Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலவரத்திற்குத் திட்டமிடும் காவி பயங்கரவாதிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மலைமீது அமைந்துள்ள மிகப்பெரிய கோட்டையை 1605ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ண நாயக்கர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் திப்பு சுல்தான் வருகைக்குப் பிறகு அவரது கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து வெள்ளையர்கள் கட்டுப்பாட்டிலும், இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குளத்தைச் சுத்தம் செய்த போது திரிசூலம், சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

அப்போதிலிருந்து, ‘மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்றும், இந்து அமைப்புகள் ‘கார்த்திகை தீபத்தை மலைக்கோட்டை மேல் இருக்கும் தீபத்தூணில் ஏற்ற வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றம் விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் அடுத்த பார்வை திண்டுக்கல் பக்கம் விழுந்திருக்கிறது.

தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க. முதற்கட்டமாக பா.ஜ.க. இளைஞரணி மாநிலச் செயலாளரான எஸ்.ஜி சூர்யாவைத் திண்டுக்கல் அனுப்பி வைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் செல்வதற்கு முன்பாக திண்டுக்கல் வந்த அவர் மலைக்கோட்டையைப் பார்வையிட்டதோடு அதுபற்றிய தகவல்களைச் சேகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி மாதத்திற்குள் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க. தொடங்கலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு நூற்றாண்டுக் காலம் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாட்டால், அவர்களின் திட்டங்கள் எடுபடவில்லை. தமிழ்நாட்டிற் கென்று தனி மண் வாசனை (Soil Psychology) உண்டு. அது இந்தப் பிற்போக்குச் சக்திகளை முற்றிலும் முறியடிக்கும் என்பது கல்லின் மேல் பொறிக்கப்பட்ட அழியா எழுத்தாகும்!