தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு – சென்னை ராஜதானியின் அரசியல் வரலாறு – ஏன் இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாறு மிகப்பெரும் ஆளுமைகளின் அரசியல் வரலாறாகும்.
இங்கிலாந்து அரசியல் சட்டம் இவற்றோடு உலக நாடுகள் பலவற்றின் சட்டங்களை எல்லாம் ஒன்று திரட்டிய சட்டம் ஒன்று கொலுவிருக்கும் இந்திய ஒன்றியத்தில் பன்னூறு அரசியல் தலைவர்கள், சமுதாயச் சிற்பிகள், கற்றறிந்த பெருமக்கள், ஆற்றல்மிக்க அறிஞர்கள் என பல்துறைசார்ந்த பெருமக்களின் பங்களிப்பு ஏராளம்.
அவர்களில் இறப்பிற்குப் பின் நினைக்கப்படும் புகழ்பெற்றோர் வெகுசிலரே. அந்த வெகுசிலரில் பலர் ஜாதி – மதம் – எல்லைக்குள் நம்மவர் என்பதால் அந்நிலை பெற்றோராகத்தான் இருப்பர்.

ஆனால், ஜாதி – மதம் – மாநிலம் என்ற எல்லைக்குள் அடைபடாத மனிதம் என்ற உணர்வோடு புகழ் மலையாக இறப்புக்குப் பிறகும் வாழ்ந்திடும் இம்மண்ணின் ஒரே தலைவர் ஒப்பாரும், மிக்காரும் இல்லாப் பேராளர், பெரும் புரட்சியாளர் என்ற சிறப்புக்குரிய சீலர் தந்தை பெரியார்.
அவர் அரசியலில் அவதானிக்கவில்லை. கல்வி பெற்றுப் பதவியில் அமரவில்லை. செல்வச் செழிப்பில் சிந்தனையை சிதறவிடவில்லை. ஜாதித் திமிரில் சதிராட்டம் போடவில்லை. நான்தான் மகான் என மமதை கொள்ளவில்லை.
அதற்கு மாறாக செல்வம் குவிந்திருந்தும், ஏழைகளைப் பற்றியே எண்ணினார். உயர்ஜாதியில் பிறந்தவர் என்று தற்பெருமை கொள்ளாமல் சமத்துவ எண்ணம் கொண்டு சகலரையும் பார்த்தவர். ஜாதித் திமிர் கொண்டு வேற்றுமை காட்டுவதும், உயர்வு – தாழ்வு என்று நினைப்பதும் அறிவல்ல என்று முழங்கியவர். கடவுள் நம்பிக்கை மூடநம்பிக்கைக்கு மூலநம்பிக்கை என்றும், பகுத்தறிவே பண்பட்ட அறிவியல் நெறி என்றும் பறைசாற்றியவர்.
தந்தை பெரியார் பிறந்து சமூகக் கொடுமைகளைக் கண்டு வெகுண்டு, இவற்றுக்குக் காரணம் அறியாமையே. அதை உருவாக்கிய மனிதனைச் சுரண்டி வாழும் மாபெரும் கூட்டம் ஆரியர் என்று உரைத்தவர்.
ஆரியம் வகுத்தளித்த ஆயிரக்கணக்கான தடைக்கற்களை – திராவிடர்களை வீழ்த்திட உருவாக்கிய மவுடீகக் கருத்துகளை – தூள் தூளாக்கியவர்.
படிக்காத மக்களுக்குப் படிக்கும் வாய்ப்பும், சாலையில் நடக்க உரிமை இல்லா மக்களுக்கு நடக்கும் உரிமையும், பெண்களுக்கு ஆண்களைப்போல அனைத்து உரிமைகளும், தொட்டால் தீட்டு என்பதும், பார்த்தாலே பாவம் என்பதும் மனித நேயத்திற்கும் எதிரானவை என்றுரைத்தவர். பார்ப்பனர்கள் திராவிடர்களை அடிமை கொள்ள கைக்கொண்ட உத்திகள் இவை என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து நலம் பயத்த தலைவர்தான் தந்தை பெரியார்!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழினம் வீழ்ந்து சரிந்தது. தமிழ்மொழி சமஸ்கிருத ஆதிக்கத்தால் முதல்நிலை இழந்தது. திராவிடர்கள் அவர்களின் சதியால் ஜாதிகளாகி கைகட்டி – வாய்பொத்தி – கொத்தடிமை ஆனார்கள். வந்தேறிப் பார்ப்பனர்கள் நாட்டைப் பிடித்தனர். ஆட்சி அதிகாரத்தைக் கையிலெடுத்தனர். ஆண்ட இனத்தவர் அனைத்தும் இழந்து சுயமரியாதை உணர்வற்றுப் போயினர்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ்ந்த மக்களிடம், “மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்று வாழ்ந்திட்ட மறத்தமிழர் கூட்டத்திடம் அடிமைப்புத்தியை விதைத்து – சிந்தனைக்கு விலங்கிட்டு கடவுள், மதம், ஜாதியை உருவாக்கி, இவைபற்றிக் கேள்வி கேட்டால், இது கடவுள் தலையில் எழுதிய தலையெழுத்தென்று கூறி பயங்காட்டி ஏமாற்றினர்.
கள்ளமில்லா மனதும், எல்லையில்லா அன்பும், அளவிடற்கரிய ஆற்றலும் பெற்றிருந்த – உயர் நாகரிகம் கொண்டவர்கள் – உயர்தனிச் செம்மொழி கண்டிட்ட திராவிடர்கள் பார்ப்பானைக் கடவுளாக நம்பி, சாமி என்று கைகூப்பி, காலில் விழுந்து வணங்கினர். சூத்திர – பஞ்சமப் பட்டத்தைத் தேனைக் குடிப்பது போல் அருந்தி மடிந்தனர்.
பெரியார் இதுகண்டு பதைபதைத்தார். சுயமரியாதை இயக்கம் கண்டு திராவிடர்கள் உரிமைக்குப் போராடினார்.
கல்வி கிடைக்கச் செய்தார்
சமூகநீதி பெற்றுத் தந்தார்
பெண் அடிமைத்தனம் போக்கினார்
ஜாதியை எதிர்த்துச் சமர் புரிந்தார்
கடவுள் – மதம், புராணங்கள் பொய் என்றார்
மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்தார்
ஆரியத் திமிரை அடக்கினார்
ஆட்சி அதிகாரத்தைப் பெறச் செய்தார்
அத்தனையும் பெற்றுத்தந்து நம்மை மனிதராக்கிய பெரியாரைத் திராவிடர்கள் உயிராகப் போற்றுகின்றனர். இன்று அவர் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவரை நாமும் – நாடும் மறக்கவில்லை. உலகம் அவரை உதாசீனப்படுத்தவில்லை. தந்தை பெரியாரை நன்றிகொண்டு பார்க்
கிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமுதாயம், கல்வி, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் என்று எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றிலெல்லாம் தந்தை பெரியார் புறந்தள்ள முடியாத சக்தியாக உள்ளார்.
மழலையர் – சிறுவர்கள் – இளைஞர்கள் – வாலிபர்கள் – வயோதிகர்கள் என எந்த நிலையில் இருப்போரும் பெரியாரை நேசிக்கின்றனர்.
பெரியார் மண், பெரியார் நாடு, பெரியார் உலகம் என பெரியார் மனித குலத்தால் நினைத்துப் போற்றப்படுகிறார் – புகழப்படுகிறார் – பின்பற்றப்படுகிறார்.
ஒருவர் மறைந்து 52 ஆண்டுகள் ஆனபின், இன்று “பெரியார் உலகம்” என்று ஒன்று உருவாக்கிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும்பாலோர் பெரியார் உலகம் அமைய தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்றிக் காணிக்கையாக அளித்துள்ளார்கள்.
இத்தனை சிறப்புகள் இறந்தபின் உலகில் யாருக்கு இருக்கிறது! இறப்பிற்குப் பின்னும் அரசியலில் பெரியார் தத்துவத் தலைவராகத் தலைமை தாங்குகிறார். சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ற இரு அவைகளிலும் இவர் கொள்கையே எதிரொலிக்கிறது.
இறப்பிற்குப் பின் இவர்போல் வாழும் தலைவர் உலகில் வேறு யார்? இத்தகு பெருமைக்குரிய புரட்சியாளர் பெரியாரின் நினைவு நாளில் (டிச.24) ஜாதி, மத பேதமற்ற உலகம் படைக்க உறுதிமொழி ஏற்போம் – இலக்கடைய உழைப்போம்.
வாழ்க பெரியார் ! |





