திருப்பரங்குன்றத்தில் ‘தீபத்தூண்’ என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.
இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ‘‘சுற்றுக்கிரகங்களும்’’ தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.
இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, ‘பக்தி’ முகமூடியுடன் அந்தத் திருப்பரங்குன்றத்தை வைத்து ‘‘அரசியல்’’ செய்யக் கிளம்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்தத் தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணையுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ்
கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).
அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,
தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,
அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
‘‘தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீருப்பினை, அகலப்படுத்துவது போல, ‘‘தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிருவாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.
தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிருவாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.’’
இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய ‘Secular’ என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?
கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?
முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?
இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!
அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!
மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!
உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!
‘Political Agenda’ என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,
‘‘திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்’’ என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குரலெ ழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,
‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடி னால், பரிசீலிப்போம்’’ என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா?
எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்!
மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்!
உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!!





