இந்தக்
காலப் பெண்களில் பலர், தங்கள் முன்னெடுப்பில் பெரியாரைப் படித்து அறிந்துகொள்வதை நினைக்கையில், அந்தக்
காலப் பெண்கள் ஏன் அப்படி சுயமாய் யோசிக்கவில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது.
சென்ற முறை தமிழ்நாடு வந்து திரும்புகையில், ‘‘கொள்கை வீராங்கனைகள்’’ எனும் நூல் கண்ணில்பட்டது. உடனே வாங்கிவிட்டேன். சென்னையில் இருந்து ஆஸ்திரேலியா இறங்கும் வரை, அந்த நூல்தான் எனக்கு வழித்துணையாக இருந்தது.
உலக அளவில் பல போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. அவை எந்தச் சித்தாந்தமாக இருந்தாலும் சரி, அல்லது சித்தாந்தமாக அல்லாமல் பொதுவான போராட்டமாக இருந்தாலும் சரி, அவை வெற்றி அடைய முக்கியக் காரணமாக இருப்பது பெண்களே. பெண்கள் பெரும் அளவில் பங்கெடுக்காத எந்தப் போராட்டங்களும் வெற்றி அடைந்ததே இல்லை என்பதே வரலாறு.
தலைமைப் பண்புகளில் பெண்களின் பங்கு எப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை விடுத்து, அவர்களின் பங்களிப்பு எப்போதுமே அளப்பரியதாகவே இருந்திருக்கிறது.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் சரி, திராவிடர் கழகமும் சரி, பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி அடைய சாத்தியமே இல்லை. இதையறிந்து தான் செங்கல்பட்டு முதல் மாநாட்டிற்குப் பெண்களுக்குப் பெரியார் அழைப்பு விடுத்தார். வரலாறு எங்கிலும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்படும் வேளையில், தாம் கொண்ட கொள்கைக்காக, தம் இயக்கத்திற்காக, தங்களால் இயன்ற வகையில் உறுதுணையாய் இருந்துள்ளார்கள் திராவிடர் கழக மகளிர்!
இந்தக் காலப் பெண்களில் பலர், தங்கள் முன்னெடுப்பில் பெரியாரைப் படித்து அறிந்துகொள்வதை நினைக்கையில், அந்தக்
காலப் பெண்கள் ஏன் அப்படி சுயமாய் யோசிக்கவில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது.
இந்தச் சாதனைகளைப் பதிவு செய்யவேண்டும் என்கிற எண்ணமே பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகும். அதனை உடனே நூலாகக் கொண்டு வந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பெரும் நன்றி!
54 வாரங்கள், 54 மகளிர் நேர்காணல்கள். அந்தப் பேட்டிகளை முழுவதும் படித்த பிறகுதான் ஒன்றை உணர முடிந்தது, பெண்கள் பங்கு பெறாத போராட்டங்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை என்று! அரசியல் வயப்பட்ட ஆண்களுக்கு, தங்கள் இயக்கம் தான் குடும்பம். தம் இணையர் மற்றும் குழந்தைகள் அடுத்து வருவார்கள். ஆனால், பெண்களுக்கோ தங்கள் குடும்பத்தையும், இயக்கத்தையும் பிரித்துப் பார்க்கவே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இணையரும், குழந்தைகளும், இயக்கமும் சேர்ந்ததே குடும்பம்.
ஆஸ்திரேலியாவில் மூன்று நாள்கள் ஆசிரியருடன் இருந்த பொழுது என் தந்தையுடன் இருந்தது போலத்தான் உணர முடிந்தது. இந்த நூலில் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்த, ஏறக்குறைய அனைத்து பெண் தோழர்களும், ஆசிரியரை அப்பா, அண்ணன் என்று தான் விளிக்கிறார்கள். எந்த ஆண் தோழரும் ஆசிரியரை, ஆசிரியர் அல்லது அய்யா என்பதைத் தாண்டி வேறு எப்படி அழைத்தும் நாம் பார்த்ததில்லை. இதுதான் பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கும், பெண்களுக்குமான வேறுபாடு. தன் இயக்கத்
தையும் குடும்பமாய் நினைப்பதால் தான் பெண்கள் பங்கெடுக்கும் போராட்டங்கள் பெரும் வெற்றியைப் பெறுகின்றன.
மொத்தம் 54 வாரங்கள், 54 திராவிடர் கழகப் பெண் தோழர்களின் பேட்டிகள் உள்ளன. பல்வேறு வயதுள்ள பெண்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் படம் பிடித்துக் காட்டி இருக்கிறது வில்வம் அவர்களின் இந்நூல். அநேக பெண்கள் திருமணத்திற்குப் பின்னரே பெரியாரியக் கொள்கைகளைக் கடைபிடிப்பவர்களாக மாறி இருக்கிறார்கள். இந்தக் காலப் பெண்களில் பலர், தங்கள் முன்னெடுப்பில் பெரியாரைப் படித்து அறிந்துகொள்வதை நினைக்கையில், அந்தக் காலப் பெண்கள் ஏன் அப்படி சுயமாய் யோசிக்கவில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது.
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில், உட்கார்ந்த இடத்தில் இருந்தே எங்கே என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அந்தக் காலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள் மிகக் குறைவு. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் வழியாகவே வெளி உலகை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த வகையில் தந்தை பெரியாரைத் தங்கள் இணையர் வழியாக அறிந்து கொண்ட பெண்கள், அப்போது துவங்கி தங்கள் வாழ்க்கை இறுதி வரை பெரியாரிய வழியிலேயே வாழ்வது ஓர் இமாலய சாதனைதான்!
பெரியாரின் கொள்கைகளில் பல இருந்தாலும், பெரியாரியப் பெண்கள் மேல் மற்றவர்களுக்கு மரியாதையை விளைவிக்கும் ஒரு செயல் என்றால் அது ‘ஒழுக்கம்’ தான்.
தந்தை பெரியார் தம் இயக்கத்தவர்களுக்கு இருக்கவேண்டியமிக முக்கியப் பண்பாக வலியுறுத்தப்பட்டு வருவது இதைத்தான். அதுவே பொது சமூகத்திற்கு, பெரியாரியவாதிகள் மேல் இருக்கும் மதிப்பை இன்னும் கூட்டுகிறது. தங்கள் சுற்றம் முதலில் இந்தப் பெண்களை ஒதுக்கிவைக்கிற போதும், பின்னாளில் அவர்களிடம் அன்பு கொள்ள வைப்பதும், தங்களின் முன்மாதிரியாய் நினைக்க வைக்கும் மாற்றத்தைக் கொண்டு வருவதும் தந்தை பெரியார் போதித்த ஒழுக்கத்தினால் தான்.
இந்த நூலில் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்து பெண்கள் அனைவரும் இந்த இரு விசயத்தையும் தான் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள். அரசியலில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களில் இது ஒரு மைல்கல். வி.சி.வில்வம் அவர்களுக்குப் பாராட்டுகள் ! |





