திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நினைவுநாள் சிந்தனை
(ஜன. 15)
தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ‘ஞா.தேவநேயப் பாவாணர்’ அவர்களை ‘மொழிஞாயிறு’ என அழைக்கின்றோம்.
அறிஞர் பாவாணருக்கு மொழிஞாயிறு பட்டம் எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது. புதிய செய்தி ஒன்று கிடைத்தது. 4.10.1957ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத்திப் பாவாணருக்கும். பொன்னம்பலனாருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் “தமிழ் மறவர்” என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, பாவாணர் நினைவலைகள் (பக் 197) என்னும் நூலில் உள்ளன.
இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங் கப்பட்ட பட்டம் ‘திராவிட மொழிநூல்’ ஞாயிறு என்பதுதானே அன்றி மொழி ஞாயிறு என்பதன்று சுருக்கம் கருதி திராவிடஎன்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. மூதறிஞர் ராஜாஜி நகர் என்பது எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால், தியாகராயர் நகர் என்பது தி. நகர் என்றும்,கலைஞர் கருணாநிதிநகர் என்பது கே.கே.நகர் என்றும் சுருங்கிவிடுகின்றது. திராவிட மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் திராவிட மொழிநூல் ஞாயிறு என்றே எழுதுவோம்.சுருக்கம் தேவைப்படின் திராவிட ஞாயிறு என்போம்.
ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் – ஏமாறப் பிறந்தவன் தமிழன் என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற்புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவைகள். அதாவது தமிழனுக்கு உரியது, பெருமை தரக்கூடியது எதெது உண்டோ, அதெல்லாவற்றையும் உருவைமாற்றி பெயரை மாற்றிச் சமஸ்கிருதக் கலப்பை – ஆரியக் கலப்பையுடையது போல ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக் கொண்டது. பொங்கல் சங்கராந்தியாக ஆனது.
– ‘குடிஅரசு’, 22.01.1949





