Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அவர்தாம் பெரியார் – முனைவர் கடவூர் மணிமாறன்

னிதன் என்பவன் மானமும் அறிவும்

நனிமிகப் பெற்றவன்; நல்லன கற்றவன்

என்பதை எவர்க்கும் எடுத்துச் சொன்னவர்

மன்பதை தன்னில் பெரியார் ஒருவரே!

காடு மேடெலாம் காற்றெனச் சுழன்று

மூடத் தனத்தின் முதுகெலும் பொடித்தவர்!

சாதி மதவெறிச் சழக்கைச் சாடி

மோதி மிதித்து முடமாய் ஆக்கிய

ஆற்றல் மறவர்! அஞ்சா நெஞ்சினர்!

தூற்று மொழியைத் தூசென இகழ்ந்தவர்!

ஆரியப் பாம்பின் வீரியம் ஒடுக்கி

ஊரும் உலகும் உய்ந்திட உழைத்தவர்!

பழமை இருட்டைக் கிழித்த பகலவன்

கிழட்டுச் சிந்தனை கீழ்மை யாவையும்

மண்ணில் புதைத்தவர்! மலர்ச்சியும் மகிழ்வும்

புன்னகை புரிந்திடப் புரட்சி விளைத்தவர்!

குன்றென உயர்ந்த கொள்கை தம்மை

என்றும் நெஞ்சில் யாவரும் ஏந்திட

வீறுடன் முழங்கிய வெந்திறல் அரிமா!

சீறும் புலியெனச் சீர்திருத் தமெனும்

போரினை நடத்திப் பொய்யும் புரட்டும்

வேருடன் வீழ்ந்திட என்றும் உழைத்தவர்!

அடிமை நாட்டில் மிடிமை எய்தி

ஒடுக்கப் பட்டே உறங்கிக் கிடந்தவர்

சதியெனச் சூழ்ந்த விதிகளை நம்பி

மதியிழந் தோரை மாந்தன் ஆக்கிக்

கெடுதலை நீக்கிக் கீழ்மையைப் போக்கி

விடுதலைமூலம் விடியல் கண்டவர் !

எண்ணிய கருத்தை எவர்க்கும் மருந்தெனத்

தொண்ணூறு கடந்தும் துணிந்து சொன்னவர்;

செய்தற்(கு) அரிய செய்தவர் பெரியார்!

உய்வைத் தந்தவர்! உறக்கம் களைந்தவர்!

உதவா மனுநெறி உதைத்து வீழ்த்தினார்

அதனால் அவர்தாம் பெரியார் அறிகவே! |