண்டும்.  மாணவர்களை நல்ல குடிமகனாய் உருவாக்க வேண்டும் என்ற இலக்கு இல்லாமலே போய்விட்டது.

இந்த  அவல நிலைதான் இன்றைக்கு மாணவர் சமுதாயம், இளைய சமுதாயம் சீரழியக் காரணமாக அமைந்துவிட்டது.

பொறுப்பு யாருடையது?

இந்த அவலம் அகற்றப்பட்டு இளைய சமுதாயம் விழிப்பும், எழுச்சியும், ஆற்றலும், அறிவும், ஒழுக்கமும், உயர் பணிவும், இலக்கும் பெற யார் யார் பொறுப்பாளர்கள்?

பெற்றோர்:  பெற்றோர் தான்  முதன்மைப் பொறுப்பாளர்கள். தங்கள் பிள்ளைகள் நிறை மதிப்பெண் பெறவேண்டும் என்பதில் காட்டும் முனைப்பைவிட, தங்கள் பிள்ளைகள் ஒழுக்கம் உள்ளவர்களாக, மானம் உள்ளவர்களாக, பகுத்தறிவு உள்ளவர்களாக, பொது நலனுக்குப் பாடுபடக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டவேண்டும்.

ஒழுக்கமும், பண்பாடும், நன்னடத்தையும், நற்பண்பும் இல்லாத கல்வியால் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலில் நன்றாக உணர வேண்டும். மதிப்பெண் பெற வேண்டும் என்ற நெருக்கடியில், வற்புறுத்தலில் மனநோயாளிகளாக மாணவர்கள் மாறி விடுகிறார்கள்.

மாணவர்கள் விளையாட, மற்றவர்களுடன் கலந்துரையாட, உறவாட, பொழுதுபோக்க உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணமே பெற்றோரிடம் தற்போது இல்லை.

ஆசிரியர்கள்: பெற்றோர் மன நிலையில் தான் ஆசிரியர்களும் உள்ளனர். இது வருந்ததக்கது. நான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். 3௦௦௦ பிள்ளைகள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் என்ற பெருஞ்சுமைக்கிடையிலும், படிப்புக்கு அளிக்கும் முதன்மை இடத்தைப்போலவே, மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்தேன்; ஆசிரியர்களையும் உழைக்கச் செய்தேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் கல்வியிலும், வாழ்வியல் அறிவிலும் சிறந்து விளங்கினர். பெற்றோரும் ஒத்துழைத்தனர். இன்றும் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்றனர். இந்த அர்ப்பணிப்பு உணர்வு ஆசிரியர்கள் அனைவருக்கும் வர வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும். ஆசிரியர்களும் பெற்றோரும் கூடி முயன்றால் இளைய தலைமுறையைச் சிறப்பாகக் கட்டமைக்கமுடியும். ஆசிரியர் பணியென்பது மற்ற பணிகளிலிருந்து மாறுபட்டது; வேறுபட்டது. இது வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் தொண்டு ஆகும்! இதை ஆசிரியர்கள் கட்டாயம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அரசு: மேற்கூறிய அனைத்தையும் அரசு முழுமையாகக் கருத்தில் கொண்டு கல்வித்துறையும் கண்காணிப்பில் வைக்க வேண்டும், பாடத்திட்டங்களையும், பாடவேளைகளையும் திட்டமிட வேண்டும். திடீர் ஆய்வுகள், பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தி குறைகளையும், தவறுகளையும் களைய வேண்டும். பள்ளி மாணவர்களைக் கெடுக்கும் – பாதிக்கும் சூழலை பள்ளிக்கருகில் முற்றாக அகற்ற வேண்டும். போதைப் பொருள்கள், புகைப்பொருள்கள் பள்ளிக்கு அருகில் கிடைக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

திரைத்துறையினர்: இளைய சமுதாயத்தை உருவாக்குகின்ற பெரும் பொறுப்பு திரைத்துறையினரிடம் உள்ளது. திரைப்படங்களை வணிக நோக்கில் தயாரிக்காது, மக்களை நெறிப்படுத்தும் நோக்கில், பண்படுத்தும் நோக்கில், கருத்தூட்டும் நோக்கில் தயாரிக்க வேண்டும். படத்தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், அரசு என்று எல்லாத் தரப்பினரும் இந்தப் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

மக்கள் எதை விரும்புகிறார்கள் என்ற அடிப்படையில் திரைப்படங்களை தயாரிப்பதில்தான் அனைத்துச் சீர்கேடுகளும் விளைகின்றன.

புராணக் கதைகளையே விரும்பிப் பார்த்த மக்கள் மத்தியில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் சமூக சீர்திருத்தத் திரைப்படங்களை எடுத்து வெளியிட்டு பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.

ஒழுக்கம், ஒற்றுமை, சிந்தனைக் கிளர்ச்சி, பொதுத் தொண்டு, ஜாதி ஒழிப்பு, மத இணக்கம், போதை எதிர்ப்பு என்று பலவழிகளிலும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கினர். நகைக்சுவை மூலம் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்.

ஆனால், இன்று வன்முறைக் காட்சிகளை, மது அருந்தும் காட்சிகளையும் புகைப்பிடிக்கும் காட்சிகளையும் முதன்மைப் படுத்தி இளைஞர்களைச் சீரழிக்கின்றனர். இப்பழக்கங்கள் இளைஞர்களிடம் வளர்ந்து வருவதற்கு திரைப்படங்களும், அதில் நடிக்கும் கதாநாயகர்களுமே காரணம்.

தணிக்கைக் குழுவினருக்கும் சமுதாயப் பொறுப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பகுத்தறிவுச் சிந்தனைகளை, முற்போக்குச் சிந்தனைகளை கூறினால், உடனே அதை நீக்குகின்ற தணிக்கைக் குழுவினர், இப்படிப் பட்ட காட்சிகளை எப்படி அனுமதிக்கின்றனர் என்ற கேள்விக்குப் பதில் இல்லை! அரசியல் நோக்கங்களுக்காகத் தணிக்கைக் குழுவினர் செயல்படுவதற்கு மாறாக, சமூக அக்கறையோடு வருங்காலத் தலைமுறைக்கு விழிப்பூட்டும் வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். இன்றைக்கு நாட்டில் நடக்கின்ற கொலை, கொள்ளை, வன்புணர்வு, போதைப் பயன்பாடு போன்றவற்றிற்கு முதன்மைக் காரணம் திரைப்படங்களும், அதன் பாத்திரங் களுமேயாகும்.

கதாநாயகன் மது அருந்த வேண்டும், புகைப்பிடிக்க வேண்டும், வெட்டு, குத்து, அடி, உதையில் ஈடுபட வேண்டும் என்பனவற்றை இலக்கணமாகவே ஆக்கிவிட்ட அவலம் அதிகரித்து வருகிறது. கதாநாயகனை அப்படியே பின்பற்றும் இளைய சமுதாயம், இவற்றை அப்படியே பின்பற்றுகிறது. தணிக்கைக் குழுவினர் இவற்றை எப்படி ஏற்கின்றனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது! வேதனை தரக்கூடியதாக உள்ளது!

உணர்வும் உறவும்

இளைஞர்கள் ஆற்றல்மிகு எஞ்சின் போன்றவர்கள். அந்த ஆற்றல் உணர்வு அவர்களை உந்தித் தள்ளுவதில் பெரிதும் வெளிப்படும். மோட்டார் வாகனத்தை எஞ்சின் வேகமாக இழுத்துச் செல்வதுபோல இளைஞர்களை உணர்வு உந்தித் தள்ளும். மோட்டார் வாகன எஞ்சின் இழுத்துச் செல்லும் திசையெல்லாம் வாகனம் சென்றால் அது பள்ளம், கால்வாய், ஓடை, உடைப்பு என்று சென்று கவிழும். பாறையிலும் மரங்களிலும் மோதிச் சிதறும்.

அவ்வாறு நடக்காமல் வாகனம் நாம் விரும்புகின்ற வழியில் செல்ல, திருப்பானை (ஸ்டேரிங்) பயன்படுத்துகிறோம். வாகனங் களை நெறிப்படுத்த ஸ்டேரிங் எப்படிப் பயன்படுகிறதோ அப்படி, இளைஞனை நெறிப்படுத்த அறிவு என்னும் கருவி கட்டாயம் தேவை. அறிவைப் பயன்படுத்தி, சரியான வழியில் அவர்கள் செல்ல வேண்டும்.  அதற்குப் பெற்றோரும், ஆசிரியர்களும், சமுதாயமும், திரைப்படங்களும், எழுத்தாளர் களும், சிந்தனையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்.

வானங்களுக்கு ‘ஸ்டேரிங்’ (திருப்பி) இருப்பது போலவே பிரேக்கும் (நிறுத்தி) இருக்கிறது.  வாகனத்தை கட்டுப்படுத்த, நிறுத்த அது தேவை.  அதே போல, உணர்ச்சி உந்தச் செல்லும் மனிதனைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள், உணர்வடக்கம் தேவை.

வாகனம் சரியாகச் செல்ல பாதையும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இளைஞர்கள் செல்லும் பாதையைச் சரியாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு மேற்கண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும்.  அனைவரும் தங்கள் கடமையைத் தவறாது, சரியாகச் செய்ய வேண்டும்.

பொது நலத்தில் சுயநலம்

இந்தப் பொது நலத்தில் சுயநலமும் காக்கப்படுகிறது. சமுதாயம் சரியாக இருந்தால்தான் நாமும் பாதுகாப்பாக இருக்க முடியும்! நம்பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்றால், இளைய சமுதாயம் சரியாக இருக்க வேண்டும்.  பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் நம் வீட்டின் பாதுகாப்பு என்னவாகும்! சிந்திக்க வேண்டும்.

கொள்கையும் குறிக்கோளும்

கொள்கையின்றி எப்படி வேண்டு மானாலும் வாழலாம், மனம் போன போக்கில், விருப்பப்படியான வாழ்வு என்று கட்டவிழ்ந்து திரிந்தால் அது அவர்களையும் பாதிக்கும்; சமுதாயத்தையும் பாதிக்கும்!

சாலையில் சரியான விதிப்படி வாகனங்கள் செல்லும்போது, விதிகளைப் பின்பற்றாது தாறுமாறாக வாகனங்களை ஓட்டுகின்றவர்களால், எல்லோருக்குமே பாதிப்பும் இழப்பும் ஏற்படும். அப்படித்தான்  சமுதாயத்திலும், கட்டவிழ்ந்து திரிகின்றவர் களால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாடாக, ஒழுக்கமாக, நன்னடத்தையுடன் வளர்க்கப்பட்டு வரும் ஒரு பெண்ணிடம், பலாத்காரமாக ஓர் இளைஞன், தன்னை விரும்பும்படி வற்புறுத்தும் போது, அவள் மறுத்தால் அவளைக் கொலை செய்கிறான். இங்கு சீர்கெட்ட இளைஞனால் அவன் மட்டும் அழிவதில்லை; நல்ல சிறப்பான ஒழுக்கமான பெண்ணின் வாழ்வும் அழிக்கப்படுகிறது.

எனவே, சீரழியும் இளைஞர்களை நெறிப்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். இளைய சமுதாயம் திரைப்படக் கவர்ச்சியிலும் போதை மயக்கத்திலும் சீரழிந்தால் அது சமுதாயத்தைச் சீரழித்து விடும்.

திரைப்படத்தில் நடிக்கின்ற ஒரு நடிகரை விரும்புகின்ற இளைய சமுதாயம் அவரையே தன் தலைவராகவும், வழிகாட்டியாகவும், தன்னை ஆளும் தகுதி படைத்தவராகவும் கொள்வதும், ஏற்பதும், எவ்வளவு பெரிய அறியாமை! அந்த நடிகரைக் காண பல மணி நேரம் காத்துக் கிடப்பது எவ்வளவு பெரிய பிற்போக்கு நிலை. நடிகரைப் பார்த்ததே போதும், என் பிள்ளைகள் இறந்ததைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்று கூறும் உளநிலை எவ்வளவு மோசமானது!

இளம்பெண் ஒருவர் கூறுகிறார் – “அந்த நடிகருக்கு என் குடும்பத்தவர் ஓட்டுப்போடவில்லையென்றால், அவர்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவேன்” என்று. இது எவ்வளவு மோசமான, வன்மம், முட்டாள்தனம்!

ஒருவரை சினிமா நடிகராக ஆதரித்த, விரும்பிய காரணத்தால் அவரையே அரசியல் தலைவராகவும் ஏற்கும் மனநிலை எவ்வளவு மோசமானது, அறியாமையின் உச்சம்.  அவருக்கு அரசியல் அனுபவம் உண்டா? தற்போதுள்ள அரசியல் தலைவர்களைவிட அவர் எந்த வகையில் சிறந்தவர், பொருத்தமானவர்? அவர் மற்றவர்களைவிட என்ன சாதித்துவிடுவார்? அதற்கான என்னென்ன திட்டங்களை அவர் வைத்துள்ளார் என்று எதையும் சிந்திக்காமல் சீர் தூக்கிப் பார்க்காமல், எனக்கு அவரைப் பிடிக்கும்; அவர் நடிப்பைப் பிடிக்கும்; எனவே அவர் நாட்டை ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதும், ஆதரிப்பதும், வாக்களிப்பதும் எவ்வளவு அறியாமை ?

மதவெறியைத் தூண்டி மக்களை ஈர்த்து ஆட்சி அமைத்துவிடலாம் என்ற முடிவோடு மத இணக்கத்தைக் கெடுத்து, கலவரங்களை நிகழ்த்தும் கட்சிகளை மத வெறியுடன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும்,  வாக்களிப்பதும் எவ்வளவு மோசமான மனநிலை.

ஜாதி வெறியைத் தூண்டி ஜாதி அடிப்படையில் வாக்குகளைக் கவர எண்ணுகிறவர்களுக்கு, ஜாதி உணர்வுடன் வாக்களிப்பதும், ஜாதி வெறியுடன் மோதிக் கொள்வதும் எவ்வளவு கொடுமையான செயல்?

பக்தியென்ற பெயரில் மூடச் செயல் களையும், பொருள் இழப்பையும், சுற்றுச் சூழலுக்குத் தீங்கையும் ஏற்படுத்துவது எவ்வளவு கடுமையான குற்றம்! குழந்தைகளைக் கூட பக்தியின் பேரால் கொடுமைப்படுத்துவது ஏற்புடையதா?

ஆக,  இப்படி அறியாமையால் உணர்ச்சி வயப்பட்டு, போதை, திரைக் கவர்ச்சி, ஜாதி வெறி, மத வெறி, தற் செருக்கு, ஆணவம், மான உணர்வு இன்மை போன்ற காரணங்களால் சீரழிந்து, சமுதாயத்தையும் சீரழிக்கும், நெறிகெட்ட, தறிகெட்ட இளைய சமுதாயத்தை நெறிப்படுத்தி, சரியான பாதையில் செலுத்த வேண்டிய கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் உரியது.  அனைவரும் இப்பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும்!n