Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு 374 வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் தாயார் நினைவேந்தல் நிகழ்வு…- கி.வீரமணி

வளப்பக்குடி பெரியார் படிப்பகத்திற்கு இடம் வழங்கும்
தோழர் அழகேசன்

 

கீழ்வேளூர் பாவா நவநீதகிருட்டினன் அவர்களின் பேரனும் – ஜெயக்குமார். அருட்பெருஞ்சோதி ஆகியோரின் செல்வன் ஜெ.வசந்தகுமாருக்கும். கல்யாணசுந்தரம் புனிதாதேவி ஆகியோரின் செல்வி க.உமாமகேசுவரிக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை 27.01.2008 அன்று காலை லலிதா திருமண அரங்கில் நடத்தி வைத்தோம்.திருமணத்தில் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன், மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நாகை மாவட்டம் சிக்கலில் தோழர் சோ.மாரிமுத்து அவர்களின் புதிய இல்லத்தினைத் திறந்து வைத்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளி சோமசுந்தரம் நினைவுப் படிப்பகத்தையும் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினோம். திருவாரூர் – புலிவலத்தில் கவுசல்யா தேவகி இல்லத்தைத் திறந்து வைத்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை, நூலகத்தைப் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் திறந்து வைத்தார்.

அன்று மாலை பூண்டியில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அவரது துணைவியார் மல்லிகா, தம்பி கலைவாணன், மற்றும் மகன் கலைவேந்தன், மகள்கள் கயல்விழி. கலைஅழகி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.

ஞ்சை வல்லம் துரை.சக்ரவர்த்தி விடுதியில் 28.01.2008 திங்கள் அன்று காலை நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று இளைஞர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினோம்.

‘நீதிச் சக்கரம் சுழல்கிறது’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி…

மாலை 6 மணியளவில் தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம், வளப்பக்குடி, கிராமத்தில் தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படிப்பகத் திறப்பு விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.  வளப்பக்குடியில் தந்தை பெரியார் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் அவர் பெயர் வைத்துள்ளார். அக்குழந்தைகள் அறிவுக்கடல், அன்புமணி போன்றவர்கள் பெரியவர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வளப்பக்குடியில் பெரியார் சிலை வைக்க ஓரிருவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சொந்தமாக இடம் வாங்கி சிலை அமைக்கலாம் என முடிவு செய்தபோது, அங்கு தேநீர்க் கடை வைத்துள்ள தோழர் அழகேசன் அவர்கள் அய்யா பெரியாருக்கு நான் இடம் தருகிறேன் என்று அந்த இடத்தைப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மாற்றி, அந்த இடப் பத்திரத்தை நம்மிடம் வழங்கினார்.

தமிழ்நாடு மூதறிஞர் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் தமிழர் தலைவர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நமக்கு வளப்பக்குடி திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் சுழகம் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி நுழைவாயிலில் இருந்து வளப்பக்குடி கிராமம் வரை சற்றொப்ப 9 கி.மீ. தூரத்திற்கு, நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனத்தில் தோழர்கள் அணி வகுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. சாலையின் இருபுறமும் உள்ள ஆற்றங்கரையின் மேல் நின்று கொண்டு இக்காட்சியை மக்கள் இரசித்துப் பார்த்தனர்.

தொடக்கமாக, கிராம மக்கள் பயனுறும் வகையில், சிறப்பாக அமைக்கப்பட்ட பெரியார் படிப்பகத்தை மனித நேயர் என இயக்கத்தவரால் அன்போடு அழைக்கப் படும். வழக்குரைஞர் இராஜ்குமார் திறந்து வைத்தார். அடுத்ததாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையை நாம் திறந்து வைத்தோம். வளப்பக்குடி கிராமமே திரண்டிருக்க, உணர்வு பொங்கும் கொள்கை முழக்கங்களைத் தோழர்கள் முழங்கினர். தொடர்ந்து சிலைக்கு அருகிலுள்ள திராவிடர் கழகக் கொடியினையும் ஏற்றி வந்தோம்.

புலவர் அண்ணாமலை அவர்களின் துணைவியார் சரஸ்வதி அம்மையார் படத் திறப்பு…

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் அன்னையாரும், தமிழ் மறவர் புலவர் அண்ணாமலை அவர்களின் இணையருமான சரஸ்வதி அம்மையார் அவர்கள் (வயது 69) 29.01.2008 அன்று பிற்பகல் சென்னையில் மறைவுற்றார். சிறிது காலம் சற்று உடல் நலம் குன்றியிருந்த அம்மையார் அவர்கள் திடீரென்று மறைவுற்றார். மறைந்த அம்மையார் கொள்கைப்பற்றும் கழகத்தில் ஈடுபாடும் கொண்டவர் ஆவார்.

தகவலறிந்த நாம் அங்குச் சென்று அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தி, வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுக்கும், புலவர் அண்ணாமலை அவர்களுக்கும் ஆறுதல் கூறி வந்தோம்.

ன்றிய அரசின்கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவர்கள் (எஸ்.சி., எஸ்.டி.,) உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பெறுவதற்கு 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என்று சமூகநலத் துறை ஆணை பிறப்பித்திருந்தது. இதனைக் கண்டித்து விடுத்த அறிக்கையில்,

‘“முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என்று அண்மைக் காலத்தில்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் உயர்கல்வி பெறுகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் பள்ளியில் சேரும் அவர்கள் அத்துணைப் பேரும் உயர்கல்வியை எட்டுவதில்லை.

ஜெயங்கொண்டம் பள்ளி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா அவர்களுக்கு
நினைவுப் பரிசை வழங்குகிறார் ஆசிரியர்.

இடையில் ஒவ்வொரு கட்டமும் குறைந்து, குறிப்பிட்ட குறைந்த சதவிகிதத்தினரே -உயர்கல்விக்குச் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்கதையாகும் நிலையில் உதவித் தொகை உயிர்மூச்சுப் போன்றது” என்பதை விளக்கி, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதில் தலையிட்டு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, ஆணையை ரத்து செய்யாவிட்டால் மாணவர் கிளர்ச்சிகளுக்குத் திராவிடர் கழகமே தலைமை தாங்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தோம்,

நம் வேண்டுகோளை ஏற்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவித்தொகை பெற 60% மதிப்பினை வலியுறுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்.

மு.ந.மதியழகன் தந்தை மு.நடராசன் படத் திறப்பு நிகழ்ச்சி…

சென்னை ரஷ்யக் கலாச்சார அறிவியல் மன்றத்தில் 01.02.2008 அன்று நடைபெற்ற விழாவில், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் சொல்லித் தருவதற்கும். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி கற்பிப்பதற்குமான ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் நாமும் மாஸ்கோ பல்கலைக்கழக இந்தியவியல் துறைத் தலைவர் எம்.துபியான்ஸ்கியும் கையொப்பமிட்டோம்.

அன்று மாலை சென்னை தியாகராயர் நகர் – தியாகராயர் அரங்கத்தில் “நீதிச் சக்கரம் சுழல்கிறது” என்னும் பெயரிலான தமிழ் மாத இதழை ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட நாம் பெற்றுக் கொண்டு உரையாற்றினோம்.

லோக் ஜனசக்தி தேசிய பொதுச்செயலாளர்  பெ.சந்திரசேகரன் அவர்களும் அந்த இதழினைப் பொறுப்பேற்று நடத்தினார்.

மறுநாள் (02.02.2008 சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் மேனாள் தலைவர், திராவிடன் நல நிதியின் முதல் தலைவருமான நீதியரசர் பெ. வேணுகோபால் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்ச்சி உணர்ச்சிகரமான நிகழ்ச்சியாக நடைபெற்றது. நீதியரசர் வேணுகோபால் குடும்பத்தினர் முன்னதாக வந்திருந்து நம்மைச் சந்தித்து அய்யா அவர்களுடைய அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள்.

பெரியார் நிறுவனத்தை, அறக்கட்டளையைக் காப்பாற்ற பெரிதும் அன்றைக்கு துணை நின்றவர் நீதியரசர் பெ.வேணுகோபால் என்று அவருடைய பெருமைகளைக் கூறி படத்தைத் திறந்து வைத்து நினைவுரையாற்றினோம்.

நிகழ்வில் நிதி ஆலோசகர் ச.இராஜரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பூண்டிக் கல்லூரியில் SPALIS – 2008 கருத்தரங்கில் உரையாற்றுகிறார் ஆசிரியர்…

அறிஞர் அண்ணா அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 03.02.2008 அன்று காலை அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். அன்று மாலை ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி இரண்டாவது பட்டமளிப்பு விழா மற்றும் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் யு.கே.ஜி. படித்துக் கொண்டிருந்த 80 மழலையர்களுக்குப் பட்டங்களை வழங்கினோம். மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் சி.காமராஜ் வரவேற்புரை ஆற்றினார். பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.பாலசுப்ரமணியம் அறிமுக உரையாற்றினார். ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
ஆ. இராசா, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் 04.02.2008 அன்று நடைபெற்ற வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் தாயார் சரசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.

க.இராசாராம்

நம் உரையில், ‘‘புலவர் அண்ணாமலை அவர்கள் ஒரு சிறந்த முரட்டு சுயமரியாதைக் காரராக ஆவதற்கு காரணமாக இருந்தவர் தான், இன்றைக்குப் படமாக இருக்கக்கூடிய அம்மையார் அவர்கள். அவர் மிகுந்த கொள்கை உறுதி கொண்டவர்.

ராஜீவ் கொலை நடந்த சமயத்தில் கடலூரில் இருந்த அருள்மொழி என் சகோதரர் இல்லம் சென்றதும் அவரை என்னுடைய சகோதரர் இல்லத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். என்ற செய்தி அவர் சொல்லித் தான் எனக்கே தெரியும். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘விடுதலை’யைப் பார்த்து விட்டு என்னிடத்திலே விசாரித்தார்கள். அருள்மொழி அவருக்குத் தெரிந்தவர். இதற்கெல்லாம் அடிப்படை அவரது குடும்பம் சுயமரியாதை, மனித நேயக் கொள்கைக் குடும்பம் ஆகும். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே கொள்கை கொண்ட சுயமரியாதைக் குடும்பமாகும்’’ என்று தெரிவித்தோம்.

அம்மையாரின் மூத்த மகன் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் வரவேற்பு உரையாற்றினார். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை தலைமை ஏற்றார். நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஞ்சையை அடுத்த பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.வி.எம். சிறீ புஷ்பம் கல்லூரியில் ‘National Seminar on “Emerging Trends and Challanges in Library Information Services, நூலக மற்றும் தகவல் சேவையில். தற்காலத்தில் நிலவும் போக்கும், சவால்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் 06.02.2008 முதல். 08.02.2008 வரை நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்க விழா 06.02.2008 அன்று காலை ஏ.வி.வி.எம். சிறீ புஷ்பம் கல்லூரியில் நடந்தது.

இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் பங்கேற்றுத் தொடக்கவுரை ஆற்றினோம்.

விழாவிற்கு அனைவரையும் வரவேற்று டாக்டர் ஏ.கணேசன் (Spalis 2008இன் ஒருங்கிணைப்புச் செயலாளர்) உரையாற்றினார். சிறீ புஷ்பம் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலு அறிமுக உரையாற்றினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.பொன்னவைக்கோ வாழ்த்துரை வழங்கினார். ஏ.வி.வி.எம்.சிறீ புஷ்பம் கல்லூரியின் தாளாளர் கே.துளசி அய்யா வாண்டையார் தலைமை உரையாற்றினார்.

பின்னர் ஆண்டு விழா மலரை – பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ வெளியிட நாம் பெற்றுக் கொண்டோம்.

சைதை மு.ந.மதியழகன் அவர்களின் தந்தையார் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் மு.நடராசன் அவர்களின் படத்திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் 08.02.2008 அன்று மாலை நடைபெற்றது. படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினோம். நம்முடன் டாக்டர் செ.நெ.தெய்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தந்தை பெரியார் அவர்களின் தனிச்செயலாளராக இருந்து, தந்தை பெரியார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின் போதும்கூட உதவியாளராக இருந்தவரும், பிற்காலத்தில் அரசியலில் நுழைந்து அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகப் பதவி வகித்த வருமான நண்பர் .இராசாராம் (வயது 82) அவர்கள் 09.02.2008 அன்று மறைந்தார்.

அவருடைய தந்தையார் கஸ்தூரி பிள்ளை அவர்கள் நீதிக்கட்சியின் பிரமுகர்; தந்தை பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானவர். அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர் நண்பர்  க.ராசாராம் அவர்கள். இறுதிக் காலத்தில் அவர் பாதை மாறினாலும், அவரின் கடந்தகால பணி சிறப்புடையதாகும். அன்று காலை பொதுச்செயலாளர்கள் கலி.பூங்குன்றன்,  சு.அறிவுக்கரசு ஆகியோருடன் சென்று, மறைந்த ராசாராம் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

அன்று மதியம் பெரியார் பெருந் தொண்டர் குறிஞ்சிப்பாடி சாம்பசிவம் தமது 86ஆம் வயதில் மீண்டும் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். 1946இல் திராவிடர் கழகத்தில் இணைந்து, 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சென்றவர். 1955இல் 12 தி.மு.க. மாவட்டச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சட்டப்பேரவை உறுப்பினராக மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகவும் தி.மு.க.வின் கொறடாவாகவும் பணிபுரிந்து பின்னர் அ.தி.மு.க.வுக்குச் சென்று மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பின்னர் அரசியல் வழியில் இருந்து விலகி மீண்டும் திராவிடர் கழகத்திலேயே எமது முன்னிலையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக் கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக,
தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
– ‘விடுதலை’, 13.01.1970

சிதம்பரத்தில் 10.02.2008 அன்று காலை ஆர். முனுசாமி – மங்கள லட்சுமி ஆகியோரின் குமாரன் சி.முனு. ராஜசேகரன், கே.ஜெயராமன் –  வனஜா ஆகியோரின் செல்வி ஜெ.ஜெயலதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை நடத்தி வைத்து விட்டு மாலையில், தஞ்சை மாவட்டம் வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினோம். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பள்ளியின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் வீகேயென்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த நாள் திருச்சியை அடுத்த மேலக்கற்கண்டார் கோட்டையில் நடை பெற்ற திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.  சுயமரியாதைச் சுடரொளிகள் கீழ்கல்கண்டார் கோட்டை க.அமிர்தலிங்கம், காட்டூர் ஓ.அரங்கராசு நினைவரங்கில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்குப் பொன்மலைப் பகுதி கழகத் தலைவர் மு.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பாளர்
ந. வீரமணி வரவேற்புரையாற்றினார்.

திருச்சி மாவட்டத் தலைவர்
மு. சேகர், செயலாளர் மா.செந்தமிழினியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.கணபதி, தி.மகாலிங்கம், பெரியார் பெருந்தொண்டர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், பின் ஈன்ற போது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக் கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்ல முடியாது. ஆம்! தாய்மை உணர்ச்சியில் ஒரு தனிப் பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சியின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” அல்லவா?
– ‘குடிஅரசு’, 15.01.1949 

(நினைவுகள் நீளும்….)