Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்ப் புத்தாண்டு – கல்வெட்டுச் சான்று!

‘தை’ மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கர பழங்காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டில் தை மாதத்தைத் தமிழ் ஆண்டின் ஆரம்ப மாத மாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ராயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ‘தை’ மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சணாயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே காலத்தைக் கணித் துள்ளார்கள். பூமியின் சுழற்சியால் சூரியன் பூமியின் தென் பகுதியில் இருந்து வடபகுதியின் கடைசிக்கும், வடபகுதி யில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக் கொள்கிறது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிகக் குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் சிறப்படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்து உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே தொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் 2006 – 11 தி.மு.க. ஆட்சியில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் ‘தை’ மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்காலக் கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்குச் சான்றாக இந்தப் பழங்காலக் கல்வெட்டு உள்ளது. இந்தத் தகவலை கீழக்கரை வரலாற்றுத் தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

– ‘விடுதலை’ ஞாயிறுமலர், 12.1.2019.