பொதுவாக பாசிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்றவற்றை முடக்கி விடுவார்கள். ஊடகங்களைக் கட்டுப்படுத்தி விடுவார்கள். ஆனால், இந்தியாவில் முழுமையாக வேறு விதமான முறைகளைக் கையாளுகின்றனர். நாடாளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் கைப்பற்றிக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்தத் துறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவை எதுவும் செல்லுபடி ஆகாத இடங்களில் மக்களுக்கு மத போதை ஊட்டி வெறியேற்றி, கலவரச் சூழலை உருவாக்கி அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அப்படித்தான் தமிழ்நாட்டைக் குறி வைத்து செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவர்கள் தொடங்கியவை எல்லாம் தோல்வி அடைந்த பின், தற்பொழுது முருகன் மீதான மக்களின் பக்தியைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திட்டத்தைத் தொடங்க திருப்பரங்குன்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு வாய்ப்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதியாக உள்ள ஜி.ஆர்.சுவாமிநாதன் என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர் அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால், “பிள்ளையார் கோவிலில் தீபத்தை ஏற்றாமல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” எனக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் நிறுவனரான ராம ரவிக்குமார் வழக்குத் தொடர்ந்தார்.
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தா தர்காவைக் குறி வைத்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்” என்பது இந்துத்துவக் கும்பலின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டில் இந்து பக்த ஞான சபையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் கோயில் நிருவாகம் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோயில் நிருவாகம் வழக்கத்தை மாற்றாமல் உச்சிப் பிள்ளையார் கோயிலிலேயே ஏற்றுவது என்று முடிவு செய்தது. பின்னர் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தீபம் ஏற்றும் இடம் மோட்ச தீபம் ஏற்றும் இடம் என்பதால் அது ஆகமத்திற்கு விரோதமானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.வழக்கின் தீர்ப்பில், “ஆகமத்திற்கு எதிரானது என்பதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை” எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதே வழக்கில் 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, “கோவில் நிருவாகமும் தர்கா நிருவாகமும் கலந்து பேசி ஏற்கெனவே முடிவு செய்த இடத்தில் தீபம் ஏற்றி வருவதால் அதை ஏன் இடையூறு செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், “தீபத்தை தற்போது ஏற்றப்படும் அதே இடத்தில் ஏற்றலாம்” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
தற்போது அதே கோரிக்கையை மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பைப் புறக்கணித்து, தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய சர்வே கல்லில் அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார் ஜி.ஆர்.சுவாமிநாதன். சர்ச்சைக்குரிய – ஒழுங்கைச் சீர்குலைக்கக்கூடிய இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு. மேலும் அந்தப் பகுதியில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால், இதை ஏற்காத சங்பரிவார் கும்பல் அங்கே திரளாகத் திரண்டு தீபம் ஏற்றச் சென்ற நிலையில் அவர்களை வழிமறித்து காவல்துறை கைது செய்தது.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் இந்துத்துவாவாதிகள் எடுத்த முயற்சி படுதோல்வியை அடைந்து விட்டது. என்னதான் நீதிமன்றத்தையே துணைக்கு வைத்துக் கொண்டு, குட்டிக் கரணம் போட்டாலும், அவர்களின் தந்திரம் இங்கு எடுபடவில்லை.
தங்களுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்ய வேண்டும் (5.12.2025) என்று இந்த இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வேண்டுகோள் விடுத்தும், வலியுறுத்தியும் தங்களால் ஆன எல்லா முயற்சிகளைச் செய்தும் பார்த்தனர்.
ஆனால், முழு அடைப்பு முழு தோல்வியில் முடிந்தது. வியாபாரிகள் வெளிப்படையாகவே கூறி வி்ட்டனர். நாங்கள் ‘‘இங்கு மத பேதமின்றி அண்ணன், தம்பியாக வாழ்ந்து கொண்டுள்ளோம். வெளியூர்க்காரர்கள் இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்’’ என்று கன்னத்தில் அறைந்தது போலச் சொல்லி விட்டனர். தொலைக்காட்சிகளிலும் வியாபாரிகள் கூறிய கருத்துகள் ஒலிபரப்பாயின.
இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித்துறை துணை போகலாமா?’ என்னும் தலைப்பில் ஒரு சட்டப்பூர்வ ஆய்வரங்கம் சென்னை பெரியார் திடலில் 11.12.2025 அன்று நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று கருத்துரை ஆற்றினர்.
இந்த ஆய்வரங்கில் அமைதிக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிராக ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்யும் இந்துத்துவ அமைப்புகளின் சதி பற்றியும், அதற்குத் துணை போகும் வகையில் செயல்பட்டு வரும் நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
நீதிமன்றங்கள் எத்தகைய மக்கள் விரோதத் தீர்ப்பை அளித்தாலும் அதனை மாற்றுகின்ற சக்தி பெரியார் தொண்டர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் உண்டு என்று தெரிவித்து, அதற்கு எடுத்துக்காட்டாக வகுப்புரிமைப் போராட்டத்தின் வெற்றி பற்றிக் குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று அறிவித்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்காகவே சட்டத் திருத்தமே மேற்கொள்ளப்பட்டது என்றும்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் என்றும் குறிப்பிட்டார். மேலும் இத்தகைய காவி கலவரக்காரர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் துணை போவதையும் கண்டித்தார்.
அதன்பிறகு தொடர்ந்து உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி மாண்புமிகு து.அரிபரந்தாமன் அவர்கள் நீதித்துறையில் தற்பொழுது உயர் ஜாதி ஆதிக்கம் மிகுந்திருப்பதையும், அதிலும் சனாதனவாதிகளின் ஆதிக்கம் கணிசமாக இருப்பதையும் எடுத்துரைத்து, நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்குக் குந்தகம் விளைவிக்கும் சங்கிகளின் செயலுக்கு ஆதரவாக எந்தெந்த வழிகள் எல்லாம் செயல்பட்டார் என்று பட்டியலிட்டார். இந்த வழக்கில் நீதிபதி காட்டிய அவசரத்தையும் சட்ட விதி மீறல்களையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக தங்களது இந்துத்துவ அஜன்டாவை உடனே நிறைவேற்ற தேவையற்ற அவசரத்தைக்காட்டி, உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்கு உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பி தீபம் ஏற்ற முயன்றது எத்தகைய சட்டவிரோதம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், எச்.ராஜா, ஆர்.என்.இரவி போன்றவர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சூழலில் நீதித்துறையில் அனைத்து மக்களின் பிரதிநிதித்துவம் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினார்.மேலும் இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கோயிலே இல்லாத வருவாய்த் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்து அதன் மூலம் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார் என்பதை விளக்கின.
மேலும், 1981இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான ஒரு புறம்போக்கு இடத்தில் திடீரென்று முருகன் சிலை வைக்க முயற்சி நடந்த நிலையில் அதனை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்தியதையும், அந்த இடத்தில் மீண்டும் முருகன் சிலையை வைக்க வேண்டும் என்று நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
இறுதியாக உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நீதிபதி சுவாமிநாதன் 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சி
யாக எவ்வாறு இந்துத்துவ மனநிலையில் செயல்பட்டார் என்பதை வரிசையாக விளக்கினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத – ஒழுக்கத்துக்கு ஊறுவிளைவித்த சங்கராச்சாரி யாருக்கு வக்காலத்து வாங்கி தீர்ப்பு தந்ததையும், கரூரில் ஒரு மடத்தின் தலைவர் மறைந்த நாளில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பார்ப்பனரல்லாத பக்தர்கள் புரள வேண்டும் (அங்கப் பிரதட்சனம்) என்பதை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிபதி சுவாமிநாதன் அந்தத் தடையை நீக்கியதையும், மேல்முறையீட்டில் இதனை உயர்நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்புக்குத் தடைவிதித்ததையும் விளக்கினார். மேலும் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்து அவை சட்டமான நிலையில் தேவையில்லாமல் அதற்குத் தடை விதித்து அதன் காரணமாக பத்துக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமலிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அளிக்கும் அரசாணையின்படி நியமிக்கப்பட்ட ஒரு வயலூர் முருகன் கோயில் நியமனத்தைத் தடை செய்ததையும் பின்னர் மேல்முறையீட்டில் அந்தத் தடை நீக்கப்பட்டதையும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைச் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் பாசிஸ்ட்டுகள் நீதிமன்றத்தையும் கைப்பற்றியுள்ளதை விளக்கினார். தமிழ்நாடு கலவரத்தால் பாதிக்கப்
படாமல் காப்பாற்றப்பட செய்யப்படவேண்டிய செயல்பாடுகளை விளக்கினார்.





