Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நான் குடும்ப வாரிசு! கொள்கை வாரிசு!! – தமிழ்மதி, மருத்துவக் கல்லூரி மாணவர், சிங்கப்பூர்

முதலில் என்னை நான் அறிமுகம் செய்து கொள்கின்றேன். நான் தமிழ்மதி.

கடலூர் முதுநகர் பகுதியில் ஆசிரியர் அவர்கள் பிறந்து வளர்ந்த அன்றைய அஹ்ரஹாரம் இன்று ராஜாஜி வீதி.  ஆசிரியரின் பால்ய நண்பர் கனகு என்று அழைக்கப்பட்ட கனகராசன் அவர்களின் பெயர்த்தி நான்.

நான் பிறந்து வளர்ந்த சூழலைச் சொல்கின்றேன். எங்க தெருப் பெயர் பாப்பாரத் தெரு, ஒரு பக்கம் கோட்டை மாரியம்மன் கோவில் தெரு, இன்னொரு பக்கம் சஞ்சீவிராயன் கோவில் தெரு, அடுத்தது காமாட்சி அம்மன் கோவில் தெரு, செட்டிக் கோவில் தெரு. இத்தனை கோவில் தெருக்களுக்கு நடுவில் பிறந்து வளர்ந்தாலும் இப்ப கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு, சுயமரியாதை, தன்மானம், சமூகநீதி, இறைமறுப்பு என பேசிக் கொண்டிருக்கின்றேன் என்றால் அது ஆசிரியர் அவர்கள் தான் காரணம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த என் தாத்தாவைத் திராவிடர் கழகத்துக்கு அழைத்துச் சென்றவர் ஆசிரியர். அதனைத் தொடர்ந்து அய்யா அறிவுக்கரசு அவர்கள் செட்டிக்கோவில் திடலில் போட்ட அத்தனை கூட்டங்கள் அப்பாவைச் சுயமரியாதை இயக்கத்திற்கு இழுத்துச் சென்றன. இப்படியாக நானும் கொள்கை வாரிசாக இன்று பேசிக் கொண்டிருக்கின்றேன்.

29.07.1944இல் முதன்முதலாக தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நாள். அய்யா திராவிடமணி அவர்களின் தயாரிப்பு. டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து மேடையில் சிறப்பாகப் பேசுகிறார் அய்யா எனக் குறிப்பிட்டு அடுத்த நாள் மேடையில் பேச  ஒப்புதல் வாங்குகின்றார். மறுநாள் மேடையில் 11வயது சிறுவர்  பேசி முடித்ததும் அறிஞர் அண்ணா, யாரு? மறுபடியும் சொல்றேன். 37 வயது நிரம்பிய அறிஞர் அண்ணா அவர்கள்.

இச்சிறுவன் காதிலே குண்டலம்,  கழுத்திலே ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு உடன் பேசியிருந்தால் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதில் இருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல, பகுத்தறிவுப்பால் தான் என்றார். அன்று ஆசிரியர் அய்யாவின் அகவை 11 மட்டுமே! அண்ணாவால் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் எனப் போற்றப்பட்டார்.

இன்னொரு அறிமுகத்தையும் சொல்கிறேன்

திருத்துறைபூண்டி 1946 மாநாடு.

26 வயதைத் தொட்ட நாவலர் அவர்கள் தமது உரையில் 12 வயது நிரம்பிய சிறுவனைக் குறிப்பிடப் பயன்படுத்திய சொல் “இளம் தோழர்”.  அந்த இளம் வளர்பிறை தான் இன்றைய திராவிடப் பேரியக்கத்தின் தலைவர்  பொதுச்செயலாளர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அந்தளவிற்கு கருத்தினில் முதிர்ச்சியும், பேச்சினில் அனலும் இருந்தது.

இந்த மாநாட்டில் நாவலர் பேசும்போது “பத்து வயதில் கருப்புச் சட்டை அணிந்து பள்ளிப் படிப்போடு பகுத்தறிவுச் சுரங்கமாக வளர்ந்த சிறுவன், ஒழுங்காக அரைக்கால் சட்டை போடத் தெரியாத வயதில் சமுதாய மேடு பள்ளங்களைச் சமன் செய்ய புறப்பட்ட டார்பிடோவை அறிமுகம் செய்கின்றேன். அந்த டார்பிடோ தான் இன்றைய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கின்றேன்.

கடலூரில் SPG எனும் பள்ளி. தற்போது தூய தாவீது மேல்நிலைப் பள்ளி. அந்தப் பள்ளிக்கு தனிப்பெருமை உண்டு. 158 வயதுடைய பள்ளி.  அதாவது இந்தியாவின் மூன்றாவது பள்ளி. தமிழ்நாட்டின் 2ஆவது பள்ளி. அப்படியான அந்தப் பள்ளியின் பெருமையைக் குறிப்பிடும் போதெல்லாம் முதலிடத்தில் அய்யாவைத் தான் சொல்வார்கள்.அடுத்தது அய்யா அறிவுக்கரசு தாத்தாவைக் குறிப்பிடுவார்கள். கடலூரின் பெருமைமிகு அடையாளம் ஆசிரியர் அவர்கள்.

1962 முதல் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர். அதன்பின் தமிழ்நாட்டின் ஆசிரியர்.

பெரியார் அவர்கள் தாடிமழிக்க நேரம் ஒதுக்கியிருந்தால் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை, பிற்போக்குதனம் என ஒட்டடை படிந்து போயிருக்கும். அதுபோல ஆசிரியர் அவர் பொருளாதாரப் பாடப்பிரிவில் தங்கப் பதக்கம் வெளிநாட்டில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் அதனை ஏற்காமல் இந்தத் தமிழ் இனத்திற்காக சுயமரியாதை இயக்கத்தில் தொண்டு செய்தார். 

இதற்கெல்லாம் முன்பாக எங்கள் வீட்டுக்கு ஆசிரியர். பாட்டி கையெழுத்து சுமாரா இருந்தாலும், பிழை இல்லாமல் எழுதுவார். எப்படி பாட்டி என்றால், எங்க அண்ணன்கிட்ட படிச்ச தமிழ் என்பார்.  ஆம் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ஒரு வீட்டுச் சுவரில் கருப்புச் சாயம் பூசி அதில் பாடம் நடத்துவாராம் ஆசிரியர். அதன் பின் சிதம்பரம் சென்று தனது பட்டப்படிப்பைத் தொடர்வார்.

பெரியார் அவர்கள் தாடிமழிக்க நேரம்  ஒதுக்கியிருந்தால் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை,  பிற்போக்குதனம் என  ஒட்டடை படிந்து போயிருக்கும். அதுபோல ஆசிரியர் அவர் பொருளாதாரப் பாடப்பிரிவில் தங்கப் பதக்கம் வெளிநாட்டில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் அதனை ஏற்காமல் இந்தத் தமிழ் இனத்திற்காக சுயமரியாதை இயக்கத்தில் தொண்டு செய்தார். தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் அய்யாவைக் குறிக்கும் அளவுக்கு நம் பெருமை மிகு அடையாளமாகத் திகழ்
கின்றார்.

இறுதியாக ஓர் உரையை மேற்கோள்காட்டி முடிக்கின்றேன். அண்மையில் சிவகாசி திருமணம் ஒன்றில் பேசிய உரை. ஆண்டவனை நம்பிய காலத்தில் ஆயுட்காலம் 20லிருந்து 40. அறிவியலை நம்பிய காலமாகிய இன்று 80. கருவுற்ற பெண்ணுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுப்பா என்பார்கள். குழந்தை ஆரோக்கியமாக வயிற்றுக்குள்  வளர தாய்க்கு
ஊட்டம் அளிக்கச் சொல்கின்றார்கள் எனக் கருதினேன். ஆனால் அப்படி அல்ல; வயிற்றில் குழந்தையைச் சுமப்பது தலையில் மரணத்தைச் சுமப்பது போல. பிரசவத்தில் இறந்துவிட்டால் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியாது. இப்பவே வாங்கியோ, ஆக்கியோ போட்டுவிடு என்பதை அறிந்தபோது அன்று பிரசவ மரணத்தின் சதவிகிதமும் இன்று அறிவியலால் பிரசவ மரணம் இல்லாமல் போனதை எனக்குப் புரிய வைத்தது அந்த உரை.

இன்று இந்தக் கட்டுரை வழியே பேசும் நான் ஆசிரியர் அய்யாவின் நூற்றாண்டு விழா மேடையில் அவர் முன் நின்று பேசுவேன் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.