Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒன்றியத்தில் சமதர்ம மதச்சார்பின்மை ஆட்சிதான் ஒரே தீர்வு! கேள்வி பதில்கள்?

1.கே : திருப்பரங்குன்ற வழக்கில், இரண்டு நீதிபதிகள் 2014ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பு இருக்கும்போது, அதற்கு எதிராய் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தமைக்கு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன?

– எஸ்.புருஷோத்தமன், பாப்பான்சாவடி

ப :     சட்டமுறையைத் தாண்டி தன்னிச்சையாக அரசியலமைப்புச் சட்ட விரோதத் தீர்ப்பை அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர் களைப் பதவி நீக்கம் செய்ய இம்பீச்மெண்ட் கேட்டு இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இது தான் முறையான சட்டப்படி பரிகாரம் தேடி, நியாயம் கேட்பதாகும்!

 

2.கே : காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ‘‘இந்தியா கூட்டணி’’ அவசரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்றும், அதன் தலைவர்கள் பி.ஜே.பி. தலை
வர்கள்போல உழைப்பதில்லை யென்றும் கூறியுள் ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– எல்.முருகானந்தம், வத்தலகுண்டு.

ப : அது அவரது கருத்து; அதுசரி, இப்போது அவரது கட்சி – தேசிய மாநாட்டுக் கட்சி – இண்டியா கூட்டணியில் இருக்கிறதா – இல்லையா? அவர் கூற்று உண்மையாக இருந்தால், அதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர் இவரும்தானே?

 

3.கே : திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இராகுல் காந்தி அவர்களுடன் நெருக்கமாகவும், நம்பிக்கைக் குரியவராகவும் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யைச் சந்தித்துப் பேசியிருப்பது சரியா? முன்கூட்டியே தொகுதி உடன்பாட்டிற்கு குழு அமைத்தது ஏற்புடையதா? கூட்டணி நல்லிணக்கம் பாதிக்கப்படாதா?

– அ.கைலாஷ், பரமக்குடி.

ப :     அடங்காப் பிடாரிகள் – பதவி கிட்டாமல் ஏமாற்றம் அடைந்த சுயநலக் கூட்டத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 

4.கே : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுடைய தீர்ப்புக்கு எதிராய், சட்டப்படி, துணிவுடன் செயல்பட்ட முதலமைச்சரை உலகமே வியந்து பாராட்டும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி குறைகூறிப் பேசுவது ஏன்?

– மு.ஜெயந்தி, சேலம்.

ப : அடமானம் வைத்துவிட்டு, டில்லி பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆகிவிட்ட நிலைப்பாட்டின் தன்மை இப்படி இருப்பதில் என்ன அதிசயம்?

 

5.கே : தங்களின் 93ஆம் பிறந்த நாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், செயலும் வரலாற்றுப் பதிவுக் குரியவை என்பதால் அதைச் சிறு நூலாக ஆவனப்படுத்துவீர்களா?

– வை.மகிழ்மதி, அரவக்குறிச்சி.

ப : துணை முதலமைச்சரின் சிறப்புமிகு உரையும், கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களது உரையும் நிச்சயம் நூலாக வர, கழகத் தோழர்கள் வற்புறுத்தி வருகின்றனர்! செயலாகும் என்பது உறுதி!

6.கே : ‘‘குன்றின்மீது விளக்கு ஏற்ற முடியவில்லையென்றாலும் சபா அரங்கில் ஏற்றியதில் மகிழ்ச்சி’’யென்று நீதிபதி
ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளது, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உணர்த்துகிறதே?

– பு.ரமேஷ், செய்யாறு.

ப : ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்ற ஒரு கிராமியப் பழமொழிதான் இதனை உறுதி செய்கிறது!

 

7.கே : தகுதித் தேர்வு என்பது பணியில் சேருவதற்குரியது. அப்படியிருக்க பல ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றுகிறவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துவது தர்க்க நியாயத்திற்கே எதிரானதல்லவா?

– க.மீனா, கோயம்பேடு.

ப :     அதிகாரம் – சில நேரங்களில் அதி-காரம் ஆகிறது! என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்தான்!

 

8.கே : சமஸ்கிருதம் கற்றவர்களுக்கு உயர்கல்வியில் சிறப்பு இடமளிக்க வேண்டும் என்கின்ற பார்ப்பனக் கல்வியாளர்கள், மற்றவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்து ஒதுக்கித் தள்ளுவது எப்படி நியாயமாகும்? இதற்குத் தீர்வு இல்லையா?

– ம.சுமதி, சென்னை.

ப : தீர்வு – ஒரு சமதர்ம, மதச்சார்பின்மை ஆட்சிதான்; அதுவரை மக்களுக்குச் சோதனை நாளும் வந்து கொண்டேதான் இருக்கும்; இருக்கக்கூடும்!