Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிட ஆட்சி மீண்டும் அமைய உறுதி ஏற்போம்!-முனைவர் கடவூர் மணிமாறன்

பொங்கல்நாள் தமிழர்தம் வாழ்வில் இன்பம்

பூக்கின்ற பொன்னாளாம்; உழைப்பின் மேன்மை

பொங்கியெழும் கதிரொளியாய் ஒளிரக் கண்டு

புத்துணர்வு பெறும்நாளாம்! பெருமை யாவும்

தங்குகிற திருநாளாம்! தமிழ்ப்புத் தாண்டோ

‘தை’முதல்நாள் தரணிக்கே எடுத்துச் சொல்வோம்!

மங்காத தொல்புகழோ மீண்டும் இங்கே

மலர்ந்திடவே திராவிடநற் பொங்கல் வைப்போம்!

 

பெரியமுத லாளிகளின் அடிமை ஆனார்

பீடிழந்த ஆட்சியாளர்; மதம்பி டித்தே

சரியான முடிவெடுக்கும் ஆற்றல் இன்றிச்

சழக்கர்க்கே துணையானார்! உழவர் வாழ்வைப்

புரிந்திடவே மறுப்போராய்ப் பொறுப்பே இன்றி

புலியாரைப் பூனையென எண்ண லானார்

நரியனையார் வஞ்சகத்தின் வலையில் வீழ்ந்து

நடுநிலைமை பிறழ்ந்திங்கே ஆடு கின்றார்!

 

வரலாற்றுக் களங்கத்தைத் துடைப்ப தற்கே

வலிமையுடன் களம்நிற்போம்! காளான் போன்றோர்

பரபரப்பு நிகழ்வுகளை ஒதுக்கித் தள்ளும்

பாடத்தைப் பயின்றிடுவோம்! நமக்குள் மூண்ட

முரண்பாட்டைக் களைந்திடுவோம்! உழைப்பின் மூலம்

முன்னேறும் வழிகாண்போம்! மடமை வீழ்த்தும்

உரத்தினைநாம் எய்திடுவோம்! நன்மை நாடும்

ஒளிக்கதிரோன் நல்லாட்சி மலரச் செய்வோம்!

 

பொல்லாத மனுதருமப் புரட்டும் ஏய்ப்பும்

பொழுதெல்லாம் மேலாண்மை செலுத்தும் போக்கும்

நில்லாமல் மறையட்டும்! உயர்வு யாவும்

நிழலாகத் தொடரட்டும்! நெஞ்சம் தோறும்

இல்லாமை இங்கில்லை என்னும் வண்ணம்

இனமீட்சிக் குரல்கொடுப்போம்! தோற்றுப் போகா

வல்லவராம் நம்அய்யா கலைஞர், அண்ணா

வழியினிலே ஓரணியில் இணைந்து நிற்போம்!

 

பொறுப்புணர்ச்சி இளைஞரிடம் வளரச் செய்வோம்!

போலியர்தம் முகத்திரையைக் கிழிப்போம்! பொல்லா

வெறுப்புணர்ச்சிப் பதரனையார் பதறச் செய்வோம்!

வெங்கொடுமைச் சாக்காட்டை வீழ்த்தி வெற்றிச்

சிறப்பெல்லாம் அணிவகுக்க வீறு கொண்டே

செயலாண்மை ஓங்கிடவே  எழுவோம்! நல்லோர்

அறநோக்குச் சிந்தனைகள் தழைக்கச் செய்வோம்!

ஆரியத்தின் வல்லாண்மை தகர்த்து வெல்வோம்!

 

இழிவுகளைத் துடைத்தெறிவோம்! இருளைச் சேர்க்கும்

இல்லாமை, கல்லாமை நீங்கச் செய்வோம்

வழிவழியாய்ப் புகழ்சேர்க்கும் தமிழர் மாண்பை

வனப்புமிகு பண்பாட்டைக் காப்போம்! வேண்டாப்

பழிசேர்க்கும் மதவெறியர் செருக்கை வீழ்த்தி

பழந்தமிழர் நலவாழ்வை உறுதி செய்வோம்!

அழியாத திராவிடத்தின் ஆட்சி மீண்டும்

அமைந்திடவே சூளுரைப்போம்! வெல்வோம் நாமே! n