Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழர் விழா – தந்தை பெரியார்

திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழர்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டில் தமிழர் கலாச்சாரங்களை, பழக்கவழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழருக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழரின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழர்க்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழர் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற அடிமைகளாக விளங்குகின்றனர். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழர் கொண்டாடும் – நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழர்க்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவையாகவே இருந்து வருகின்றன.

தமிழர்க்குள்ள கலைகள் என்பன வெல்லாம் தமிழரை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழர்க்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமற் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா மிக முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல் கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல் அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவை ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

(‘கலை’ பொங்கல் மலர் – 14.01.1959)

தமிழர் விழா!

பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப் படுகிறது என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்றுகூடக் கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

பாடுபடும் பாட்டாளிகளின் மனம் பொங்கிப் பூரிப்புக் கொள்ளும் புது நாள் பொங்கல் நாள். பொங்கல் நாள் புதுமை வீறு பெறும் நாள். உணவில், உடையில், உறையும் மனையில், உள்ளத்தில் செயலில் இவ்வாறு அகமும் புறமும் புதுமை பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் புதுமை. புதுமை நிலையானதல்ல; புதுமை பழமையாகும்; மீண்டும் புதுமை தோன்றும். அப்புதுமையும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்படும். ஆண்டு தவறாமல் வந்து சென்ற பொங்கலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் பொங்கலும் இதைத்தானே நமக்கு பாடமாக உணர்த்த முடியும்?
– ‘குடிஅரசு’, 10.01.1948

முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும் தமிழர் களின் பண்பு நாகரிகம் கலாச்சாரப் பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமேயானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமேயானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண்டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்குக் கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக்காகக் கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலிருந்து தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக்கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும்பான்மை யானவர்களாகிய விவசாயிகளுக்குண்டான பண்டிகையாகும். அவர்கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத்தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாகச் சமைத்து உண்ணும்பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக்கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இதுவரை பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக்கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண்டாடும் முறையைப் பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும்தான் தமிழர்களுக் கென்று உள்ள பண்டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப்பனப் பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரிக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட்டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய – அற்புதங்கள் பலவற்றைச் சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக் கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள்தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி, அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை…

(சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து

– ‘விடுதலை’, 26.01.1954)