Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த அராஜக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கூட்டணியைத் தமிழ்நாட்டில் வீழ்த்துவோம்!

பணப் பலத்தாலும், தந்திரங்களாலும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதச் சார்பின்மையையும், சோஷலிசக் கோட்பாட்டையும் நசுக்கி வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவன்று நேரில் சென்று கிறித்துவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார் பிரதமர் மோடி! அதே நேரத்தில் பிரதமர் மோடியின் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் கிறித்துவர்களைத் தாக்குகின்றனர்!!  வரும் 2026 தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலில் இந்த மதவாத சக்திக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்; இல்லையெனில் காலித்தனம்மிகும்!

இரட்டை நாக்கு – இரட்டை வேடம்

– இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் ‘‘விதைக்காது விளையும்’’ கழனியான ஆரியம்!

அந்த ஆரியத்தின் இன்றைய முழு வடிவமும், தன்மையும் கொண்டவைதான் அதன் தத்துவ வடிவமான ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. (பழைய ‘ஜனசங்கம்’) என்ற தேர்தல் கட்சியும் ஆகும்.

ரூ.6,654 கோடிக்கு மேல் தேர்தல் நிதி வசூல் பெற்று ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி. என்ன தான் ஓங்கி வளர்ந்த அரசியல் கட்சி என்கிற தோற்றமளித்தாலும், இன்று ‘மைனாரிட்டி, அரசாக’வே ஒன்றியத்தில் ஆட்சி புரிகிறது. இது மக்கள் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து வரும் நிலைதான்! ஆளும் அரசியல் கட்சி என்றாலும், சில உத்திகள், பல தந்திரங்கள், ‘வாக்குத் திருட்டு’ போன்ற பல குற்றச்சாற்றுகள் மக்கள் மன்றத்தில் எழுந்தாலும், அதனைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், பதவிப் பிரமாணம் எடுத்தாலும், அந்த அரசியலமைப்புச் சட்டத்தை நாளும் துடைத்தெறியும் செயற்பாடுகளை நடத்தி வருகிறது. ‘உள்ளொன்றும், புறமொன்றும்’ வைத்துள்ள ‘நடிப்புச் சுதேசிகளாக’ வாழ்ந்து ஜனநாயகத்தின் வேரில் நாளும் வெந்நீர் ஊற்றுகின்றனர்!

மக்களின் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை. ஆனால், அதனை அறவே மீறி, தானடித்த மூப்பாக ஒரு யதேச்சாதிகாரத்தனத்தை நாளும் நிறுவி மகிழ்ச்சி அடைவதோடு, மமதை கொண்டு ‘இராஜ்யபாரம்’ நடத்துகிறது!

‘மதச் சார்பற்ற சமதர்ம’ (secular Socialist) என்ற அடிப்படைக் கொள்கையை எதிர்த்து, சில நாள்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் துவக்கத்தில் அச்சொற்கள் இல்லையே, பிறகுதானே திருத்தமாக அச்சொற்கள் அதில் இடம் பெற்றன. அதனால் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்ற பொருளில் பேசுகிறார்.’

இதுபற்றி அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டம் முழு வடிவம் பெறு முன்னரே, அச்சொற்கள் அப்போதே இடம் பெற சில முக்கிய அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தியபோது, அதன் வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறியது என்ன? படித்துப் பார்க்கட்டும்!

இந்த அரசியல் கூட்டத்தின் முழு உணர்வும் (Spirt) அரசியல் சட்டத் தத்துவம் செக்குலர்மதச்சார்பின்மையை முழு மூச்சாகக் கொண்டுள்ளதால், அதனைத் தனியாக இந்த இரண்டு சொற்களைச் சேர்த்துதான் ஆக வேண்டும் என்கிற அவசியம் இல்லை; பிறகு தேவையானால் அதனை இணைத்துக் கொள்ளலாம் என்கிற கருத்துடைய பதிலை விளக்கமாகத் தந்துள்ளார்.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாகவே இச்சொற்கள் பிறகு இணைக்கப்பட்டன’’ என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்  கூற்றுப்படி, வாதமாக அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, அதற்குக் கட்டுப்பட்டுதானே அனைவரும் நடக்க வேண்டும்! இதனை ஆர்.எஸ்.எஸ். மறுக்க முடியுமா?மறுப்பது சட்டப்படியானதா?

அப்படியானால் சமூகநீதியில், கல்வி வேலை வாய்ப்பில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட (Socially and Educationally) என்றுதானே இருந்தது.

அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., ஒன்றிய ஆட்சி எப்படி 103ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக, எதிர்க்கட்சியினர் எதிர்த்தும், புறக்கணித்தும் அதற்கு மாறாக அவசர அவசரமாக ஒரே வாரத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் உள்பட பெற்றது சரியா?

‘உயர்ஜாதி ஏழைகள்’ என்கிற பெயரால் 10 சதவிகிதத்தைப் படித்து பதவியில் உள்ள பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் என்ற கூட்டத்தாருக்கே (EWS) ‘‘தாரை வார்த்த’’ கொடுமை அரசியல் அமைப்பு படியா நடக்கிறது?

அது நியாயமா?

இதே போன்றே டில்லியில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிரதமர் நேரில் போய் வாழ்த்துக் கூறுகிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.

அடித்தளத்தில்அமைந்த பஜ்ரங்தளம், விசுவ ஹிந்து பரிஷத்காரர்கள் அமைப்பினர் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறித்துவ சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி தங்களது  ஹிந்துத்துவ மதவெறித்தனத்தைக் காட்டி மகிழ்ந்துள்ளனரே! இது பச்சையான இரட்டை வேடம் அல்லவா!

இதைத்தான் நமது ‘திராவிடமாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நாயகர் – தமிழ்நாட்டின் முதலமைச்சர் சுட்டிக்காட்டி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அச்சிறுப்பான்மை மதத்தினரின் உரிமையையும் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுதான் திராவிடம் – ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக தமிழ்நாடு காவித்தனத்திற்கு இடம் (2026 சட்டமன்றத் தேர்தலில்) தந்தால் மிஞ்சுவது காலித்தனமாகத் தான் இருக்கும்!

எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

– கி.வீரமணி
ஆசிரியர்