Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சபரிமலை மகர ஜோதி உண்மையும் புரட்டும்! – சிகரம்

பக்தியைப் பரப்பி வளர்க்க நினைக்கின்றவர்கள், மக்களை ஈர்க்க அவர்களைப் பக்திப்பிடியில்  வைத்திருக்க வழக்கமாகச் செய்யும்  மோசடி என்பது அற்புதங்களை நிகழ்த்துவது தான்.

புட்டபர்த்தி சாயிபாபா தன் சக்தியை மக்கள் நம்புவதற்காகச் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார். வாயிலிருந்து லிங்கம் கக்குதல், வெறுங்கையில் விபூதியை வரவழைத்தல் போன்றவற்றைச் செய்தார். இவற்றைக் கண்ட பக்தர்கள் அவரிடம் உள்ள தெய்வ சக்தியால்தான் அவற்றைச் செய்கிறார் என்று நம்பினார்கள். அவரை கடவுளின் அம்சமாகவே வணங்கினர்.

ஆனால், அவர் செய்வது அனைத்தும் தந்திரங்களே தவிர தெய்வ சக்தியால் அல்ல என்று மறுத்து பகுத்தறிவாளர்கள் பிரச்சாரம் செய்தனர். தந்திரங்களால் தான் சாய்பாபா அவற்றைச் செய்கிறார் அதை நிரூப்பிக்கத் தயார் என்றும் சவால் விட்டனர். சாய்பாபா செய்வதை பகுத்தறிவாளர்களும் செய்து காட்டினர்.

சாய்பாபாவிற்குக் குடல் வால் சம்பந்தப்பட்ட நோய் வந்து, அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதால் அவரது சக்தி பொய் என்று உறுதி செய்யப்பட்டது. அவரும் ஒரு சராசரி மனிதர் தான் என்று உறுதியானது.

ஒரு தனி நபரின் சக்தியைக் காட்ட எப்படி அவர் அற்புதங்களைச் செய்து காட்டுகிறாரோ அதே போல் ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு மகத்துவம் உண்டாக்க அங்கு சில அற்புதங்கள் நிகழ்வதாகக் கூறுவர். அதை நம்பி மக்கள் அங்கு அலை அலையாய்க் கூடுவர்.

இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்ட கேரள சபரிமலை அய்யப்பன்  கோவிலை நிருவாகம் செய்யும் தேவஸ்வம் போர்டு உறுப்பினர்களும் மகர ஜோதி மலையில் தோன்றுவதாய்க்கூறி ஓர் அற்புதப் புரட்டைச் செய்தனர். தை மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அய்யப்பன் சக்தியால் ஜோதி தெரிகிறது என்று கூறி மக்களுக்குக் காட்டினர். மக்களும் பல ஆண்டுகளாய் அய்யப்பன் சக்தியால் மகர ஜோதி தெரிவதாய் ஒரு செய்தியைப் பரப்பினர். மக்களும் அதை நம்பி ஆயிரக்கணக்கில் அச்ஜோதியைக் காணக் கூடினர்.

கேரளாவைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி ஒரு மோசடி என்றும், அது தானே தெரிவதில்லை என்றும், அது மனிதனால் ஏற்றப்படுவது தான் என்றும் பிரச்சாரம் செய்தனர். என்றாலும், மக்கள் மகர ஜோதி உண்மையில் அய்யப்பன் சக்தியால் தான் தோன்றுகிறது என்று நம்பினர்.

எனவே, மக்களுக்கு உண்மையை உறுதி செய்ய பகுத்தறிவாளர்கள் பொன்னம்பலமேட்டில் எவ்வாறு தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் இரகசியமாகத் தீபம் ஏற்றுகிறார்கள் என்பதை மறைந்திருந்து கண்காணித்துக் கண்டுபிடித்தனர். அதுமட்டுமல்லாமல் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் ஜோதி ஏற்றிக்காட்டுவது போல அதே நேரத்தில் இவர்களும் ஒரு ஜோதியை மறைவான இடத்திலிருந்து காட்டினர்.

ஒரே நேரத்தில் இரண்டு ஜோதி தெரியவே மக்களுக்கு (பக்தர்களுக்கு) ஒரே குழப்பம் அதன் பிறகு தான் பக்தர்களும் சிந்தித்தனர். அய்யப்பன் கோவில் சார்ந்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடந்த போது மகர ஜோதி பற்றி உண்மையை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், அது குறித்து தேவஸ்வம் போர்டு ஓர் அறிக்கை தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதன் தலைவர் எம். ராஜகோபாலன் நாயர் தலைமையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் ஒரு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன்னியூர் நாராயணன் நம்பூதிரி மற்றும் பல பூசாரிகள், தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

அக்காலகட்ட முடிவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தருவதற்கு முன்பே, செய்தியாளர்களைச் சந்தித்து, மகரஜோதி பற்றிய உண்மையை விளக்கிக் கூறினர். இராஜகோபாலன் நாயர். மகர ஜோதி என்பது தானே தோன்றுவதில்லை, அது மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்ற உண்மையைத் தெரிவித்தார். அதன் மூலம் மகர ஜோதி பற்றிய மர்மம் விலகியது. பகுத்தறிவாளர்களுக்கு வெற்றி கிட்டியது. பக்தர்களுக்கும், மக்களுக்கும் உண்மை புரிந்தது. n