Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எக்காலத்திலும் எதிரிகளைக் கலங்கடிக்கும் ‘இணையில்லா ஆளுமை’ தந்தை பெரியார்! – மஞ்சை வசந்தன்

உலக அளவிலான வியப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு தலைவர் இறந்து 52 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆளுமை செலுத்துகிறார், எதிரிகளைக் கலங்கிக் கதறச் செய்கிறார் என்றால் அது பெருவியப்பிற்குரியது அல்லவா!

இன எதிரிகள், ஆதிக்கவாதிகள், மதவெறியர்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே கதறுகிறார்கள்! தங்கள் ஆதிக்கக் கோட்டை தங்கள் கண்முன்னே பெரியார் என்னும் பெரும் வீச்சால், வீழ்ந்து நொறுங்குவதைக் காண்பதால்தான் பதறுகிறார்கள்.

வள்ளுவர் சிந்தனைகள் அவர் வாழ்ந்த காலத்தை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பெரும் வீச்சோடு உலக மக்களை ஈர்த்து வருகிறது. “நவில்தொறும் நூல் நயம் போலும்” என்பதற்கு ஏற்ப, காலம் செல்லச் செல்ல வள்ளுவர் சிந்தனைகளும் பெரியார் சிந்தனைகளும் மக்களை வெகுவாக ஈர்த்துவருகின்றன; நடைமுறையில் பெருமளவு பின்பற்றப்படுகின்றன, வியந்து நோக்கப்படுகின்றன, போற்றப்படுகின்றன.

காரணம், அவற்றின் அருமை, பெருமை, பயன்பாடு காலம் கடக்கக் கடக்க உயர்ந்து கொண்டே வருகின்றன. வள்ளுவர் கருத்துகள் உலக அளவில், இன்றைய உலக வாழ்விற்கும் உகந்ததாய், வழிகாட்டக் கூடியதாய் இருப்பதால் அதன் தாக்கம் காலம் கூடக்கூட கூடிக்கொண்டே செல்கின்றது. அதேபோல், பெரியாரின் சிந்தனைகள் ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில் அதிகம் ஏற்கப்படுகிறது, பின்பற்றப்படுகிறது.

அன்றைக்குப் பெரியார் கணித்தது
இன்றைக்கும் பொருந்துகிறது!

ஆதிக்க ஜாதியினர் என்னென்ன செய்வார்கள் என்று பெரியார் அன்றைக்குக் கணித்து, எச்சரித்தாரோ அது அப்படியே இன்று நடக்கிறது.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை இன்று உலகமே ஏற்பதற்குக் காரணம், அவரது தொலைநோக்குப் பார்வையும்: சரியெனப் பட்டதைத் தயங்காது கூறியதும்; மூலகாரணங்களைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கவும், களையவும் அவர் போராடியதும்; மொழி, நாடு, இனம் என்ற குறுகிய வட்டத்துக்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளாது உலகநோக்கில் தன் சிந்தனைகளைக் கூறியதும்; சமரசம் செய்து கொள்ளாது எதையும் அஞ்சாது எதிர்த்த துணிவும்; எதையும் தயங்காது எங்கும், எப்போதும், யாரிடமும் கூறிய வெளிப்படையான இயல்பும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்த மாண்பும்; மனிதநேய அணுகுமுறை போன்றவைகளேயாகும்!

சோதனைக் குழாய்க் குழந்தை பிறக்கும், கம்பியில்லாத் தொலைபேசி ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும், உருவங் காட்டிப் பேசிக்கொள்வர் போன்ற எதிர்காலக் கண்டுபிடிப்புகளை எண்பது ஆண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொன்னது மட்டும் அவரின் தொலைநோக்குத் திறன் ஆகும். அவற்றையும் தாண்டி அவர், பல துறைகளில், பல சிக்கல்களில், பல அமைப்புகளில் தன் தொலைநோக்குச் சிந்தனைகளைக் கூறி உலக மக்களையே விழிப்புக்குள்ளாக்கியுள்ளார், வியப்புக்குள்ளாக்கியுள்ளார்!

இந்தியா விடுதலை:

இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லாம், ஆங்கில ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுதந்திர வாழ்வு வேண்டும் என்ற கோணத்தில், கொள்கையில், நோக்கில் சிந்தித்துச் செயல்பட்ட நேரத்தில், போராடிய காலத்தில், சுயமரியாதையும், பகுத்தறிவும், கல்வியும், விழிப்பும், சமத்துவ எண்ணமும் இல்லாத மக்கள் வாழும் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவது முழுச் சுதந்திரம் ஆகாது; ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் நாம், ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருக்கும் நிலை வரும். அது ஒருபோதும் சுதந்திரமாகாது. எனவே, அவர்களின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபடும் போராட்டங்களையும் நாம் நடத்தி வெற்றி பெற்றால் மட்டுமே, நாம் முழுமையான சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ முடியும் என்றார். அவர் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.

சமஸ்கிருத ஆதிக்கம்:

எண்பது ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுகையில், இந்தியை இன்று திணித்துவிட்டால், எதிர்காலத்தில் சமஸ்கிருதமே ஆட்சிமொழியாக அது வழிவகுக்கும் என்றார். இன்று அது அப்படியே நடப்பதை, அதற்கான முயற்சியில் ஆரியப் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் அதன் ஆதரவு பெற்ற ஆட்சியும் ஈடுபடுவதை எல்லோரும் அறிய முடிகிறதே!

இந்தி என்பது ஓர் இடைக்கால ஏற்பாடுதான்; இந்தியைத் திணித்து, பரப்பிவிட்டால் அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை எளிதில் கொண்டுவந்து விடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்களே ஒத்துக்கொள்கின்றனர்.

இந்து மதம்:

அதேபோல், நமக்குள்ள இழிவும், நம் மீதான ஆதிக்கமும், ஒழிந்து, நாம் உரிமையும், மானமும், சுதந்திரமும் உள்ள மக்களாய் வாழவேண்டுமானால், இந்து மதமும், அதன் உள்ளடக்கங்களான சாஸ்திரங்களும், ஜாதியப் படிநிலைகளும் ஒழிக்கப்பட வேண்டும், இவை செல்வாக்குப் பெற்று நிலைபெற்றால் நாம் சூத்திர நிலையில்தான் அடிமைகளாய் மானமும், உரிமையும் இழந்து வாழ நேரிடும் என்றார் தந்தை பெரியார்.

தமிழர் சிறப்பு ஒழிப்பு:

நம்முடைய பண்பாடுகளை, விளையாட்டு களை, கலைகளை, மருத்துவத்தை ஒதுக்கி, ஓரங்கட்டி அழிக்க முயற்சிக்கிறார்கள். செம்மொழி என்ற தமிழுக்குரிய உண்மையான தகுதியை நாம் பெற்றுள்ள நிலையில், அதை எப்படியாவது ஒழித்துக்கட்டி விடவேண்டும் என்பதற்காக, அதற்கான அலுவலகத்தையே முடக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள்!

தமிழரின் தொன்மையை, இந்த மண்ணின் உரிமையை, அவர்களின் நாகரிகப் பெருமை யைத் தெளிவாக்கக்கூடிய அகழாய்வுகளை முடக்குகிறார்கள், கிடைத்தவற்றை மறைக்
கிறார்கள், மேலும் கண்டறியும் முயற்சிகளைத் தடுக்கிறார்கள்! ஆக, மதம் வளர்ந்தால், அது ஆட்சி அதிகாரம் பெற்றால் என்னென்ன கேடுகள் வரும் என்று தந்தை பெரியார் அவர்கள் அன்று தொலைநோக்கில் கூறினார்களோ அவை அனைத்தும் இன்று நடக்கின்றன.

தமிழில் பெயர்ப்பு:

‘‘மொழியில் காலவளர்ச்சிக்கேற்ப கருத்தேற்றம் இல்லையேல் அது அழியும்!

எந்தவொரு மொழியும், கால வளர்ச்சிக் கேற்ற கருத்தாக்கங்களை தன்னுள் வளர்த்தெடுக்கவில்லையென்றால் அது காலவோட்டத்தில் நிலைத்து நிற்காமல் அழியும். தமிழ் மொழியை காட்டுமிராண்டிக்கால நிலையிலே வைத்திராமல், கால வளர்ச்சிக்கேற்ற அறிவியல், வாழ்வியல், தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை காலந்தோறும் அதில் சேர்த்து வளர்த்தெடுக்க வேண்டும்.

பழைய குமரேச சதகத்தையும், திருவிளையாடல் புராணங்களையும், கம்ப இராமாயணங்களையும் மட்டுமே போற்றிக் காத்தால் அது தமிழை அழிக்கும்
செயல்களாகும்’’ என்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு கூறினார். அவரின் உயரிய தொலைநோக்கைப் புரிந்துகொள்ளாத
வர்கள், தமிழைப் பழிக்கிறார், தரக்குறைவாகப் பேசுகிறார் என்று பழிபோட்டனர்.

ஆனால், இன்று தமிழ் வளர தழைக்க, எல்லா அறிவியல் கருத்துகளும் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் அழியும் என்று எச்சரிக்கின்றனர். இது பெரியாரின் சிந்தனை பெற்ற வெற்றியாகும்!

பள்ளிப் படிப்புவரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்வியை தமிழில் படிக்க உரிய பாட நூல்கள் மொழியாக்கம் செய்யப்படாமையால் உயர்கல்வியில் தமிழ் இன்று புறக்கணிக்கப்படுகிறதே! தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை எவ்வளவு யதார்த்தமானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

இந்தியாலும், இராமனாலும் இந்தியாவிற்கு ஆபத்து:

இந்தி மொழியையும், இராமனையும் எல்லோர் மீதும் திணிக்கும் முயற்சி நடைபெறும், அது இந்தியாவின் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கும் என்று தந்தை பெரியார் 1926இல் சொன்னது 96 ஆண்டுகள் கழித்து இன்று நடப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். தந்தை பெரியார் தலைசிறந்த தொலை நோக்காளர் என்பதை இது தெளிவாக்குகிறது.

உலகம் ஏற்கும்
உயர்நோக்குச் சிந்தனைகள்:

தந்தை பெரியார் வழங்கிய பெண்ணியச் சிந்தனைகள்; மதம், கடவுள்சார் சிந்தனைகள்; மொழிகள் சார்ந்த சிந்தனைகள்; அரசியல் சிந்தனைகள், சமதர்மச் சிந்தனைகள்; கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சிசார் சிந்தனைகள், தொழிலாளர் வளர்ச்சிசார் சிந்தனைகள் என்று எல்லாவற்றையும் எடுத்து நோக்கின், அனைத்தும் இக்கால உலகிற்கும் இனிவரும் உலகிற்கும் வழிகாட்டியாய், தீர்வுகளாய், செயல்திட்டக் கருத்துகளாய், போராட்ட முறைகளாய், உரிமைக் காப்புக் கவசங்களாய் அமைந்தவை என்பதை எவரும் அறிந்து வியப்பர்!

தந்தை பெரியார் அவர்கள், “தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பெண்களையே முழுமையாக நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்கள். “காரணம், தாய்தான் (பெண்கள்தான்) பிள்ளைகளின் முதல் ஆசிரியர். எனவே, அவர்களுக்கு கட்டாயம் கல்வி அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மட்டுமே 5ஆம் வகுப்புவரை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று 1946இல் கூறினார்.

பெரியாரின் இக்கருத்தை 1992இல் அமைக்கப்பட்ட, பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக்குழு ஏற்று, “தொடக்கப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்தது. தந்தை பெரியார் எவ்வளவு முன்னோக்கி இச்சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் என்பது இதிலிருந்து விளங்கும்.

இன்றைக்கு ஆண்களைப் போலவே பெண்கள் ஆடைகளை அணிகிறார்கள். அப்படித்தான் அணிய வேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பே (1946) பெரியார் வலியுறுத்திக் கூறினார். உடை மட்டுமல்ல, தலைமுடியை ஆண்களைப் போல வெட்டிக்கொள்ள வேண்டும்; சிலம்பம், குஸ்தி, வாள்வீச்சு எல்லாம் பெண்கள் பயில வேண்டும் என்றார். அவையும் இன்று நடப்பில் வந்துவிட்டன. இன்றைக்கு வந்துள்ள மாற்றங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னேயே வரவேண்டும் என்ற பெரியாரின் தொலை நோக்கும் முற்போக்கும் வியப்புக்குரியதல்லவா?

மின்சாரத்தில் கார்கள் ஒடும்

“கார் இனிமேல் எண்ணெய்யில் ஓடாது; மின்சாரத்தில் கார் ஓடும்” என்று சொன்னார். ஏற்கெனவே சீனாவில் மின்சாரத்தின் மூலம் கார்கள் தாராளமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்தியாவிலும் இறக்குமதியாகி விட்டது. இங்கே என்ன சிக்கல் என்றால், மின்சாரம் கிடைக்க வேண்டுமே என்று சிலர் கேட்பார்கள். ஆனால், அந்தக் கார் ஓடுவதிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கிறமாதிரி அந்தக் காரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

காந்தியார், இயந்திரங்களைப் பிசாசுகள் என்று எழுதினார். உடனே, தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும் போது முன்பு, தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். “இயந்திரத்தினுடைய பெருமை, இயந்திரம் எவ்வளவு சிறப்பானது. தொழிற்புரட்சிக்கே அதுதானே அடிப்படை. இயந்திரம் கூடாது என்றால், மனிதனுக்கு அபிவிருத்தி கூடாது என்று அர்த்தம்” என்றார் பெரியார்.

காந்தியார் கொலை பற்றிய
பெரியாரின் தொலைநோக்கு!

காந்தியார் பார்ப்பனர்களால் கொல்லப்படு வார் என்று சொன்னவர் தந்தை பெரியார். 1927ஆம் ஆண்டு, காந்தியார் பெங்களூரில் மகாராஜாவின் விருந்தினராக தங்கியிருந்தபோது, பெரியாரைச் சந்தித்துப் பேச விரும்பி, எஸ்.இராமநாதன் அவர்கள் மூலம் அழைத்தார். பெங்களூர் சென்ற பெரியார் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது நடந்த உரையாடலில், தங்கள் கொள்கைகளுக்கு, நேரங்களுக்கு எதிராக ஒருவர் முயற்சி மேற்கொண்டால் அவரைப் பிராமணர்கள் விட்டு வைக்கமாட்டார்கள்’’ என்றார். பெரியார் சொன்னது போலவே, காந்தியார் பார்ப்பனர்களுக்கு எதிராய்ச் செயல்பட்டதும் அவரைக் கொன்றனர்.

 இராஜாஜி ஆலோசனையை மறுத்தமை:

பெரியாருடைய உற்ற நண்பராக இருந்ததோடு, ஈரோட்டில் பெரியாரின் தந்தையார் டிரஸ்ட் எழுதியது போன்ற எல்லாவற்றிற்கும் ஆலோசனை வழங்கியவர் ராஜகோபாலாச்சாரியார். அப்பொழுது இவர் சேலத்தில் நகராட்சித் தலைவர்; பெரியார் ஈரோட்டில் நகராட்சித் தலைவர். ஆகவே இருவருக்கிடையே நட்பு அதிகம். அந்த முறையில், அவர் கவர்னர் ஜெனரலாக வந்த பிறகும் மணியம்மையாருடன் திருமண ஏற்பாடு சார்ந்து அவரிடம் ஆலோசனை கேட்டார் பெரியார். ராஜகோபாலாச்சாரியார் ஆலோசனையை வழங்கினார். அந்த ஆலோசனை என்னவென்று யாருக்கும் தெரியாது. காரணம், தன் கருத்தை கடிதமாக எழுதி அது ‘இரகசியம்’ என்று எழுதியிருக்கிறார். எனவே, அதை பெரியார் வெளியிடவில்லை. ராஜாஜி சொன்னபடி பெரியார் கேட்டார்,

‘‘தங்களுடைய வயதையும், நான் தங்கள் பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனத்தில் எண்ணங்கள் ஊர்ஜிதப்பட்ட பின் செய்வது நலம்.

எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்’’ என்று இராஜகோபாலாச்சாரியார் ஆலோசனை கூறினார். ஆனால், அதைப் பெரியார் ஏற்காமல் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் மீது தந்தை பெரியார் நம்பிக்கை வைத்தார். ராஜகோபாலாச்சாரியார் சந்தேகப்பட்டார். எது சரியென்று ஆயிற்று? தந்தை பெரியார்தாமே வென்றார்! ராஜகோபாலாச்சாரியாருடைய கருத்து வெல்லவில்லை. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அறிவு உள்ளவர் என்று சொல்லப்பட்ட ராஜகோபாலாச்சாரியாருடைய கருத்து வெல்லவில்லை. அய்யாவின் சிந்தனையே, நம்பிக்கையே முடிவேதானே வென்றது! பெரியார் செய்த திருமண ஏற்பாடே இயக்கத்தைக் காத்தது. பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனையே வென்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு:

கட்டாய இந்தி ஒழிக என்று சொன்னார்; ஆயிரக்கணக்கானோர் சிறைக்குப் போனார்கள்; அதே ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறகு பெரியார் வழிக்குத்தானே வந்து, ‘Hindi Never English Ever’ என்று சொல்லவேண்டிய கட்டத்திற்கு வந்தாரே! பெரியார் வென்றாரா? ராஜகோபாலாச்சாரியார் வென்றாரா? தொலைநோக்கு என்பது எப்படிப் பெரியாருடைய தனித்தன்மையாக இருந்தது என்பதற்கு இது மிகப்பெரிய ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலகத் தமிழர் எதிர்கால வாழ்விற்குப் பெரியார் வழங்கிய அறிவுரை!

பெரியார் அய்யா அவர்கள் இரண்டுமுறை சிங்கப்பூர், மலேசியாவிற்குச் சென்றார். 1929, 1953ஆம் ஆண்டுகளில், பர்மா, மலேசியா சிங்கப்பூருக்குச் சென்றார். அப்பொழுது அந்த மக்களுக்கு யாரும் சொல்லாத அறிவுரையைத் தந்தை பெரியார்தாம் சொன்னார்.

அப்பொழுது நாடு வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் அடைகின்ற காலகட்டம் அது. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு உடனே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகுங்கள்; இங்கேயே வசதியாக இருங்கள்; அதுதான் மிக முக்கியம். குடியுரிமை பெறுவதற்கு யோசிக்காதீர்கள். சீனர்கள், மற்றவர்கள் எல்லாம் மலாய்க்காரர் குடியுரிமை பெற்றார்கள். நீங்கள் அதுபோல் வாங்கிக்கொள்ளுங்கள் என்று தன்னுடைய கழகத் தோழர்களை வீட்டுக்கு வீடு அனுப்பி, தோட்டத் தொழிலாளிகள் மற்றவர்களுக்கெல்லாம் சொல்லச் சொன்னார். அன்றைக்கு அதனை ஏற்றவர்கள் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அன்றைக்கு அதனை ஒப்புக்கொள்ளாதவர்கள் இன்றைக்கு வாழ்வில்லாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். இன்றைக்கும் அதை அந்த மக்கள் பேசுகிறார்கள்.

1935ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுடைய சங்கடங்கள் என்ன என்று பெரியார் அவர்கள் ஈரோட்டில் தீர்மானம் போட்டார். ஈழத் தமிழர்கள் இன்னல்களைக் களைந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்கள், பெரியார் அவர்களை இங்கே வந்து பார்த்தார். எங்களுக்கு நீங்கள் உதவி செய்யவேண்டும் என்று கேட்டார்.

அப்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் அற்புதமான ஒரு வார்த்தையைச் சொன்னார், ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு என்ன உதவி செய்யப் போகிறான். நீங்கள் என்ன எங்களிடம் பெரிதாக எதிர்பார்க்கிறீர்கள். நாங்கள் என்ன சுதந்திரமானவர்களா? என்று கேட்டார். இலங்கைத் தமிழர்களின் விடுதலையை அவர்களே போராடிப் பெறவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதே உண்மையானது!

காமராஜர் பதவி விலகல்:

காமராஜர் பதவி விலகக்கூடாது என்று அய்யா வலியுறுத்தினார். அன்றைக்குக் காமராஜர் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு அதே காமராஜர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் சொன்னீர்கள். நாங்கள் கேட்கவில்லை அதுதான் இப்பொழுது நாங்கள் அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று சொன்னார். ஒரு தந்தையிடம் மகன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப்போல, பெரியார் திடலுக்கு வந்து காமராஜர் அவர்கள் சொன்னார்கள்!

 இடஒதுக்கீடும், சமூகநீதியும்:

மதத்தால், ஜாதியால், சாஸ்திரங்களால் பல நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்த, சம வாய்ப்பும், சம உரிமையும் அவர்களுக்கும் கிடைக்கச் செய்ய இடஒதுக்கீடு வேண்டும். இடஒதுக்கீடு இல்லாத இடங்களில் பார்ப்பனர்களே முழுக்க ஆதிக்கம் செலுத்துவர். அதன்மூலம் சமூகநீதியும், சம வாய்ப்பும், உரிமையும் அழியும் என்றார்.

இன்றைக்கு இடஒதுக்கீடு இல்லாத நீதித்துறை மற்றும் உயர் பதவிகளை முழுக்க முழுக்க பார்ப்பனர்களே அபகரித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்தி, அநீதியான தீர்ப்புகளை வழங்குவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

இதன் விளைவாய் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்தவரும் பெரியாரின் சிந்தனைகளை, கொள்கைகளை ஏற்க முன்வந்துள்ளனர். எதிர்காலத்தில் பெரியாரின் சிந்தனைகள் மக்களிடம் பெரிதும் ஆளுமை செலுத்தும். என்றைக்கும், எக்காலத்திலும் பெரியார் ஆளுமை செலுத்துவார்! வழிகாட்டுவார்!!

வாழ்க தந்தை பெரியார்!