முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும். சட்ட எரிப்புப் போராட்ட வீரரும். நூறாம் வயதில் ஏறு நடைபோட்டவருமான மயிலாடுதுறை வட்டம் அரையபுரம் கோ.நடேசன்
அவர்கள் 10.01.2008 அன்று இரவு மறைவுற்றார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர், பொதுப்பிரச்சினைகள் பற்றி ‘விடுதலை’க்கு ‘ஆசிரியர் கடிதம்’ எழுதிக் கொண்டே இருப்பார். கடைசிக் காலம் வரை ஏதாவது பணிகளைச் செய்து கொண்டே இருந்தவர். திருச்சியில் தங்கியிருந்த நாம் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்பினோம், அன்று அதிகாலை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் தாயார் மறைவுற்றார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு, தஞ்சை சென்றோம். அங்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தோம். கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி அதன் நோக்கத்தை நிறைவேற்றி பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதைப் பாராட்டினோம்.
சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் பூங்காக்களில் தலைவர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர்களின் படங்களைக் கொண்ட கல்வெட்டுகள் திறக்கப்படும் என்று, அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி சென்னையில் 36 பூங்காக்களில் தலைவர்கள் பற்றிய கல்வெட்டுகளைத் திறந்தனர். நாம் மாநகராட்சியின் அழைப்பையேற்று 11.01.2008 அன்று மாலை சென்னை புதுவண்ணை, கிராஸ் ரோடு, அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் பூங்காவில் தந்தை பெரியார் பற்றிய கல்வெட்டைத் திறந்து வைத்தோம். நம்முடன் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் எஸ்.நாகராஜன், மண்டலத் தலைவர் டன்லப் இரவி, 5ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் லதா பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை புதுவண்ணை பூங்காவில் பெரியார் பற்றிய கல்வெட்டைத் திறந்து வைக்கிறார் ஆசிரியர்
மறுநாள் (12.01.2008) சென்னை பெரியார் திடலில் இலங்கை சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சந்திரசேகரன் நம்மைச் சந்தித்து உரையாடினார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று, ‘தாய்மொழி வழி பொதுக் கல்வியும் சமூக மாற்றமும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினோம்.
தமிழ் மய்யம் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற சென்னை சங்கமம் மூன்றாம் நாள் (14.01.2008) நிகழ்ச்சியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினோம். நம்முடன் கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் பாமரன், இளைய பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கை அமைச்சர் சந்திரசேகரனுடன் ஆசிரியர் சந்திப்பு.
மறுநாள் (15.01.2008) அன்று தென் சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர் தோழர் சைதை மு.ந.மதியழகன் அவர்களின் தந்தையார் மு.நடராசன் அவர்கள் மறைவுற்றார். சைதாப்பேட்டை சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு, சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுபெரும் திரைப்பட நடிகர் காகா ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் நம்மைக் கண்டவுடன் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தார். “நீங்கள் வந்ததே எனக்கு பெரிய மருந்து. பெரியார் கொள்கையைப் பரப்புவது தான் எனது ஆசை. எனது உயிர் இப்படியே போனாலும் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வந்த சென்னை புத்தகக் காட்சிக்கு 16.01.2008 அன்று சென்று வந்தோம்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றும் ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 20.01.2008 அன்று மாலை 6 மணிக்கு பாவடித் தோப்புத் திடலில் “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இல. திருப்பதி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வானவில் வ.மணி தலைமையுரையாற்றினார். விடுதலை தி.ஆதவன்
பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழ்வியல் சிந்தனைகள் நூலைப் பற்றி ஆய்வுரையாக மாநில ப.க. தலைவர் வா.நேரு, மாநில தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் திருவில்லிப்புத்தூர் ச.அமுதன் ஆகியோர் உரையாற்றினர். வாழ்வியல் சிந்தனைகள் நான்காம் பாகத்தைத் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட, சிவகாசி நகர மன்றத் தலைவர் ராதிகா தேவி பெற்றுக் கொண்டார். இறுதியாக நாம் சேது சமுத்திரத் திட்டம், சிமென்ட் விலை ஏற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை விளக்கி உரையாற்றினோம்.

சிவகாசியில் வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 4) நூல் வெளியீட்டு விழா – 20.01.2008
இயற்கை எழில்கொஞ்சும் மலைகளின் இளவரசியாம் கொடைக்கானல் நகரத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் கம்பம் இராமகிருஷ்ணன் அவர்களின் நன்கொடையால் பெரியார் மணியம்மை கல்வி இருக்கை தொடங்கப்பட்டது. 21.01.2008 காலை 11 மணியளவில் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் மணி வரவேற்புரையாற்றினார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகக் கல்வியல் துறை விரிவுரையாளர் டாக்டர் பத்மா, இங்கு ஏன் இந்த தந்தை பெரியார் மணியம்மை கல்வி இருக்கை அமைக்கப்படுகிறது என்பதனையும் அதன் நோக்கங்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் த.ஜானகி அவர்கள் வந்திருந்த விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி தலைமை உரையாற்றினார். தமது உரையில், ‘‘இந்தியாவில் மகளிருக்காக, மகளிரால் நடத்தப்படும் பல்கலைக்கழகம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமாகும். அதன் 24 ஆண்டுகால வரலாற்றில் இந்நாள் பொன்னாளாகும். நான், ஒரு பெண் – பல தடைக்கற்களைக் கடந்து உங்கள் முன்னால் ஒரு துணைவேந்தராகப் பேசுகின்றேன் என்று சொன்னால் அதற்கான துணிவு, ஊக்கம் அளித்தது தந்தை பெரியாரின் கொள்கைகளாகும்.

லயோலா கல்லூரி பன்னாட்டுக் கருத்தரங்கம்
தந்தை பெரியார் ஓர் அறிவுக் கடல், பகுத்தறிவுச் சுடர், இணையற்ற மானிடப் பற்றாளர். ஒரே உலகம் – அதுவும் எல்லாருக்கும் சம உடைமை, சம உரிமை, சம நோக்கு வேண்டும் என்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதைத் தீர்மானங்களைப் பார்க்கும்போது அதில் விதவை மறுமணம், பெண்களின் திருமண வயது 16க்கு உரிமை, உத்தியோகத்தில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1989இல் பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்னும் சட்டம் இயற்றப்பட்டது. நமக்கு சமவுரிமை வேண்டுமென்றால், ஆண்கள் கொடுக்கவில்லை என்றால் தட்டிப்பறிக்கத்தான் வேண்டும். நான் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, இங்கேயே தங்கி பல்வேறு பணிகளைச் செய்துள்ளேன் என்றாலும், எனது சாதனை, எனது வாழ்நாள் சாதனை என நினைப்பது இந்த தந்தை பெரியார் மணியம்மை கல்வி இருக்கையை இங்கு ஏற்படுத்தியது தான்” என உணர்வுப்பூர்வமாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்.


அன்னை தெரசா பல்கலையில் பெரியார்-மணியம்மை கல்வி இருக்கை தொடக்கம்.
அடுத்து “பெண்கல்வி” என்னும் தலைப்பில் மாணவி அ.கீதாஞ்சலியும் ‘‘பெண் விடுதலை’’ என்னும் தலைப்பில் மாணவி தீபிகாவும் உரையாற்றினர். மாணவி சங்கீதா மரிய ஹெலன் கவிதை வாசித்தார். இணைப்புரையை மாணவி ஈவ்லின் தயாமணி வழங்கினார். தொடர்ந்து சக்தி கல்வி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கா.வேம்பனன், முதல்வர் திருமதி த.சரோஜா, முதல்வர் டாக்டர் தி.மோ.சா.சந்திரமணி, தி.மு.க.வைச் சேர்ந்த கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரை வழங்க வந்த கம்பம்- குள்ளக்கவுண்டன்பட்டி ராமகிருஷ்ணா சந்திரா அறக்கட்டளைத் தலைவர் வி.ராம கிருட்டினன் அய்.பி.எஸ்(ஓய்வு) அவர்கள் தந்தை பெரியார் மணியம்மை கல்வி இருக்கைக்கு ரூபாய் 5 இலட்சம் நன்கொடையை வழங்கினார்.இறுதியாக நாம் உரையாற்றினோம். அதன்பிறகு கொடைக்கானல் வானொலி நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் பேட்டியளித்தோம். அவர்கள் தந்தை பெரியார் கொள்கைகள் சமூகப் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் மணிக் கூண்டு அருகில் நடைபெற்ற சேது சமுத்திரத் திட்ட விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் நூல் அறிமுக விழாவில் பங்கேற்று உரையாற்றினோம். வாழ்வியல் சிந்தனைகள் புத்தகத்தை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட, மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் 86 வயதைத் தாண்டும் பெரியவரான ப.விவேகானந்தன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தோம்.

சேது சமுத்திரத் திட்ட விழிப்புணர்வுப் பொதுக்கூட்டத்தில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் வெளியீடு.
விவேகானந்தன் அவர்கள் 1941இல் நிலவு பூ.கணேசன் B.A., (Hons) இராம.அரங்கண்ணல் பரிந்துரைத்து விடுதலையில் ரூ.50 சம்பளத்தில் (Proof Reader) மெய்ப்பு திருத்துபவராகப் பணி புரிந்தவர். முதன் முதலாக இவர் திருத்திய புரூப்பில் – அச்சுக்கோப்பவர் ‘காலணா’ என்பதற்கு தவறாக ‘காலனா’ என்று கோக்க, இவரும் திருத்தாமல் விட்டதை அய்யா அவர்கள் கண்டுபிடித்தார். பெரியார் சொன்னது: “நசிந்து இருக்கும் இந்திய பொருளாதாரத்திற்கு உன்னால் முடிந்த சேதம். இதைச் சீர் செய்ய ஆர்.கே.சண்முகம் இருக்கிறார்கள். கவலையை விடு, வேறு வேலை கிடைக்கும் வரை இங்கேயே இரு’’ என்றார். அய்யா வாக்குப்படி இரயில்வேயில் சேர்ந்து Chief Travelling Ticket Inspectorஆக ஓய்வு. மூச்சு இருக்கும் வரை நம்மவராகவே இருந்தார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பெரியார் மணியம்மை கல்வி இருக்கை’ தொடக்க விழா நிகழ்வு
விருத்தாசலத்தில், 23.01.2008 அன்று காலை விருத்தாசலம் வட்டம், கச்சிராயநத்தம் கே.தர்மலிங்கம் – தனம் ஆகியோரின் செல்வன் த.பெரியார்செல்வன், பண்ருட்டி வட்டம் ஏ.ஆண்டிக்குப்பம் ஆர்.பக்கிரிசாமி – மலர்கொடி ஆகியோரின் செல்வி ப.சங்கீதா ஆகியோரின் இணையேற்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தோம். நடத்தி வைத்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை பற்றிய செய்தி வந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பில் தமிழ்நாடு அரசின் இரு கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 240 பெரியார் நினைவு சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் என்றும், தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் எனவும் அறிவிக்கப்பட்டன.

240 சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கும் தமிழ்ப் புத்தாண்டாக தை முதல் நாளை அறிவித்ததற்கும் முதலமைச்சர் கலைஞருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கிறார் ஆசிரியர்.
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்துக் கொண்டிருந்த எனக்கு, இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
மகிழ்ச்சிகரமான பாராட்டத்தக்க தகவல் என்று கூறி, ஆளுநர் உரையில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க – என்றென்றும் பெரும் புகழாய் வீசப்போகின்ற ஆளுநர் அறிவிப்புகளையும் திருமண விழாவில் அறிவித்தேன். பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்து அனைவரும் வரவேற்றனர்.

பரமத்தி சண்முகம் அவர்கள் எழுதிய “இராவண காவியம் கம்பராமாயணம் – ஓர் ஒப்பீடு ” நூல் வெளியீட்டு விழா
அன்று மாலை கரூரில் நடைபெற்ற பரமத்தி சண்முகம் எழுதிய ‘‘ராவண காவியம்’’ ‘‘கம்பராமாயணம் ஓர் ஒப்பீடு’’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நூலினை வெளியிட்டோம். கவிஞர் கடவூர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு என்.மணிராசு வரவேற்புரையாற்றினார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி முதல் படியையும், தொடர்ந்து மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் உள்ளிட்ட தோழர்களும் பெற்றுக் கொண்டனர்.
மறுநாள் மாலை சென்னை வந்தவுடன் கழகப் பொறுப்பாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து, 240 இடங்களில் தந்தை பெரியார் சிலைகளுடன் பெரியார் நினைவு
சமத்துவப்புரங்களை உருவாக்குவதற்கும், தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தோம்.
(நினைவுகள் நீளும்…)





