உயிரின் சாரத்தை கொஞ்சம் இழந்ததைப் போல உறவுகளின் மரண இழப்புகள் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. அண்ணன் இறந்துவிட்டார். ஊரில் சொக்காரன் என்று சொல்ல அவர் ஒருத்தர்தான் இருந்தார். ஒவ்வொரு முறை ஊருக்குப் போய்விட்டு மும்பை திரும்பும் போதும் வயலில் விளைந்த சீனிக்கிழங்கு, நிலக்கடலை, உளுந்து என மூட்டை கட்டி கொடுத்து விடுவார். வழியனுப்ப தொடர்வண்டி நிலையம் வரை வந்து செல்வார். அண்ணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை மகன் கோயமுத்தூரில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறான். மகள்கள் இரண்டு பேரும் குழந்தை குட்டிகளோடு சென்னையில் இருக்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் ஊரில் தனியாகவே இருக்கிறார்கள்.
படித்து முடித்ததும் கொந்துக்கொரு பக்கமாகப் பிள்ளைகள் ஓடி விடுகிறார்கள். கிராமம் முதியோர் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. நகரங்களின் நோய் வந்து வீடு வீடாக நுழைந்து தாக்குகிறது. மாலைப் பொழுது கொழுந்தாடியதும் எல்லோரும் கைப்பேசியோடும் தொலைப் பேசியோடும் வீட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் நிலா இரவுகளில் பத்து மணிக்கு மேல் தெருக்களில் விளையாடிய நினைவுகள் நிழலாடின. மாணிக்கம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அண்ணனுக்குத் திருமணம் ஆகி விட்டது. இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்ததும் ஊரே தெருவில் கூடி விடும். ஒருபக்கம் கண்ணாமூச்சு விளையாட்டு,
ஒருபக்கம் பெரியோர்களின் சீட்டு விளையாட்டு.
இவற்றுக்கிடையில் அம்மா, பெரியம்மா, அண்ணி, அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லோரும் குழுவாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். அனைத்தும் நிலா வெளிச்சத்
திலும் தெருவிளக்கு வெளிச்சத்திலும் நிகழும்.
‘‘ராஜாமகள் கத்திக்கிட்டுப் போறா
அழைக்க நாதியில்ல
தபால் பெட்டி பிஞ்சிகிடக்கு
தைக்க நாதியில்ல
பிச்சிப்பூ உதுந்து கெடக்கு
பொறுக்க நாதியில்ல
அது என்ன?’’
அண்ணி விடுகதை போடுவார். அம்மா மடியில் படுத்திருக்கும் மாணிக்கம் மெல்ல உருண்டு போய் அண்ணியிடம் கமுக்கமாய்க் கேட்பான். அண்ணியும் சொல்வார். பின் உருண்டு வந்து அம்மா மடியில் படுத்துக் கொண்டு “எனக்குத் தெரியும். நான் சொல்கிறேன். ராஜாமகள்னா நிலா. தபால் பெட்டின்னா வானம். பிச்சிப்பூன்னா வெள்ளி” விடை சொல்வான். அம்மா மண்டையில் செல்லமாய்க் கொட்டி “அவ கிட்ட கேட்டுட்டு வந்தா சொல்ற” என்பாள்.
உந்து தாழையூத்தைக் கடந்துவிட்டது. இன்னும் முக்கால்மணி நேரத்தில் போய் விடலாம். கைப்பேசி அழைப்பு வந்தது. அண்ணன் மகன்தான் பேசினான். “சித்தப்பா
ஹைகிரவுண்ட்ல இருந்து நாங்க கெளம்பிட்டோம். நீங்க எங்ன வந்துகிட்டிருக்கீங்க” கேட்டான் அண்ணன் மகன் சந்திரன்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சரியான மழை தண்ணீர் இல்லை. பெரும் பஞ்சம். பனைமரங்கள் கூட குருத்து பட்டுப் போய் கொண்டை சரிந்து கிடந்தன. குடிதண்ணீருக்கும் கிணறுகளில் காத்துக்கிடந்து ஊற ஊற நீரிறைத்தார்கள்.
அன்றைக்கெல்லாம் சேரன்மாதேவி, அம்மாசமுத்திரம் பகுதிகளில் விளையும் நெல்லை திசையன்விளை சந்தைக்குக் கொண்டு வரமுடியாது. காவல்துறை அதிகாரிகள் கண்டால்
பறிமுதல் செய்து விடுவார்கள். சேரன்மாதேவிப் பகுதியிலிருந்து மிதிவண்டி மூலமாக மூச்சு வாங்க, மூலம் கடுக்க திசையன்விளைக்குக் கொண்டு
சேர்த்தால் ஒரு கோட்டை நெல்லுக்கு அய்ந்து ரூபாய் ஆதாயம் கிடைக்கும். கண்வெளிச்சத்தில் மணல் பாங்கான பகுதிகளில் இறங்கி உருட்டிக்கொண்டும் பாதை நன்றாக இருந்தால் ஏறி மிதித்தும் சந்தையில் கொண்டு கொடுத்து விட்டு வரும்போது கடலை மிட்டாய், பொரிகடலை வாங்கி வருவார் அண்ணன்.
இரண்டு காலிலும் மூட்டுவலி. இருந்தாலும் வயல் வேலைக்கு போய் விடுவார். “பொட்டப் புள்ளையள கெட்டிக்கொடுத்தாச்சி. பையனும் கடை கண்ணின்னு நல்லாதான் இருக்கான். எனும நீங்க வீட்ல சும்மா இருந்தான்ன?” கேட்டால் “அக்கம் பக்கத்து வயலெல்லாம் பயிரும் பச்சையுமா இருக்கும் போது நம்ம வயலு தரிசா கெடந்தா மனசு கேக்க மாட்டேங்குதுல்லா” என்பார்.
நேற்று வயலுக்கு உரம் வாங்கிக்கொண்டு ஈருருளியில் வரும்போது தான் இந்த நேர்ச்சி நிகழ்ந்துள்ளது. தலைக்கவசம் போடாததால் தலையில் பலத்த அடி. நிகழ்விடத்திலே நினைவிழந்து விட்டார். சந்திரனுக்கே மூன்று மணிநேரம் கழித்துதான் செய்தி தெரிந்திருக்கிறது. உறவினர்கள் அழுது கொண்டு வீட்டுக்கு வந்த பின்புதான் அண்ணிக்கும் தெரிந்திருக்கிறது. என்ன செய்வது? நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததல்லவா இவ்வுலகு!
உந்து ஊரை நெருங்கி விட்டது. சாலையில் மக்கள் திரள். பெண்களின் அழுகுரல் கேட்கிறது. அமரர் ஊர்தியும் அங்கேயே நிற்கிறது. உந்தை விட்டு இறங்கியதும் அண்ணன் மகன் கண்களில் நீர் அணையென நிற்க கைகளைப் பிடித்தான். கண்ணீர் சரம் ஒழுகியது. “சித்தப்பா அப்பாவ இறுதி சடங்கு செய்ய ஊருக்குள்ள கொண்டு போகக் கூடாதுங்கிறாங்க” என்று முகம் வெதும்பினான்.
“எதுக்காக அப்படி சொல்றாங்க” வினவினார் மாணிக்கம். “அப்பா காட்ல அடிபட்டுச் செத்திருக்காங்க; ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில இருந்து வேற கொண்டு வாறீங்க. காட்ல உள்ள பேயி பிசாசும் ஆஸ்பத்திரியில உள்ள பேயி பிசாசுமா பிணத்துக் கூடவே வரும். அதனால நேரே சுடுகாட்டுக்கு கொண்டு போயிருங்கன்னு ஊருக்காரங்க சொல்றாங்க” என்று அழுதான்.
நடந்து அமரர் ஊர்தியிடம் போனார் மாணிக்கம். வெள்ளைத் துணியில் பொட்டலம் போலப் பொதிந்து வைத்திருக்கும் அண்ணனைப் பார்த்ததும் கண்களில் இருந்து நீர்த்துளிகள் உதிர்ந்தன. “ஊர் தர்மகர்த்தா யார்” அண்ணன் மகனிடம் கேட்டார்.
“சுடர்மணி மாமா மகன் அண்ணாமலைதான்” என்று சொல்லிக் கை நீட்டி அடையாளம் காட்டினான். “யாரு போன வருசம் ஊருக்குள்ள ஜாதிப் பிரச்சனைய வச்சி ஊரை ரெண்டாக்கினான அவனா”? என்றார்.
“ஆமா சித்தப்பா. ஊர்ல யாருமே இல்ல அவன தட்டி கேக்க. கூட ரெண்டு மூணு குடிகாரப் பையனுவள வச்சிகிட்டு வேண்டாத வேலயெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கான். வருசா வருசம் அம்மங்கோயிலுல வெளக்குப்பூசை வைக்கிறோம்ன்னு அவனுக்குத் தெரிந்த பக்கத்தூரு பயங்களையும் பொம்பளையளக் கூட்டி வந்து நம்ம ஊரு சனங்கக் கிட்ட மதவெறி யையும் ஜாதி வெறியையும் தூண்ட்றான். போன ஆறுமாசத்துக்கு முன்னாடி விளையாட்டுப் புள்ளையளுக்கிடையில் நடந்த தகராற பெரிய ஜாதிச் சண்டையா மாத்தி போலிசுக்கெல்லாம் போயி ஊரையே ரெண்டாக்கிட்டான். இப்பமும் ரெண்டு தெருவுக்கும் சரியா பேச்சுக்காலு கெடையாது. அது நீறு பூத்த நெருப்பா கனன்றுகிட்டு இருக்கு” அண்ணாமலை குறித்து கேட்டபடி ஆங்காங்கே இரண்டு மூன்று பேர்களாக நிற்பவர்களை நோட்டமிட்டபடி ஊருக்குள் நடந்தார் மாணிக்கம்.
அண்ணாமலையை நெருங்கும் முன்னே தூரத்திலிருந்தே “வாங்க அத்தான். சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க” என்றான். அவன் நின்ற இடத்துக்குப் பின்னால் இந்தியில் ‘ஓம்’ என்று எழுதிய பலகை ஒன்று காய்ந்த மாலையோடு நின்று கொண்டிருந்தது. அண்ணாமலை கைகளில் வண்ண வண்ணக் கயிறுகள் கட்டி இருந்தான். நெற்றியில் சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும் மிளிர்ந்தன.
மாணிக்கம் “ஆமா” என்று அண்ணா மலையை நெருங்கி “என்னடே இது. எறந்து போனவங்களுக்கு இறுதிக் கடன் செய்ய வுடாம பண்றீங்க” என்றார்.
“அத்தானோ இது காலங்காலமா நம்ம ஊர்ல உள்ளதுதான். எல்லா ஊர்லயும் இதான் நடமொற” அவன் குரல் ஓங்கி ஒலித்ததும் ஆங்காங்கே திரைந்து நின்றவர்கள் வந்து சூழ்ந்தார்கள்.
“ஏய்ய் மாப்ள, நீயெல்லாம் படிச்சி பட்டம் வாங்கினவந்தான; ஒனக்கு இது தப்பா தெரியலையா? நம்மைச் சுத்தி அறிவியல் ஆறா வோடுது. நம்ம ஊர கெணத்துத் தவளையா வச்சிருப்பது தப்புன்னு தோணலையா ஒனக்கு?” என்று மாணிக்கம் முடித்தது அவனைச் சுற்றி நின்ற குட்டி சாத்தான்கள் “அண்ணாச்சி இந்த வழக்கம் நம்ம ஊர்ல மட்டுமில்ல. எல்லா ஊர்லயும் இருக்கு. தெரியாமப் பேசாதீங்க” சினம் கனலப் பேசினார்கள்.
“யாம்டே தேவையில்லாம பிரச்சனப் பண்றிங்க. ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னால சோசப் தாத்தா மகன் பீட்டர் சென்னையில கார்ல அடிபட்டுச் செத்தவரை எங்க ஆலயத்துல வச்சி ஜெபம் பண்ணித்தான அடக்கம் பண்னம். ஊருக்குள்ள பேய் பிசாசு வந்துடுச்சா என்ன”? என்றான் அன்பு.
“அன்பண்ண, நீங்க எதுவும் பேசாதீங்க. நீங்க வேதக்காரங்க. இங்க வந்து ஏதும் கோணக்களி கிண்டாதீங்க” என்றது லுங்கியைத் திரைத்துக் கட்டிய ஒரு குட்டி சாத்தான்.
“அன்பண்ண, இது ஹிந்துகாரங்க பிரச்சனை. இதுல கிறிஸ்தவங்க வந்து தலையிடாண்டாம். அது சரியில்ல.” என்றான் அண்ணாமலை.
“யாம்டே அவன் பேசாம யார் பேசுவா. அன்பு எங்க அத்த மகன்டே. வேற கடவுள வணங்கினா ஒறவு இல்லாமப் போய்டுமா? அண்ணாமலை இங்க வேதக்காரன் ஹிந்துக்காரன் பிரச்சனைய பெருசாக்காத. செத்துப்போன அண்ணனும் பத்துவருசமா தர்மகர்த்தாவா இருந்தவங்கதான். அதுவுமில்லாம அண்ணி நடக்க முடியாதவங்க. ஒரு அரைமணி நேரம் வீட்டு முத்தத்துல வச்சி இறுதி சடங்கு முடிச்சிட்டு கொண்டு போயிருவாங்க. இதுல பேயி பிசாசுன்னு சொல்லி உறவ எழந்துட்டு நிக்கிறவங்கள மேலும் துன்பப்படுத்தாதீங்கடே” என்றார் மாணிக்கம்.
“யத்தான், நீங்கதான் இப்ப பிரச்சினை பண்றீங்க. ஊர் வழக்கத்த ஒடைக்கப் பாக்றீங்க. ஊர் ஒத்துமைக்கு ஒல வைக்றீங்க.” என்ற அண்ணாமலை முழு ஹிந்துத்துவ சனாதனவாதியாக தன்னைக் கட்டமைப்பதை உணர்ந்தார் மாணிக்கம்.
உள்ளத்துக்குள் சினம் புயலெனச் சீறியது. முட்டாள் தனத்தையும் மூடத்தனத்தையும் ஊரின் பழக்க வழக்கம் என்றால் அவை அழித்து ஒழிக்கப்பட வேண்டியவையே.
“அண்ணன வீட்டுக்குக் கொண்டு வந்தா பேயிம் பிசாசும் ஊருக்குள்ள வந்துரும் அப்படித்தான? ‘புரட்சிப்பாரதப் படை’ தம்பிகளா, ஊருக்குள்ள எத்தனைக் கோயில்கள் இருக்குது. ஊரைச்சுத்தி எத்தனை கோயில்கள் இருக்குது? இந்த கணக்கத்த கோயில்களிருக்கிற ஒரு சாமிக்குமா இந்தப் பேயி பிசாச விரட்டும் சக்தியும் தெம்பும் இல்லாமப் போச்சு.” என்றார் மாணிக்கம்.
“ஏன்யா, ஒங்களுக்குள்ள சண்டையில கோயிலயும் சாமியயும் கொற பேசிறிய”? திண்ணையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த திலகவதி சொன்னாள்.
“அம்மா ஒங்க கோயிலையும் சாமியையும் நான் கொற பேசல. வருசா வருசம் கோயிலுக்குக் கொடை கொடுக்கிறோம். எண்ணெய் மஞ்சனை சாத்துறோம். கார்த்திகை தீபம் போடுறோம். எல்லாத்தையும் ஏத்துக்கிட்ட சாமி நம்மளக் காப்பாத்தும். ஊரக் காப்பாத்தும் என்று நம்பறத உட்டுட்டு செத்தவங்கள ஊருக்குள்ள கொண்டு வந்தா பேய் வந்துரும். பிசாசு வந்துரும்னு சொல்லி ஊர்ல உள்ள சாமிகளை இழிவு படுத்துவது நானா அவங்களாம்மா’? என்றார் மாணிக்கம்.
“நீங்க சொல்றது சரிதான். ஆனா அந்தக் காலத்திலிருந்தே அப்படியொரு வழக்கம் இருக்கே…” என்றாள் திலகவதி.
“அம்மா அர்த்தமில்லாம, மூடத்தனமா காலங்காலமா செய்யறத அறிவுள்ள நாம பயப்படாம உடைத்தெறிய வேண்டாமா?.”
மாணிக்கம் பேசியதைக் கேட்ட திலகவதி “ஏய்ய் தம்பிகளா, அவர் சொல்றது சரிதானடே. ஊருக்குள்ள ஏழுகோட்ட சாமியள வச்சிகிட்டு ஏம்பா பேயி பிசாசுன்னு பயப்படணும். நம்ம சாமி நம்மள காப்பாத்தும். பேசாம வண்டிய ஊருக்குள்ள கொண்டாங்கப்பா” என்றாள் முடுக்காக.
“திலகவதியக்கா நீங்க இதுல தலையிடாதீங்க. நாளைக்கு ஊருக்குள்ள யாருக்கும் ஏதாச்சும் ஆச்சின்னா உங்களைத்தான் ஏசப்போறாங்க” என்றான் அண்ணாமலை.
திலகவதியைப் பற்றி அண்ணாமலைக்கு நன்றாகத் தெரியும். அவளின் பெருந்துணையின்றி அவனால் திருவிளக்கு பூசை நடத்த முடியாது. ஊர்க்கூட்டத்தில் அவள் குரலே ஓங்கி ஒலிக்கும். கோயில் கொடை விழாக்களுக்கு வரிப்பணம் தொகையே திலகவதி ஏற்பிசைவில்தான் இறுதியாகும். எத்தனை தர்மகர்த்தா மாறினாலும் அதுதான் நடைமுறை. ஊரில் முக்கால் பங்கு வரிதாரர்கள் அவள் குடும்பத்தார்தான். அவளின் மதி நுட்பமும் ஈகத்தாலும் அத்தனை குடும்பங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவள்.
“என்னடே அண்ணாமலை, தர்மகர்த்தாவானதும் தலைகால் தெரியாம பேசுற? அன்பு பேச வந்தா அவன வேதக்காரன்னு வெலக்கி வைக்கிற. என்னையும் தலையிடாதங்ற. அப்புறம் யார்தான் தலையிடணும்” கூட்டத்தின் நடுவுக்கு வந்தாள்.
“உண்மைய பேசுறவங்கள ஜாதியாகவும் மதமாகவும் தெருவாகவும் குடும்பமாகவும் பிரித்து அதில் குளிர்காய்ந்து தங்களைப் பெரிய மனிதனாக்கிக் கொள்வதுதான் இவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் வேலை.” என்று சொன்னார் மாணிக்கம்.
“ஊர ரெண்டாக்குவது மூணாக் குவதெல்லாம் உங்க வேல – ஊர் பழக்க வழக்கங்கள பகுத்தறிவுங்கிற பேர்ல” என்றான்
“அண்ணாமல, கடைசியா சொல்றென், நீங்க வண்டிய ஊருக்குள்ள விடலனா நான் போலிசுக்குப் போவேன். அப்புறம் நீங்க யாரும் எம்மேல வருத்தப்படக்கூடாது.” மாணிக்கம் கொஞ்சம் சினத்தோடே சொன்னார்.
“என்ன பயமுறுத்துறீங்களா? போனா போங்க” என்றவனின் விழிகளிலும் அவன் நண்பர்கள் முகத்திலும் அச்சம் படர்வதைப் பார்த்த மாணிக்கம் ”அண்ணாமல சும்மா போலிசுக்குப் போக மாட்டேன். இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்ய விடாமல் தகராறு செய்வதாக உங்கள் அத்தன பேரையும் எழுதி கொடுத்து உள்ளத் தள்ளிப்புடுவேன்” என்றார்.
அதற்குள் “அட என்ன அண்ணாச்சி இவனுவ என்ன செஞ்சிருவானுவ? நீங்க வண்டிய ஊருக்குள்ள கொண்டாங்க.” என்று கை காட்டி ‘‘அமரர் ஊர்தி’’யை அழைத்தாள் திலகவதி.
முற்றத்தில் அண்ணனின் சடலம் வைக்கப்பட்டதும் ஊர்க்காரர்கள் அனைவரும் வந்தார்கள். பெண்களின் அழுகுரலுக்கும் ஒப்பாரிகளுக்கும் இடையே சடங்குகள் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருந்தன. அது இறந்து போனவரை அவமதிப்பது போல இருந்தது. நடைபெறும் பொருளற்ற சடங்குகள் ஒவ்வொன்றும் ஹிந்து மதத்தின் பக்கவேர்களும் சல்லிவேர்களும். இவை ஜாதிவாரி முளை விட்டுக்கொண்டே இருக்கும். மக்கள் பிறப்பு முதல் இறப்புவரை சடங்குகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அது காலத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகள் என்று மனம் கனக்க பார்த்துக்கொண்டிருந்தார் மாணிக்கம்.
சந்திரனும் அவன் தோழர்களும் மாணிக்கத்தைத் தனியாக அழைத்து “அண்ணாமல வேறுவொரு சிக்கல உருவாக்கிட்டான்”
“வேற சிக்கலா, என்னடே சொல்லுற…”? வியப்புற்று மாணிக்கம் கேட்டார்.
“சித்தப்ப கீழத்தெருவுக்கும் மேலத்தெருவுக் கும் பக்கத்து பக்கத்து சுடுகாடுன்னு ஒங்களுக்கு தெரியுமுலா? இடையில ஒரு கல்லு மட்டுந்தா எல்ல. தண்ணிய போட்டுட்டு குழிதோண்டுன பயலுவ பாதிக்குழிய அந்தப்பக்கம் தோண்டிட் டானுவ. இத சாக்கா வச்சி அந்தத்தெருப் பயங்களத் தூண்டி விட்டு பிரச்சினைய உருவாக்கிட்டாம்” என்றான் சந்திரன்.
“அத மூடிட்டு வேற குழி தோண்டச் சொல்ல வேண்டியதான.”
“இல்லங்க வேற குழி வெட்னா இன்னொருதர் செத்துருவாருன்னு ஊரே பயப்படும்” என்றார் ஒருவர்.
மாணிக்கம் தலையில் அடித்துக் கொண்டு “கிராமத்த ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதோ… கீழத்தெருவுல முக்கியமான ஆளு யாருடே” மாணிக்கம் கேட்டார்.
“அந்தா வாசக சாலையில உட்கார்ந்திருக் காருல்ல குணசேகரன் அண்ணா அவருதான்” கை நீட்டிக் காட்டினான்.
வாசகசாலையை அடைந்ததும் கைகுவித்து வணக்கம் சொன்னார் மாணிக்கம். குணசேகரனும் எழுந்து வணக்கம் சொன்னார்.
“குழி தோண்டியதுல சின்ன தப்பு நடந்து போச்சின்னு சொல்றாங்க. தப்புதான். மன்னிச்சுடுங்க. வேறு குழி தோண்றதுன்னாலும் ஊரு பயப்படுதுன்னு….” குணசேகரன் கையைப்
பிடித்துக்கொண்டு “அண்ணா வாட்சாப்ல, பேஸ்புக்ல நீங்க எழுதுறத, பதிவுடுறத தொடர்ந்து படிச்சுகிட்டுதான் வர்றன். ஏற்றத்தாழ்வை ஒழிக்கணும்னா விவரம் தெரிஞ்சவங்க முன்னுக்கு வந்தாத்தான் சரியாகும். நாம அண்ணன அதே குழியில அடக்கம் பண்ணுவோம். நானும் கூட வாறேன். அண்ணாமலை போன்ற சமூகக் கேடர்கள் தலையெடுக்காம இருக்க நாம ஒண்ணு சேருவோம். என்றதும் மாணிக்கம் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது. அப்படியே குணசேகரனைக் கட்டி அணைத்தார். |





