சித்த மாசு நீக்கல்
செய்யும் அறத்தில் பெரிதென்றார்!
குத்துஞ் சொல்லே காயம்
கொடுக்குந் தீயின் மேலென்றார்!!
பத்தும் வேண்டாம் ஒன்றே
பகையை முடிக்கும் பணமென்றார்!
கத்துங் கோபந் தவிர்த்துக்
கணத்தில் மறத்தற் குணமென்றார்!!
சொல்லில் கனிசேர்; காயால்
துளியும் பயனென் சொல்லென்றார்!
வில்லும் பூட்டி முயலை
விடுத்தே யானை பொருதென்றார்!!
இல்லா திரக்கும் ஏழ்மை
இருப்பின் இறையைத் துரத்தென்றார்!
கல்லில் பொறித்தார் நெறிகள்
காலம் ஞாலந் தினம்போற்றும்!!
முத்து முத்தாய்க் குறளால்
முப்பால் திரட்டித் தந்தாரே!
செத்துஞ் செல்லும் வீட்டைச்
சேரா தறுத்து நின்றாரே!!
எத்தர் சாதி மதங்கள்
இல்லா தொழித்துச் சென்றாரே!
ஒத்தீர் பிறப்பால் என்றே
ஓங்கி உரைத்து வென்றாரே!





