உண்மை வாசகர்கள் அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டுக்கு ஆண்டு உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அண்மையில் பிபிசி தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தியை வாசித்தபோது, தந்தை பெரியார் 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.
“பிள்ளைப் பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக, பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக் ஷன்’ மூலம்
பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் – பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும்.” (இனி வரும் உலகம், தந்தை பெரியார்)
தங்களது வீரியத்தை அளிக்கும் ஆண்களுக்குப் பொலிமக்கள் என்னும் பெயரை தந்தை பெரியார் சூட்டியிருக்கிறார்.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ‘தேர்ந்தெடுத்த மணி’ போன்ற பொலிமக்கள் என்றும் சொல்லியிருக்கிறார். ஆண் – பெண் குடும்பமாக வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது காலங்காலமாக நடைபெறும் நடைமுறை. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, இரத்த தானம் அளிப்பதுபோல விந்தணு தானம் அளிப்பது என்பது உலகில் பெருகி வருகிறது. இதைப்பற்றி,” ஒரு பெண்ணின் துணைவர் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் போது அல்லது தன்பாலின உறவில் இருப்பவர்கள் அல்லது தனியாகக் குழந்தை பெற்று வளர்க்கும்போது விந்தணு தானம் அவர்கள் தாய்மையடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இன்று அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது. அய்ரோப்பாவில் இந்தச் சந்தையின் மதிப்பு 2033ஆம் ஆண்டுக்குள் 2 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’’ என்று பிபிசி குறிப்பிடுகிறது.
எல்லா ஆண்களுக்கும் இப்படி விந்தணு தானம் செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்னும் கேள்வி இயல்பாக நமக்குள் எழும். அதற்கு “இதைப் படிக்கும் நீங்கள் ஓர் ஆணாக இருந்தால் உங்களுக்கு வருத்தம் அளிக்கும் செய்தி இதுதான். உங்கள் விந்தணுவின் தரம் தானம் செய்யப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். தன்னார்வலர்களில் நூற்றில் அய்ந்துக்கும் குறைவானவர்களே அந்தத் தகுதியைப் பெறுகிறார்கள்’ என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. இரத்ததானம் நான் செய்கிறேன் என்று முன்வந்தால் கூடச் சில காரணங்களால் உங்களது இரத்த தானத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மருத்துவர்கள் சொல்வது உண்டு. ஆனால், நூறு பேர் இரத்ததானம் செய்யப்போனால் ஒன்றிரண்டு பேர் அப்படித் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், விந்தணு தானத்தில் நூறு பேர் சென்றால் அதில் அய்ந்துபேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று செய்தி சொல்கிறது.
விந்தணு தானம் செய்பவர்களுக்கு நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது. மலையாள மொழியில் ஜோஸ் பாழூக்காரன் என்பவர் எழுதிய ‘அரிவாள் ஜீவிதம்’ என்னும் நாவல் தமிழில் யூமா வாசுகியால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.n





