Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘ஆல்பா மேல்’ (Alpha Males) கருத்தகமும் மனித உரிமை மீறல்களும்? நவம்பர் 16-30 இதழின் தொடர்ச்சி… ரா.செந்தில்குமார் தோக்கியோ

இந்தக் காலகட்டத்தின் மிகப்பெரிய சவால், வீடியோக்கள். ஒளிரும் நிறங்களில், நம்முடைய குழந்தைகளின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கின்ற வகையில் அவர்களைத் தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் பல்லாயிரம் மில்லியன் டாலர் செலவில் அவை உருவாக்கப்படுகின்றன. சட்டென்று மாறும் இமேஜ்கள் கொடுக்கும் ஈர்ப்பு யாராலும் தடுக்கமுடியாதது. புத்தக வாசிப்பு தொடர்ந்து சிந்திக்கவும் அவகாசம் கொடுக்கும் ஒன்று. ஒரு கட்டுரையைப் படித்துக்கொண்டு போகையில் நம்முடைய மனம் அந்தக் கட்டுரையை ஒட்டியும் வெட்டியும் சிந்திக்க அவகாசம் கிடைக்கும். ஆனால், நகரும் ஒளித் துணுக்குகள் அப்படிச் சிந்திக்க அனுமதி கொடுக்காது. இதில் வரும் ஆல்பா மேல் என தவறாகப் பரப்பப்படும் நச்சுக் கருத்துகள் முதிரா இளைஞர்களிடம் எளிதாகப் பரவுகின்றன. பாலியல் சமத்துவமின்மை மிக எளிதாக அவர்கள் மனதில் குடியேறுகிறது.

பெண்களைப் பலவீனமான தரப்பினராக இவர்கள் கருதவும், பேசவும் தொடங்குகிறார்கள். பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய அச்சுறுத்த லாக இது மாறி நிற்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பெண் அவளுடைய நெருங்கிய உறவினர் களாலோ அல்லது கணவனாலோ கொல்லப்படுகிறாள் என்று சொல்கிறது புள்ளி விவரம்.

இந்த ஆல்பா மேல் உருவகங்கள் இயல்பாக ஆதிக்க உணர்வை உருவாக்குகின்றன. அது சகமனிதனின் மீதான பரிவை, கருணையை பலவீனமாகப் பார்க்கிறது என்று முதலில் பார்த்தோம். அதுவே குடியேறிகளின் (immigrants) மீதான வெறுப்பாக மாறுகிறது. இயற்கைப் பேரிடர்களாலோ, அல்லது பொருளாதார முன்னேற்றம் கருதியோ, அல்லது அரசியல் சூழல்களாலோ மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு இடங்களுக்குக் குடியேறுகிறார்கள். மனிதர்கள், இந்தப் பூமியில் தோன்றிய காலம் முதல் இந்த இடமாற்றம் தொடர்ந்து நிகழ்கிறது. இன்றிருக்கிற பல நாடுகள் குடியேறிகளால் உருவானவை. உள்நாட்டுப் போர் உள்ளிட்ட சூழல்களால், அகதிகளாகக் குடியேறும் மக்களின் வலியைப் புரிந்துகொண்டே பல வளர்ந்த நாடுகளும் அவர்களுக்குக் குடியுரிமை அந்தஸ்து, உதவித்தொகை போன்றவற்றைத் தந்து ஆதரித்தது. ஆனால், இவையெல்லாம் மறைந்து, சகிப்புத்தன்மையின்மை, தீவிர வலதுசாரி வாதம் போன்றவற்றால் அவர்களுடைய குடியுரிமை பறிபோகும் சூழல் நிலவுகிறது. குடியேறிகளை இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதும் போக்கு, குடியேறிகளின் மனித உரிமையைப் பறித்து அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நாமெல்லாம் ஏதோ ஒருகாலகட்டத்தில் குடியேறியவர்கள்
தான் என்கிற நினைவை நாம் இழந்துவிடுகிறோம். சென்ற நூற்றாண்டில் குடியேறிகள் அண்மைக்காலங்களில் குடியேறுபவர்களை வெறுக்கும் விநோதம் உலகளவில் நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம்.

தேசப்பற்று என்கிற பெயரில், பெரும்பான்மைவாதம் மய்யப்படுத்தப்பட்டு, விளிம்புநிலை மக்கள் புறந்தள்ளப்படும் போக்கும் அதிகரிக்கிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் மக்கள் வேறுபடுத்தப்பட்டு அவர்களுடைய இயல்பான வாழ்வுக்கு அச்சுறுத்தல்கள் நேர்கிறது. அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த நூற்றாண்டின் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்று இறுதிக்கட்ட ஈழப்போர். தற்போது வரை அந்த இறுதிக்கட்டப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு எந்த மனித உரிமை அமைப்புகளும் அங்கு அனுமதிக்கபடவில்லை. எண்பதாயிரம் பேருக்கு மேல் இறந்திருக்கக்கூடும் என்று அய்.நா. அமைப்பு கூறியது. ‘No Fire Zone’ என்று அறிவிக்கப்பட்டு அதே இடத்தில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு மக்கள் இறந்தனர். அடுத்து, தற்போது நடந்த காசா தாக்குதல். காசாவில் நடந்த 23 மாதப் போரில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அறுபத்தி எட்டாயிரம் பேர் இறந்துள்ளனர். அதில் இருபதாயிரம் பேர் குழந்தைகள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். மிகப்பெரிய மனித அவலம் இது. ரஷ்ய-உக்ரேனியப் போரில் இருபக்கமும் லட்சக்கணக்கான பேர் இறந்துள்ளனர்.

ஆக, பெண்கள், சிறுபான்மையினர், குடியேறிகள் என அனைவரையும் அச்சுறுத்தியிருக்கும் இந்தச் சூழலில் நின்றுதான் நாம் பெரியாரைத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைச் சென்ற மாதம் செங்கல்பட்டு நகரில் கொண்டாடினோம். அந்த விழாவில் கலந்துகொண்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய தமிழர் தலைவர் பெரியார் தொகுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட, அதைப் பெற்றுக்கொள்ளும் நல்வாய்ப்பு எனக்கு அமைந்தது. பெரியார் ஒரு தீர்க்கதரிசியாக இன்று நாம் வந்தடைந்திருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை அன்றே சொன்னார். மனிதனுக்கு தேசாபிமானம், மதாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் என இவையனைத்தையும் விட்டொழிப்பதே ஈடேற வழி என்றார் பெரியார். மனிதனைப் பிரிவுபடுத்தும் எவையும் இந்தச் சமூகத்திற்குத் தேவையில்லை என்றார் பெரியார். இவையெல்லாவற்றையும் விட மனிதாபிமானமே மனிதனுக்கு அவசியம் என்று அவர் கருதினார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடுபவராக பெரியார் இருந்தார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்கள் என்று காங்கிரஸை விட்டுவெளியே வந்த தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்தார். ஜாதிக்கு எதிரான போர்க்குரலாகத்தான் அவர் சுயமரியாதை என்கிற சொல்லைக் கையாளுகிறார். சுயமரியாதை ஒவ்வொரு மனிதனுக்குமான பிறப்புரிமை என்று பிரகடனம்செய்தார். ஜாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் கொள்ளவேண்டிய தன்மான உணர்வுதான் அந்த இயக்கத்திற்கு அடிப்படை. காங்கிரஸ் முன்னெடுத்த சுயராஜ்யம் அரசியல் ரீதியானது.பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் சமூக விடுதலை சார்ந்தது. இந்தியாவில் அவசரமாக ஒழிக்கப்படவேண்டிய பிரச்சினை என்று பெரியார் இன்றிலிருந்து நூறு ஆண்டு களுக்கு முன்பு கையிலெடுத்தவை தாழ்த்தப்பட்டோர் விடுதலை மற்றும் பெண்களுக்கான விடுதலை.  இந்தியர்கள் தங்களைத் தாங்களே நிருவாகம் செய்துகொள்ளவும், மற்ற அந்நிய நாட்டினரைப் போலவே வாழத் தகுதியானவர்கள் என்று நிரூபிக்கவும் வேண்டுமென்றால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் முடிவு கொண்டுவர வேண்டும். அதுவே இந்தியாவின் தலையாய பிரச்சினை என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

ஜாதிக்கு அடிப்படையாக இருந்த வருணாசிரமக் கொள்கையை அடியோடு வேரழிக்க அவர் பல போராட்டங்களைக் கையிலெடுத்தார். வைக்கம் போராட்டக் களத்தில் மூன்று முறை கைதாகி 74 நாட்கள் சிறையில் கழித்தார். வைக்கம் போராட்ட ஊர்வலங்களில் ஜாதி இந்துக்கள் மிளகாய்ப் பொடியை வீசினார்கள், பெரியாருடைய கூட்டங்களில் பாம்புகளைக் கொண்டு வந்து விட்டனர். பகலிலேயே பெரியார் மீது கல் வீசப்பட்டது, செருப்பு வீசப்பட்டதுண்டு. பொதுவாழ்வுக்கு வந்தவன் மானம், அவமானம் பார்க்க கூடாது என்று பெரியார் இவையெல்லாவற்றையும் தாண்டிச் சென்றார். அப்படி 1944ஆம் ஆண்டு, கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது. பிறகு அதே இடத்தில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கழித்து பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்டது. செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் எழுதினார்.

பெரியாரின் சிந்தனைகள், அவர் வாழ்ந்த காலம், தேசம், இனம் என இவற்றையெல்லாம் தாண்டி உலகத்திற்கான விழுமியங்களாக இன்று நின்றிருக்கின்றன. பெரியார் ஓர் உலகக் குடிமகனாக நின்றிருக்கிறார். அதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்று பெண்ணுரிமைக்கான அவரது போராட்டம். விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் எதிர்ப்பு, பெண்களுக்கான கல்வி, பெண்களுக்குச் சம சொத்துரிமை என்று ஆரம்பித்த பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்த சிந்தனை பெண்களுக்கான ‘reproductive rights.’ தன்னுடலுக்கான முழு உரிமையும் பெண்களுக்கே இருக்கவேண்டுமென்கிற சிந்தனை இன்றைக்கும் தேவையான ஒன்றாக, இன்றைக்கும் ‘relevant’ஆக இருப்பதைப் பார்க்கலாம். திருமணம் என்கிற அமைப்பையே கேள்வி கேட்டார் பெரியார். திருமணம் என்கிற பெயரில் பெண்கள் சுரண்டப்படுவதையும், அடுப்பங்கரைகள் பெண்களுக்கான வதைக்
கூடங்களாக மாறி நிற்பதையும் அன்றைக்கு பெரியார் பேசினார். பெண்களை விடுவிக்க வேண்டுமென்றால், அடுப்பங்கரைகள் இடித்து தள்ளப்படவேண்டுமென்று அறைகூவல் விடுத்தவர் பெரியார். உணவுக்கு, பொதுவான பணியாளர்களை வைத்து பொதுச் சமையலறை (Common Kitchen) என்கிறபடி அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு நாம் ‘Common Kitchen’ பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம்.

உண்மையில் இந்த உலகில் ஆல்பா மேல் என்று ஒருவர் இருப்பாரேயானால், அவர் சக மனிதர்கள் மீது நேசமும், அக்கறையும் கொண்டவராக இருப்பார். கருணையும், சமூக நீதியும் கொண்டவராக இருப்பார். மானுட அநீதி கண்டு பொங்கியெழுபவராக, துன்பப்படுபவர்களின் பக்கம் நிற்பவராக, அவர்கள் துயர் துடைப்பவராக இருப்பார். இந்த உலகம் எல்லாருக்குமானது என்று இறுதிவரை போராடுபவராக, அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவராக, சுய சிந்தனை கொண்டவராக இருப்பார். அவர், பெரியாராக இருப்பார்.

(ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில், 2025 நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடந்த நான்காவது மனிதநேய மாநாட்டில் பேசிய பேச்சு…)