திராவிடர்கள் கொண்டாடும் திருநாள்! — பொங்கல்
தொல்லுழவின் சீர்போற்றும் பெருநாள்!
பிரிவினையாம் சாதிமதம் புறந்தள்ளி வைத்துவிட்டே
ஓரினமாய்த் திராவிடர்கள் திரள்நாள்! — பொங்கல்
உயிரொக்கும் எனப்பாடும் குறள்நாள்!
புத்தாண்டுப் பொங்கல் பொங்கட்டுமே! — மஞ்சள்
கொத்தாக இன்பம் மணக்கட்டுமே! – -கரும்பின்
தித்திப்பாய் வாழ்வும் இனிக்கட்டுமே! — தமிழ்
எத்திக்கும் ஓங்கி ஒளிரட்டுமே!
வான்மழை பொழிந்தே வளமோங்கட்டும்! – உழவும்
மேன்மையைப் பெற்றே மிகைகூடட்டும்! — வறுமை
தீண்டிடா வளமே திளைத்தோங்கட்டும் – கொடுந்
தீண்டாமை ஒழிந்து மாண்போங்கட்டும்!
மனிதத்தை மதியா மதம்நீங்கட்டும் — மதியின்
பிணிநீங்கி அன்பின் அருளோங்கட்டும்! — நெஞ்சில்
கனிவோங்கிக் கருணை கரைதாண்டட்டும்! — அறிவு
அணிசூடி மாந்தர் இனமோங்கட்டும்!
தலைமுறை இழிவைத் துடைத்தழித்தார்! — சதி
வலைதனை அறுத்து வாழ்வளித்தார்! — தமிழர்
நிலைதனை உயர்த்த நிதமுழைத்தார்! — பெரியார்
சிலையென இருந்தும் காத்தணைப்பார்!
பெரியாரின் பேர்சொல்லிப் பொங்கலிடு! — மெழுகாய்க்
கரைந்தாரின் தொண்டுக்குப் பொங்கலிடு! — நெஞ்சம்
நிறைந்தாரின் நினைவேந்திப் பொங்கலிடு! — நம்மைக்
கரைசேர்த்த கலம்போற்றிப் பொங்கலிடு!
மடமையை எரித்துப் பொங்கலிடு! — சங்கி
மதவெறி தகர்த்துப் பொங்கலிடு! — தனி
உடைமையை ஒழிக்கப் பொங்கலிடு! — தமிழர்
படைவெல்ல வாழ்த்திப் பொங்கலிடு!
அரியணை அமர்ந்த தமிழோங்கட்டும்! — கதிர்
விரித்திடும் ஒளியில் பகையோடட்டும் — மீண்டும்
திராவிட மாடல் வென்றாளட்டும்! – -வெற்றிச்
சரித்திரம் நாளை நமதாகட்டும்! n





