இளைய தலைமுறைக்கும் எழுச்சிமிகு வழிகாட்டியாகத் திகழும்
அய்யா வீரமணி அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து பணிதொடர்க!

தத்துவமில்லாத நடைமுறை குருட்டுத் தனமானது; நடைமுறைக்கு வராத தத்துவம் மலட்டுத் தனமானது என்பார்கள்.
தலைவர்களுக்கான தளபதிகள் சரியாக அமையும்போது மட்டும்தான் அவர்களின் தத்துவங்கள் நடைமுறையாவதும் தொடரும்.மார்க்சின் தத்துவத்தை ‘அழகான கற்பனை’ என்று ஏகடியம் செய்தவர்கள் வாயடைத்து நிற்க, உண்மையான புரட்சித் தலைவர் வி.இ.லெனின் அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
தந்தை பெரியாரின் தத்துவங்களை இன்று தமிழ்நாடு தாண்டியும், இந்திய ஒன்றியம் தாண்டியும் மதிக்கிறார்கள் – பின்பற்றுகிறார்கள் என்றால் அதன் அடிப்படை, பெரியாருக்குப் பிறகு அவருக்கு அமைந்த வழித் தோன்றல்களான அண்ணாவும், கலைஞரும் ‘பெரியாரிய’ கருத்துகளை நடைமுறைப் படுத்தும் இடத்தில் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தது தான். அவர்களுக்கு நிகராக, ஆட்சி அதிகாரத்துக்கு வராமலே, ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் நடத்திய களப் போராட்டங்களுக்கும், பிரச்சார உத்திகளுக்கும் முக்கியமான பங்குண்டு.

அதிகாரத்தை இழந்த கட்சிகள் பல காணாமல் போன வரலாறு நம் நாட்டிலும் உண்டு! தான் வகித்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரப் பதவிகளைத் துறந்துவிட்டு, கடைசிவரை எந்த அதிகாரப் பதவியையும் ஏற்க மறுத்த தந்தை பெரியார் வாழ்ந்து மறைந்தது அதிசயம் என்றால், அவருக்குப் பின், அவரது வழியில் அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து, இன்றைக்கும் ஜாதிய-மதவாதக் கட்சிகளுக்கு ‘சிம்ம சொப்பனமாக’ விளங்கும் இயக்கமாகத் திராவிடர் கழகத்தைக் கட்டிக் காத்து வரும் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் வாழும் அதிசயம்தான். இன்றைய தலைமுறையின் பெரியார் இவர்!
எழுத்து, நிருவாகம் ஆகியவற்றில் மட்டுமின்றி, தலைமைப் பண்பு, களப்போரில் முன்னிற்றல் ஆகிய பண்புகளும் 90வயது கடந்தும் இருப்பது அரிதினும் அரிதல்லவா? அதுவும் எப்படி? “எந்தக் காலத்திலும் அதிகாரப் பதவி கிடைக்கப் போவதில்லை” என்பது தெரிந்தே லட்சக்கணக்கான இளம் கொள்கை வீரர்-வீராங்கனைகளை இப்போதும் ஈர்க்க முடிகிறது என்றால் அப்படியான அய்யா கி.வீரமணி அவர்கள் பெரு வியப்புக்குரிய தலைவர் தானே?
“முளைத்து மூனு இலை விடும் முன்பே” முதல்வர் பதவி ஆசையோடு கட்சி ஆரம்பித்து, “நீங்கள்தான் இந்த அமைச்சர், அவர்தான் அந்த அமைச்சர்” என்று ஆசைகாட்டியும், பதவி வெறியூட்டியும் நாடு முழுவதும் இப்போதே அதிகாரத்துக்கு வந்துவிட்டது போலும் கனவுகளில் கட்சி வளர்க்கும் ‘கானல்-கட்சி’ வெட்கக் கேடுகளுக்கு மத்தியில் -சமகால சாபக்கேடுகளுக்கு மத்தியில் – நேர் எதிராக, அதிகார நோக்கற்ற இளைஞர்களை ஆயிரக்கணக்கில் ஆற்றுப்படுத்துபவர் அல்லவா உண்மையான தலைவர்?
பத்து வயதில் தொடங்கிய மேடைப் பிரச்சாரம், தொண்ணூறு வயது கடந்தும் தொடர்வது – அதாவது 80ஆண்டுகளுக்கும் மேலாக – ஓரியக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, பெரியாருக்குப் பிறகு ஓயாது உழைப்பது, சமூகநீதி சமத்துவக் கருத்துகளை வலியுறுத்தி இதுவரை சுமார் 54 முறை
சிறைசென்றதும் 63 ஆண்டு களாக ஒரு பத்திரிகையின் ஆசிரியராக நீடிப்பதும், உலகளவில் இளைஞர்களையும் ஈர்த்திருக்கும் வியப்பு!
யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் கவிதை போலவே சொற்செட்டு நிரம்பிய தொடர் ஒன்று உள்ளது –
‘எதையாவது வேண்டிக்கொண்டு
கடவுளுக்குக் காணிக்கை தந்ததுதான்
உலகின் முதல் லஞ்சம்,
அதையும் ஏற்றுக் கொண்ட கடவுள்
எதையுமே செய்யாமல் போனதுதான்
உலகின் முதல் ஊழல்”
என்பது போல, ‘கல்லுச்சாமி’யை முதலீடாக வைத்து, ஊழலில் பிழைப்பு நடத்துவதைத்தான் ‘அயோக்கியத்தனம்’ என்றார் தந்தை பெரியார். எதையாவது முதல் போட்டுத்தான் எவரும் தொழில் தொடங்க முடியும். ஆனால் இந்தக் “கல்”லே முதலீடாக, பரம்பரை பரம்பரையாக லாபம் பார்க்கும் கொடுமையைத் தான் தனது காலம் முழுவதும் எதிர்த்துப் போராடினார் தந்தை பெரியார். அதற்கான அசைக்க முடியாத ஆதாரமாக ‘கீதையின் மறுபக்கம்’ என்று பகுத்தறிவாளர்கள் ஏந்த வேண்டிய ஆதார ஆயுதங்கள் நிரம்பிய நூலை அய்யா கி.வீரமணி அவர்கள் எழுதினார். பகுத்தறிவு பரப்பும் பணியோடு பல பதிப்புகள் கண்டது அந்த நூல். பகுத்தறிவுப் போராளிகள் ஏந்தும் போராயுதம் அந்த நூல்!
அந்த நூல் பலருக்கும் பயன்படக் கூடியது என்றாலும், கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பயன்படுத்திய விதம் மறக்க முடியாதது! ஒருமுறை ஹிந்து முன்னணித் தலைவர்
இராம.கோபாலன், கலைஞரைச் சந்திக்க வந்தார். அவர், ‘பகவத் கீதை’ புத்தகம் ஒன்றைக் கலைஞருக்கு வழங்க, அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல, கலைஞர் உடனே, அய்யா கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலை எடுத்து அவருக்கு வழங்க, திகைத்துப்போனாராம் அந்த ஹிந்து முன்னணியார்!
இப்படி, கீதையைப் பற்றி பலநூறு மேடைப்பிரச்சாரங்களில் முற்போக்குக் கருத்தியலர் பயன்படுத்தும் கைஆயுதமாகத் திகழும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியதோடு, பல்லாயிரக்கணக்கான மேடை
களில் பேசும் அய்யா அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பணி தொடர வேண்டும்!
27 வயதில் சட்ட மேற்படிப்புக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் ‘விடுதலை’ நாளிதழின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில் (மிசா) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.
இதோ – இப்போது 92வயதிலும் ‘ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார்’ எனும் நூலோடு பணி தொடர்கிறார்! இப்படி, தொண்ணூறு வயது கடந்தும், தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாகப் பணியாற்றிவரும் அய்யா அவர்கள், இன்னும் நூறு வயது கடந்தும் வாழ வேண்டி, அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். |





