கே : நீக்கப்பட்டவர்கள் போலி வாக்காளர்கள் என்று எடப்பாடி கூறுவது தப்பல்லவா? வாடகைக்குக் குடியிருக்கின்றவர்கள் வீடு மாறுவதால்தான் 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புது இடத்தில் அவர்களுக்குப் படிவம் தரப்படவில்லை. எனவே, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வீடுவீடாக ஆய்வு செய்து அவர்களைச் சேர்க்க முயற்சி செய்வீர்களா?
– எல்.கணேஷ், திருச்சி.
ப : தங்களுடைய ஆலோசனையை தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். நமது பங்களிப்பும் இருக்கும். நமது கழக வாக்காளர் பெருமக்களுடைய நினைவுக்கும், செயலுக்கும் கொண்டு செல்வோம்!
கே : நவோதயா பள்ளி வழக்கில் நவோதயா பள்ளி அமைப்பதற்குரிய இடங்களைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்கும்படி உச்சநீதிமன்ற நீதிபதி, வலியுறுத்தியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ச.தங்கவேல், மதுரை.
ப : அரசியலமைப்புச் சட்ட நெறிப்படி வழங்கப்பட்ட சரியான தீர்ப்பு அல்ல இது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஏழாவது அட்டவணை அரசியல் அதிகாரப் பங்களிப்புப் பற்றிய பகுதியைப் புறந்தள்ளிய தீர்ப்பு இது!

கே: ‘‘தீபமேற்றத் தீக்குளிப்பு’’ என்று திருப்பரங்குன்றத்தில் திசை திருப்பும் முயற்சியையும், மோட்ச தீபம் ஏற்றும் முயற்சியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வை.சகுந்தலா, சென்னை.
ப : பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புதலின் – குறிப்பாக இளைஞர்கள், வாலிபர்களுக்குப் போதிக்க வேண்டியதன் – அவசர, அவசியமாகவே இதைப் பார்க்கிறோம். என்றாலும், மறைந்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்; குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றோம்.

கே: ‘‘புத்தகத் திருவிழாவைத் திராவிட இயக்கத்தின் மேடையாகப் பயன் படுத்துகின்றனர்’’ என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பு.கலியபெருமாள், வில்லிவாக்கம்.
ப : ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது! விளம்பரம் தேடும் வியாதியும்கூட!

கே : ‘‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்’’ என்று பெயர் எழுதப்பட வேண்டும் என்ற போராட்டம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
– செ.பூங்குழலி, வல்லம்.
ப : சட்டப்படி என்ன பெயரோ, அப்படி முழுமையாக எழுதுவதே சரி! செய்வார்கள் என்றே நம்புகிறோம்!
கே : நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் நாமும் என்ன செய்யவேண்டும்?
– கு.மகேஷ், காஞ்சிபுரம்.
ப : செய்துகொண்டே உள்ளோம்! பிரச்சாரம், துண்டறிக்கை, அறப்போராட்டம் எனத் தொடர்கிறது.
கே : ‘‘தற்கொலைகளின் தலைநகரம் தமிழகம்’’ என்ற ஆளுநரின் கருத்து வன்மத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ம.பஞ்சவர்ணம், திருத்தணி.
ப : தமிழ்நாடு அரசுக்கு எதிரான அவரது அன்றாட அவதூறுகளில் இது இப்போதைய ‘லேட்டஸ்ட்’, அவ்வளவே!
கே : ‘‘பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்பியே மடிவேன்!’’ என்று மதுரையில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் மதவெறிக் கும்பலுக்கு எதிராய் ஆற்றிய உரையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– அய்.மகிழ்மதி, புதுவண்ணாரபேட்டை.
ப : மடிய வேண்டியதில்லை; மகிழ்வுடன் வாழ்க, பரப்புக! காரணம், அவைதான் காலத்திற்கேற்ற அருமருந்து. அவை உலகளவில் பரவிக் கொண்டேதான் உள்ளன!
கே : நடிகர்கள் கவர்ச்சியில், போதைப் பொருள் மயக்கத்தில் இளைய சமுதாயம் சீரழிவதைத் தடுக்க ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை ஒத்த நோக்குள்ளவர்களைக் கொண்டு செயல்படுத்துவீர்களா?
– கு.சந்தோஷ், விருகம்பாக்கம்.
ப : காலம் கனிந்து வருகிறது என்பதுடன், ‘அவசியம்’ என்பதால், விழிப்பை, புதிய எழுச்சியைக் கட்டாயம் உருவாக்கும்! உருவாக்குவோம்!






