Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கரிகால் வளவன் – ஆறு. கலைச்செல்வன்

நான் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். தமிழ் பழமையான மொழி. சீக்கிரம் நான் உங்களோடு தமிழில் பேசுவேன் என்று நம்புகிறேன்”, தொலைக்காட்சியில் வடநாட்டு அமைச்சர் ஒருவர் பேசியதைக் கேட்டாள் இனியா.

பத்தாம் வகுப்பு படித்துவரும் அவருக்குப் பல சந்தேகங்கள் எழுந்தன.

ஓராண்டுக்கு முன் இந்த அமைச்சர் வேறொரு மாநிலத்தில் பேசும்போது தமிழ்நாட்டு மக்களை இழிவாகப் பேசியதை நினைவு கூர்ந்தாள்.

மேலும் வடநாட்டு அமைச்சர்கள் சிலரும், இங்குள்ள சிலரும் இராஜராஜசோழன் பற்றி அதிகம் புகழ்ந்து பேசியதையும் கேட்டாள். செய்தித்தாள்களிலும் படித்தாள்.

அவளுக்குப் பல சந்தேகங்கள் எழுந்தன. அந்தச் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள தனது தாத்தா கலையரசனை நாடினாள் இனியா.

“தாத்தா, தமிழில் பேச முடியவில்லையே என்று ஒரு வடநாட்டு அமைச்சர் வருத்தப்படுகிறாரே, உண்மையிலேயே அவர் வருத்தப்படுகிறாரா?”

தாத்தா சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்,

“அவரெல்லாம் தமிழில் பேசாமல் இருந்தாலே நல்லது. உண்மையில் அவருக்கு தமிழின் மீது, தமிழ்நாட்டு மக்களின் மீது அன்பிருந்தால், அங்கே ஏதேதோ அரசுத் திட்டங்களைப் போடுகிறார்களே, அதில் ஒன்றுக்காவது தமிழில் பெயர் வைக்கலாமே?

அவ்வாறு அவர்கள் செய்வதே கிடையாது. மாறாக வளர்ச்சியடைந்துள்ள தமிழ்நாட்டை முடக்க வேண்டும், அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்”.

“அப்படின்னா மொழியைக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார்களா தாத்தா?”

“ஆமாம் இனியா. மொழி என்பது நமது எண்ணங்களையும், கருத்துகளையும் மற்றவர்களுக்குப் புரியவைக்கக் கூடிய ஒரு கருவி. நாம் பேசும் தமிழ்மொழி மிகவும் பழமையான, வளமான மொழி. ஆனால், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் பேசும் மொழியை நம்மீது திணிக்க நினைக்கிறார்கள். அந்தத் திணிப்பைத்தான் நாம் எதிர்க்கிறோம்,”

“தாத்தா, உலகில் மிகவும் பழமையான மொழி எது?”

“எவ்வளவோ மொழிகள் தோன்றியிருக் கின்றன. நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்றன. நான் சில மாதங்களுக்கு முன் எகிப்து நாட்டுக்குச் சென்று வந்தேன் அல்லவா? அங்கு சில உண்மைகளை நேரில் அறிந்தேன். நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் நாடுகளில் எகிப்தும் ஒன்று. அந்த நாட்டின் தலைநகரான கெய்ரோவில் ஓர் அருங்காட்சியகம் உள்ளது. நான் அங்குச் சென்று பார்த்தேன். அங்கே களிமண்ணால் செய்யப்பட்ட கற்பலகை ஒன்று உள்ளது. அதற்கு ‘நார்மர் கற்பலகை’ என்று பெயர். நார்மர் என்பவர் எகிப்தின் முதல் பாரோ மன்னர் ஆவார். அந்தக் கற்பலகையில் எழுத்துகள் உள்ளன.”

“அவை பழமையான எழுத்துகளா தாத்தா?”,

ஆர்வமுடன் கேட்டாள் இனியா.

“ஆமாம். சித்திரங்கள், ஓசைகளாலான எழுத்துகள். அவை 5100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டனவாம். நைல் நதிக்கரையில் சிறப்பான நாகரிகம் இருந்தது. அதேபோல் சுமேரிய நாகரிகம் இருந்தது. சுமேரியர்கள் களிமண் பலகைகளில் காப்பியங்களே கியூனிபார்ம் என்ற எழுத்து முறையில் எழுதியிருக்கிறார்கள்”.

இவ்வாறு தாத்தா சொல்லிக் கொண்டிருந்தபோது இனியா இடைமறித்தாள்.

“சுமேரியர்கள் என்பவர்கள் யார் தாத்தா?”

“சுமேரியர்கள் என்பவர்கள் யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் நதிகளுக்கு இடைபட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். அந்தப் பகுதிக்கு மெசபட்டோமியா என்று பெயர். இரு நதிகளுக்கு இடைபட்ட பகுதியே மெசபட்டோமியா எனப்படுகிறது. 6000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய நாகரிகம் அது. எழுத்து வடிவமும் கொண்டு சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட மொழி சுமேரிய மொழி. அதே போல் இத்தாலியில் 2700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி இலத்தீன் மொழி. பண்டைய கிரேக்க மொழி, சமஸ்கிருதம், மற்றும் பல மொழிகள் எல்லாம் இப்போது பேசப்படுவதில்லை. அந்த எழுத்து வடிவங்களும் இல்லை. ஆனால்…?”

அவர் முடிக்குமுன்பே “ஆனால்…? என்ன தாத்தா?”, என்று ஆவல் பொங்கக் கேட்டாள் இனியா.

“நமது தமிழ்மொழியானது உலக மொழிகளில் மிகத் தொன்மையானது. உலகில் உள்ள பல மொழிகளும் தமிழிலிருந்து வந்தவையே! உலகில் தோன்றிய தொன்மையான மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்துவிட்டன. தொன்மையான மொழிகளில் இலக்கிய, இலக்கண வளம் மிகுந்து இன்றும் மக்களால் பேசப்படும் செம்மொழியாக தமிழ்மொழி மட்டுமே திகழ்கிறது”. சமஸ்கிருதமே தமிழ்ச்சொற்களைப் பெருமளவில் பயன் படுத்தி செயற்கையாக பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்றாலே செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றே பொருள். வேதங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது என்பதே தப்பு. அது சந்தஸ் என்ற மொழியால் கூறப்பட்டது. அதுவும் தமிழின் கலப்பால் உருவானதே!” என்றார் தாத்தா.

வியப்புடன் கேட்ட இனியாவுக்கு மேலும் சில தகவல்களைச் சொன்னார் தாத்தா.

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்வெட்டு தமிழ்மொழியிலான கல்வெட்டுதான். அதோடு மட்டுமல்லாமல் தங்கத்தால் எழுதப்பட்ட முதல் கல்வெட்டும், தமிழ்மொழியிலான கல்வெட்டுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் கொண்ட மொழியும் தமிழ்மொழிதான். முதல் தத்துவ நூலான நீலகேசியை எழுதியதும் ஒரு பெண் எழுத்தாளர்தான். வாழ்க்கை நெறிமுறைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கிய, உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் எழுதப்பட்டதாகும்”.

“தாத்தா, அந்தக் காலத்தில் மன்னர்கள் திருக்குறளைப் பரப்பினார்களா?” என்று கேட்டாள் இனியா.

“இல்லை. அதற்கு மாறாக சமஸ்கிருதத் தையும், புராணங்களையும் பரப்பினார்கள்.”

தாத்தா இவ்வாறு சொன்னதும் மேலும் பல கேள்விகள் கேட்டாள் இனியா.

“திருக்குறள் முதலில் எப்படி கண்டு பிடிக்கப்பட்டது தாத்தா?”

“ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது எல்லிஸ் துரை என்பவர் சென்னைக்கு வந்தார். அவர் தமிழை நன்கு கற்றார். தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு அவர் தமிழில் புலமை பெற்றார். அப்போது அவருக்குச் சில ஓலைச்சுவடிகள் கிடைத்தன. அவை யாரால் அனுப்பப்பட்டது என்றால் மதுரையின் கவர்னராக இருந்த ஆரிங்டன் துரை என்பவரால். அவருக்கு எப்படி கிடைத்தது என்றால் அவரிடம் சமையல்காரராக இருந்த கந்தசாமி என்பவரிடமிருந்து தான். கந்தசாமியார் என்றால் பண்டித அயோத்திதாசரின் பாட்டனார். இவரிடம் அடுப்பெரிக்க ஓலைச்சுவடிகள் வந்தன. அதனைப் பார்த்த அவர் அதை எரிக்காமல் ஆரிங்டன் துரையிடம் கொடுத்தார். அதை ஆரிங்டன் துரை, எல்லிஸ் துரைக்கு அனுப்பி வைத்தார். எல்லிஸ் துரை அதைப் படித்துப் பார்த்து திருக்குறள் சுவடிகள் என்பதை அறிந்தார். ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். அப்போது தஞ்சாவூரில் ஞானப்பிரகாசர் என்பவர் 1812இல் திருக்குறளை முதன்முறையாக வெளியிட்டார். இப்படித்தான் திருக்குறள் உலகிற்குத் தெரியவந்தது. அன்று கந்தசாமி அவற்றை எரித்திருந்தால் இன்று திருக்குறள் இல்லாமலேயே போயிருக்கும். இந்த நிகழ்ச்சியை தமிழறிஞர் செந்தலை கவுதமன் அய்யா அவர்கள் மிகவும் எழுச்சியோடும், சுவையோடும் எடுத்துக் கூறுவார்கள்.”

இவ்வாறு விளக்கமாகக் கூறினார் தாத்தா. இந்தச் செய்திகளையெல்லாம் இனியா வியப்புடன் கேட்டாள். அவளுக்கு மேலும் பல சந்தேகங்கள் எழுந்தன. அவை பற்றியும் தாத்தாவிடம் கேட்டாள்.

“சோழ மன்னர்களில் இராஜராஜ சோழன்தான் சிறந்த மன்னன் என்கிறார்களே தாத்தா”, என்றாள்.

“சிறந்த மன்னன்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டான். தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியவனும் அந்த மன்னன் தான். ஆனால், அவனை விடவும் சிறந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான மன்னன் கரிகாலன்”.

“ஆனால் இராஜராஜ சோழன் அளவுக்குக் கரிகாலன் புகழப்படவில்லையே தாத்தா!”

“அது உண்மைதான் இனியா. இராஜராஜ சோழன் கட்டிய கோயிலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அங்குள்ள கலைகளை இரசித்துப் பார்க்க எல்லா மக்களையும் அனுமதிப்பதில்லை. சாமி கும்பிட மட்டுமே அந்தக் கோயில் பயன்படுகிறது என்றாகி விட்டதால் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுவது இல்லை. அதனால் அரசுக்கும் பெரிய வருமானம் எதுவுமில்லை,

“அப்படியா தாத்தா. கரிகாலன் பற்றி சொல்லுங்க தாத்தா”.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டை ஆண்ட மன்னன் கரிகாலன். கல்லணையைக் கட்டியது அந்த மன்னன்தான். கல்லணை அன்று முதல் இன்று வரை அனைத்து மக்களுக்கும் பயன்பட்டு வருகிறது”.

“கல்லணையைக் கட்டியது கரிகாலனா தாத்தா?”

“ஆமாம் இனியா. கரிகாலன் என்ற சோழ மன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி நதியின் கரைகளை உயர்த்தி கல்லணையையும் கட்டினான். அந்த அணையின் கட்டுமானப் பணியை இன்றளவும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது. அந்த மன்னனால்தான் நாட்டில் வேளாண்மை உற்பத்திப் பெருகியது. அவன் கட்டிய கல்லணையால் தான் தஞ்சையானது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்பட்டது. மக்கள் அவனைத் திருமாவளவன், கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான் என்றெல்லாம் போற்றினர்,” என்று விளக்கினார் கலையரசன்.

“காவிரி நதி எங்கு உற்பத்தியாகிறது தாத்தா?” என்று அடுத்த வினாவைத் தொடுத்தாள் இனியா.

“குடகுமலை என்பது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. அங்கு தலைக் காவிரி என்ற இடத்தின் அருகில் காவிரி நதி உற்பத்தியாகிறது இனியா”.

“காவிரி நதி காக்கா தண்ணீர் பானையைத் தட்டிவிட்டதால் உருவானது என்று சிலர் சொல்கிறார்களே தாத்தா”.

“அதெல்லாம் கதைதான். அவற்றை நம்பக் கூடாது. கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து ஒக்கேனக்கலில் அருவியாகக் கொட்டுகிறது. திருச்சி மாவட்டத்துக்குள் நுழைந்தபின் அது காவிரி, கொள்ளிடம் எனப் பிரிகிறது. இவை மீண்டும் இணையுமிடத்தில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் இரண்டின் கரைகளும் உடைபடுகின்றன. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டு, நீரும் கடலில் வீணாய்ப் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மன்னன் கரிகாலன் சிந்தித்துச் செயல்பட்டான். கொள்ளிடம், காவிரியை விட தாழ்வாக இருப்பதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்த கரிகாலன் கொள்ளிடத்துக்குள் காவிரி நீர் வேகமாகப் பாய்வதைத் தடுக்க கல்லணையைக் கட்டினான். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இந்த அணை பயன்பாட்டில் இருந்து கொண்டு பொறியாளர் களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.”

தாத்தா கலையரசன் சொல்வதைக் கவனமாகக் கேட்டாள் இனியா.

“அப்படின்னா நாம் மன்னன் கரிகாலனைத் தானே போற்ற வேண்டும் தாத்தா!”

“கண்டிப்பாக இனியா. அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப்பெயரை இராஜராஜன் என்று மாற்றிக்கொண்ட மன்னனை ஒருசில காரணங்களுக்காகச் சிலர் புகழ்கிறார்கள். அது குறித்து விரிவாக பிறகு உனக்குச் சொல்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் நாம் கொண்டாட வேண்டியது கல்லணையைக் கட்டி தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக மாற்றிய மன்னன் கரிகாலனைத்தான். ஆகவே, சோழ மன்னன் என்றாலே நம் நினைவுக்கு வரவேண்டிய மன்னன் கரிகாலன்தான்.”

தாத்தாவின் பேச்சு இனியாவுக்கு நல்ல தெளிவினைத் தந்தது. n