Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீர சிவாஜியின் கோழை வரலாறு! – மருத்துவர் இரா.கவுதமன்

சிவாஜி ஓர் இந்து அரசனாக முடி சூட்டிக் கொள்ளவே விரும்பினான். சிறு வயதிலிருந்தே இந்து மத வெறியூட்டப்பட்ட நிலையில் ஓர் இந்துப் பேரரசை நிறுவுவதே தன் குறிக்கோள் என நினைத்தான். ஆனால், எந்த மத உயர்வுக்குப் பாடுபட்டானோ, அதே மதம் அவனை “சூத்திரன்”என்று சிறுமைப்படுத்தியது. உதயப்பூர் அரசன் ஜெய்சிங் முகலாயப் பேரரசின் படைத் தளபதியான ஜாபர்கான் என்பவனுக்கு எழுதிய கடிதத்தில், “சிவாஜியின் மரபும், ஜாதியும் மிகமிகக் கீழ்த்தரமானது. அவன் கையினால் தொட்டதைக் கூட என் போன்றோர் உண்ண மாட்டோம். சிவாஜி ஓர் அரச மரபினன் அல்லன், அவன் ஒரு “சூத்திரன்” எனக் குறிப்பிட்டு உள்ளான். எல்பின்ஸ்டோன் என்ற வரலாற்றுக் குறிப்பாளன், மராட்டியர்கள் பெரும்பாலும் மனுதர்ம சாஸ்திரப்படி “சூத்திரர்களே என்றும், சிவாஜியும் அம்மரபையே சேர்ந்தவன் என்றும் குறிப்பிடுகிறான். சிவாஜி தனது 44ஆம் வயதில்தான் “உபநயனம்” செய்துள்ளான். “துவிஜாதி” நிலையை உண்டாக்கும் உபநயனம் சிறு வயதிலேயே செய்யப்படும் ஒரு சடங்கு. பார்ப்பனர்கள் மட்டுமின்றி, சத்திரியர்களும் அவ்வழக்கத்திற்கு உட்பட்டவர்கள் சூத்திர சிவாஜிக்குப் பார்ப்பனர்களால் சத்திரியனாகத் தகுதி வழங்கப்பட்டது அவன் 44ஆம் வயதில்தான். அதனால்தான் சிறு வயதில் நிகழ்த்தப்பட வேண்டிய அந்தச் சடங்கு 44ஆம் வயதில் நடந்தது.

 

(ஆதாரம்:பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும் கோ. இமயவரம்பன்.)

“சூத்திர” சிவாஜிக்குப் பட்டமேற்க உரிமையில்லை, அரச பதவி சத்ரியருக்கே உரியது என வைதிக உணர்வில் ஊறித் திளைத்த மராட்டியப் பார்ப்பனர்கள் சிவாஜிக்கு முட்டுக்கட்டை போட்டனர். அவர்கள், சிவாஜியிடம், “சூத்திரனான நீ,சாஸ்திர விரோதமாக சத்ரியனுக்கு உரிய உரிமையும்,பெருமையும் அடைய ஆசைப்படக் கூடாது, அது இந்து தர்மத்திற்கும், கடவுளுக்குமே அடுக்காது” எனப் பலவிதங்களில் குழப்பினர். சூத்திரன் முடிசூட்டிக் கொள்ள முற்பட்டால், இந்தியாவின் பல பாகங்களில் இருக்கும் கற்றுவல்ல பார்ப்பனர்கள், முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்! என்றும் அவர்களின் பெருமைக்குரிய ஆசீர்வாதங்கள் மன்னனுக்குக் கிடைக்காமல் போய்விடும் என்றெல்லாம் பயம் காட்டினர். இந்த எதிர்ப்பாளர்களின் வாய்களை அடைக்கும் நோக்கத்தோடு சிவாஜி தலைசிறந்த கற்றறிந்த ஒரு பார்ப்பனப் பண்டிதனைக்கொண்டு தான் ஓர் அப்பழுக்கற்ற “சத்ரியன்”தான் என்றும், முடி சூட்டிக் கொள்ள முழுத் தகுதியும் உடையவன்தான் என்று சொல்ல வைத்து அதன் மூலம் அரசனாக விரும்பினான். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ. இமயவரம்பன்)

அக்காலகட்டத்தில் காசி நகரைச் சேர்ந்தவனும்,இந்திய உப கண்டத்தில் மிகவும் புகழ் வாய்ந்த பண்டிதனுமான “விஸ்வேஸ்வர் என்ற காகப்பட்டன்” என்ற பார்ப்பானை அணுகலாம் என சிவாஜியின் சிறந்த மதியூகி அமைச்சனான பார்ப்பனன் “பாலாஜி அவுஜி” என்பவன் காகப்பட்டனைப் பற்றி சிவாஜியிடம் எடுத்துரைக்கிறான். ‘உங்களை மன்னனாக்கும் வாய்ப்பைப் பெற்றவன் காகப்பட்டன்தான். இக்காலத்தில் சிறந்த அறிஞர். சமஸ்கிருத விற்பன்னர், இறையியல் வல்லுநர், நான்கு வேதங்களையும் ஆறு தத்துவங்களையும், இந்துத்வ இறை நூல்கள் அனைத்தையும் பழுதறக் கற்ற பண்டிதர். “பிரம்ம தேவர்” என்றும் “வியாசர்” என்றும் பாராட்டப் பெற்றவர். அவர் உங்களை “சத்திரியன்” என்று ஏற்றுக் கொண்டால் அனைவரும் ஒத்துக் கொள்வர் என்று கூறினான். சிவாஜியும் அதை ஏற்றுக் கொண்டான். அதனால்தான் காகப்பட்டர் இவ்விவகாரத்தில் உள்நுழைந்தான் (ஆதாரம்: சிவாஜி முடி சூட்டலும், பார்ப்பனியமும் – சர்.ஏ.இராமசாமி முதலியார்)

காசி நகருக்குச் சென்ற சிவாஜியின் அமைச்சன் பாலாஜி அவுஜி, காகப் பட்டனைச் சந்தித்தான். அவனிடம் அனைத்து செய்திகளையும் கூறிய பாலாஜி சிவாஜிக்கு முடி சூட்ட வேண்டினான். ஆனால் காகப்பட்டனோ, பண்டைய இந்துத்வ வேத நூல்கள்படி, சத்ரிய வகுப்பைச் சேர்ந்தவனே சட்டப்படி அரசராக முடியும். ஹிந்துக்களின் (பார்ப்பனர்களின்) மதிப்பையும், வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியும். சிவாஜியின் முன்னோர் சத்ரியர்களும் அல்லர்; துவிஜாதியினரும் அல்லர். அவன் பாட்டனார் ‘ஏர் உழவர், “சூத்திரர்”. அவ்வகுப்பில் பிறந்த “புதுப் பெருமையாளன்” ஒருவன் சத்ரிய உரிமைகளுக்கும், பெருமைகளுக்கும் எவ்வாறு ஆசைப்பட முடியும்? அதிகார முறைப்படி சிவாஜி, ஒரு “சத்ரியன்” என்று அறிவித்தால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதி பார்ப்பனர்களும் முடிசூட்டு விழாவிற்கு வந்து வாழ்த்துவார்கள்” என மறுத்தான். பின் சிவாஜியின் அமைச்சன் அவனுக்குப் பெரும்பொருள் கொடுப்பதாக ஆசை காட்டினான். ஏறக்குறைய 5,00,0000 ரூபாய்க்கு இணையான பணத்தைப் பெற்றுக் கொண்ட காகப்பட்டன், “பாலாஜியும் பிறரும் கூறியபடி, சிவாஜி, உதய்பூர் மகாராணாவின் தொடர் வழி வந்த தூய்மையான” சத்ரிய மரபைச் சேர்ந்தவன்”என்று முடிவாக அறிவித்தான் கையூட்டுப் பெற்று பிரபல பார்ப்பான் குத்திரனை, சத்ரியனாக்கிய கதை இதுதான். (பார்ப்பான் நினைத்தால் “பொய்யை” உண்மையாக்குவான், உண்மையைப் ”பொய்”யாக்குவான், கல்லை கடவுளாக்குவான்! இல்லாக் கடவுளை இருக்கென நம்ப வைப்பான் (ஆதாரம்:சிவாஜி முடிசூட்டலும், பார்ப்பனியமும் சர்.ஏ.இராமசாமி முதலியார்)

கடைசியில் ஒரு வழியாக காகப்பட்டன் சிவாஜிக்கு முடிசூட்ட ஒத்துக் கொண்டவுடன், சிவாஜி பெரும் மகிழ்ச்சி அடைந்தான். உதயப்பூர், ஆம்பர் போன்ற நாடுகளில் நடந்த முடிசூட்டி விழா நடந்த விதத்தை அறிந்து வரத் தூதர்களை அனுப்பினான். இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்த கற்றறிந்த பார்ப்பனப் புரோகிதர்களுக்கும், பண்டிதர்களுக்கும் முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு அனுப்பினான். 11,000 பார்ப்பனர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்களையும் சேர்த்து அவர்கள் எண்ணிக்கை 50,000த்தை நெருங்கியது. ஏராளமான பார்ப்பனர்கள் அழைக்காமலேயே வந்தனர். ரெய்கரில் நான்கு மாதங்கள் இவர்கள் அனைவருக்கும் இனிப்புகளோடு விருந்து வழங்கப்பட்டது. முடிசூட்டு விழாவிற்கு பல நாட்டுப் பிரதிநிதிகள், தூதர்கள், ஆங்கிலேயர்கள், அய்ரோப்பிய வணிக சமூகத்தினர். பார்வையாளர்கள் என ஒரு லட்சம் பேருக்கும் மேல் நான்கு மாதங்கள் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. தினமும் மதச் சடங்குகளும், ஜீஜிபாய், குரு ராமதாசர், பாலன்பட்டர் ஆகியவர்களை வணங்கி ஆசி பெறுவதிலும் ஈடுபட்டு, மற்ற வேலைகளைக் கவனிக்காமல் பார்ப்பனர்களைக் கவனிப்பதிலுமே காலம் கழித்தான். (ஆதாரம்:பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ. இமயவரம்பன்.)

1674ஆம் மராட்டியத்தின் புகழ் வாய்ந்த கோயில்களுக்கெல்லாம் சிவாஜி சென்று, கடவுள்களைத் தொழும் சடங்கோடு “முடிசூட்டு விழா” ஆரம்பமானது. முதலில் “சிப்ளம்” என்ற ஊரின் பரசுராமர் கோயில், நான்கு நாட்கள் கழித்து அவனே பிரதாப்கரில் கட்டிய பவானிக் கோயில் (அக்கோயிலுக்கு ஒன்றேகால் மணங்கு எடையுள்ள தூய்மையான தங்கக்குடை ஒன்றையும், பலவிதமான பொன்னும், பொருளும் சிவாஜி வழங்கினான்) ரெய்கருக்குத் திரும்பிய சிவாஜி, அவன் குடும்பப் புரோகிதன் “பாலன் பட்டன்” என்பவன் கூறியபடி, உள்ளூர்க் கடவுள்களான மகாதேவ், பவானி ஆகிய தெய்வங்களை வணங்கி,அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்களுக்குப் பொன்னும், மணியும், பொருளும் வழங்கி அவர்களைக் கவுரவித்தான். (ஆதாரம்:பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ. இமயவரம்பன்)

முடி சூட்டும் முன்,”சூத்திர சிவாஜியைப் பரிசுத்தப்படுத்தும் சடங்குகளின் ஒரு பகுதியாகவே கோயில், கோயிலாக பார்ப்பனர்களால் அனுப்பப்பட்டான். சூத்திரனுக்கு முடி சூட்டும் நிகழ்வால் ‘தெய்வக் குத்தம்” ஏற்பட்டு விடக்கூடாதே என்பதால்தான் இந்த ஏற்பாடு! முடிசூட்டு விழாவிற்கு முன்பாகச் சிவாஜியைச் சத்ரியனாக்க மேலும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பார்ப்பனர்கள், மே மாதம், 28ஆம் தேதி அவனின் மூதாதையர்களுக்காகவும், அவன் சத்ரிய குல தர்மங்களைச் செய்யாமல் விட்டதற்காகவும், அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவுவதற்காகவும் பிராயச்சித்தங்கள் செய்யவும் பணிக்கப் பட்டான். சிவாஜியும், தான் ஒரு சூத்திரன் என்ற தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகியிருந்த காரணத்தால் பார்ப்பனர்கள் சொன்னதையெல்லாம் செய்யும் அடிமை போல் ஆகி விட்டான். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ. இமயவரம்பன்)

வட நாட்டு சமஸ்தான மன்னர்கள், தாங்கள் சுத்த சத்ரியர்கள் இரு பிறப்பாளர்கள் என்று காட்டிக் கொள்ள ‘பூணூல்” அணிவது வழக்கம். பார்ப்பனர்களும், மனுநீதிப்படி சத்ரியர்களுக்கு அதற்கு உரிமை இல்லாவிடிலும் அரசனின் அதிகாரங்களைப் பொறுத்து, அந்தச் சடங்கிற்கு ஒத்துக் கொண்டனர். 43 வயதுவரை “சூத்திரனாக இருந்த சிவாஜி, 44 வயதில் பார்ப்பனர் சதியால் “சத்ரியனாக” உருப்பெற்றான். துவி ஜாதியினருக்கு சிறிய வயதிலேயே நடக்கும் பூணூல் அணியும் சடங்கு, சிவாஜிக்கு 44 வயதில் காகப்பட்டனால் நடத்தப்பட்டது. பூணூல் அணிவிக்கும் சடங்கு முடிந்த மறுநாள் சிவாஜி குத்திரனாக இருந்த போது (ஏற்கெனவே) மணந்திருந்த தன் இரு மனைவிகளையும் சத்ரிய முறைப்படி இரண்டாம் முறையாக மணம் செய்து கொண்டான். இது போன்ற மேல் வருணத்தார்க்குரிய அத்துணை சடங்குகளும் சிவாஜிக்கு காகப்பட்டனால் ஒவ்வொருநாளும் செய்யப்பட்டனு. (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ.இமயவரம்பன்.)

–  (தொடரும்)