Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘‘போரற்ற உலகு; பேரன்பு வாழ்வு” தேவை! என்று பாடுபடும் 92 வயது இளைஞர் ! – முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் கொள்கை வரும் காலத்தில் எத்தனை பெரிய சிறப்பை எய்தும், பெருமை அடையும், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கொள்கையாக மலரும் என்பதை ஒற்றை வரியில் தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிய சொற்றொடர்.

‘‘தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தையெழும்

பெரியாரின் மண்டைச் சுரப்பான அவர்தம் கொள்கையை ஏற்று உலகம் தழைக்கும் என்பதாக அவரின் பாடல் வரிகள் ”அவர் தாம் பெரியார்” என்று நம்மை வியக்க வைத்தது.

ஆசிரியரின் அயரா பணி!

இன்றோ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அயரா பணியின், ஆற்றல் மிக்க தொண்டின் காரணமாக தந்தை பெரியார் உலகமயம் ஆகி வருவதை நாமெல்லாம் கண்ணார கண்டு மகிழ்கிறோம். ஜெர்மனியில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நெறிபரப்பும் மாநாடு, கனடாவில் கருத்தாளர் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பரப்பும் மாநாடு, வட அமெரிக்காவில் வாய்மைப் போருக்கு என்று இளையரான பெரியாரின் சமூக நீதி – மனித நேய மாநாடு, ஆஸ்திரேலியாவில் அறிவுலக ஆசான் பெரியாரின் பன்னாட்டுப் பகுத்தறிவாளர்தம் தத்துவ பரப்பு மாநாடு, மலேசிய – சிங்கப்பூரில் மனித நேயர் பெரியாரின் மான மீட்பு கருத்துப் பரவல் நிகழ்வுகள் என உலகம் முழுவதும் மாந்த நேயர் தந்தை பெரியார் தம் லட்சியங்களும், கருத்துகளும் பரவி விரவி பார் பக்குவப்பட பாடாற்றி வருகிறது.

மானுட ஒர்மைக்கு இந்திய துணைக் கண்டத்தில் ஜாதி, தடை
யாக இருக்கிறது. ஜாதியைப் பாதுகாப்பதில் மதம் தீவிர பங்கு பணி ஆற்றுகிறது. மதத்தை அரண் செய்து காப்பாற்றுவதில் கடவுள் கொள்கை காரணமாக அமைகிறது. மனித நேயம் பரப்புவதை, சமத்துவம் மலரச் செய்வதை, தம் கடமையாகக் கொண்டு காரியமாற்றும் பெரியாரின் தொண்டர்களுக்கு மனித ஒற்றுமையை நிலைநாட்டிட வேண்டுமெனில் அதனைச் சிதைத்து சீரழித்துக் கொண்டிருக்கும் ஜாதி, மதம், கடவுள் கருத்துகளை நிர்மூலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. பகுத்தறிவாளர்களும், சமதர்மிகளும், சமத்துவப் போராளிகளும், சமூக நீதி அக்கறையுள்ளோரும், மதவாதத்தை, மத அடிப்படை வாதத்தை இந்துத்துவா கோட்பாட்டை எதிர்த்து போராடவும், பரப்புரையும் செய்ய வேண்டியவர்கள் ஆகிறார்கள். அதற்கான முனைப்பான பணிகளின், இயக்கங்களில் ஈடுபடுகின்றனர். மக்களுக்காக மதமா? மதத்துக்காக மக்களா? கேள்வி எழும்போது மக்களுக்காகத்தான் அனைத்தும் என்பது பதிலாகிறது.

மதத்தைப் பாதுகாத்து ஜாதியை, வைதீகத்தை, பழமையை, சாத்திர – சடங்கு தன்மைகளைக் காப்பாற்றத் துடிக்கும் சங்கிகள்… மனித நேயர்களுக்கு, முற்போக்கு அமைப்பினர்க்கு, மான – அறிவு மீட்பர்களுக்கு எதிராகவும், வாய்ப்பு கிடைப்பின் சிந்தனையாளர்களைத் தீர்த்துக் கட்டும் கொலை வெறிக்கும் தங்களை ஆக்கிக் கொண்டு கொலை பாதக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆம்! மத அடிப்படை வாதத்தின் தீவினை எழுதிடவும், சொல்லிடவும் இயலா நிலையில் இன்று ஆயிரங்கால் பூதமாக எழுந்து நிற்பதை காணமுடிகிறது.

அதிகாரத்தில் அவர்கள் இருக்கும் இன்றைய காலம் கையில் ஆயுதத்துடன் புதுமையாளர்களைத் தேடித்தேடி அலையவிட்டிருக்கிறது – அதிகாரம் இல்லாத காலத்தில் மகாத்மா காந்தியையே சுட்டுக் கொன்ற மத அடிப்படைவாதிகள் இன்று தொடர்கதையாய் நீளுவதைக் காணமுடிகிறது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மிகப்பெரிய மனிதப்படுகொலை அல்லவா? மதச் சகிப்புத் தன்மையைக் கூட அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள மதம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

சமூக செயற்பாட்டாலும், மருத்துவருமான பகுத்தறிவு பண்பாளர் நரேந்திர தபோல்கர் தமது 67ஆம் வயதில் 2013இல் பூனாவில் சுடப்பட்டு கொலையுண்டார்….

சாகித்ய அகாடெமி விருதாளரும், கர்நாடக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தவருமாகிய எம்.எம்.கல்புர்கி தமது 77ஆம் வயதில் தார்வாரில் 2015ஆம் ஆண்டு சுடப்பட்டு கொலையுண்டார்….

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தோழரும் “மாவீரன் சிவாஜி யார்?” எனும் நூலின் ஆசிரியருமான கோவிந்த் பன்சாரே தமது 81ஆம் வயதில் 2015ஆம் ஆண்டு கோல்காபூர் மாவட்டத்தில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்…

தீவிர சமூகச் செயற்பாட்டாளரும், கன்னட பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் 45வயதில் 2017இல்  எம்.எம்.கல்புர்கியைக் கொல்லப் பயன்படுத்திய அதே துப்பாக்கியால் பெங்களூரில் சுட்டு கொலை…

உத்தரபிரதேசத்து தாத்ரி கிராமத்தில் முகம்மது அக்லாக் 52ஆம் வயதில் 2015 ஆம் ஆண்டு ஆட்டிறைச்சி சாப்பிட்ட அவரை மாட்டிறைச்சித்தான் சாப்பிட்டார் என்பதாகக் கருதி மர்மக்கும்பல் படுகொலை செய்தது….

அரியானாவின் ஆல்வாரில் பெஹ்லுகான் என்பவர் பசு பாதுகாவலர்களால் மனிதப் படுகொலை செய்யப்பட்டார்.

துக்ளகாபாத்திலிருந்து ஈகைத் திருநாள் பண்டிகையில் பங்கு பெறுவதற்காக சொந்த ஊரான கந்தவாலி கிராமத்துக்கு போய்க் கொண்டிருந்தபோது ஜுனைத்தின் தமது 17ஆம் வயதில் படுகொலை செய்யப்பட்டார்.

உனா சித்ரவதை வரை இன்னும் நமக்குத் தெரியவராத எத்தனையோ படுகொலைகள் மதவெறியின் பேரால் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.

ராமஜென்மபூமி தொடங்கி சமஸ்கிருதத் திணிப்பு நீட் உயிரிழப்புகள் வரை மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது எதைக் காட்டுகிறது? மனித உயிர்கள் பறிக்கப்படுவது என்பது எத்தனை கொடுமையானது? மனித நேயத்துக்கு எதிரானது? என்பதை எண்ணிப்பாருங்கள்.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் நடக்கும் வன்மங்கள் தானே!

சண்டை சச்சரவு இல்லாத உலகும் பேரன்பும் தேவை … அன்பால் மானுட நேயத்தால் அறிவால் சமுதாயத்தைப் பயன் துய்க்கச் செய்யவே பகுத்தறிவுவாதிகளும், சமத்துவப் போராளிகளும், சமதர்மிகளும் தொண்டாற்றி வருவது என்பதை உணர்ந்து…..கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எனும் மூத்தோர் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ முயல்வோமாக!

பெரியார் கொள்கையின் ஒற்றைச் சொல்லே ”பெரியாரியல்” என்பது. பெரியாரியம் – பெரியாரின் தத்துவம் என்பதும் சரியே. கடவுளை எண்ணி, மதத்தை இணைத்து மனிதனை மறுக்கும், வெறுக்கும் சமுதாயத்தின் பிடரியைப் பிடித்து குலுக்கி – “கடவுளை மற; மனிதனை நினை” ”மதத்தை துற மனிதனைப் போற்று” என்று வாழ்நாள் முழுவதும் அறிவார்ந்த கருத்துகளைப் பரப்புரை செய்தவர் தான் பெரியார். மானுட சமத்துவம் மட்டுமே பெரியார் கொள்கையின் அடிப்படை. அதனால் தான் அவர் மறைந்து அரை நூற்றாண்டு ஆனதற்கப்பாலும் அவரின் சிலையைச் சேதப்படுத்த நினைக்கிறார்கள். காவி அடிக்க முனைகிறார்கள். எப்போதோ இறந்து போனவர் இப்போதும் தாக்கப்படுகிறார். கொச்சைப் படுத்தப்படுகிறார். இழிமொழிகளால் அர்ச்சிக்கப்படுகிறார். காரணம் என்ன? சிந்தித்தது உண்டா நீங்கள்?

தேர்தல் களத்தில் திரைப்படம் என்ற கவசத்துடன் வசீகரத் தலைவர்களாக வலம் வந்து வெற்றி வாகை சூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்குக் கூடிய பெருங்கூட்டம் பெரியாரைப் பார்க்க கூடியதுண்டா? இன்று வரை பெரியாரை அரை குறையாக புரிந்து கொண்டவர்களே அதிகம்! சாமி இல்லை என்று சொன்னவர், ஜாதி இல்லை என்றவர் என்பதோடு பெரியாரை ஒதுக்கிப் பார்க்கக் கூடியவர்கள் உண்டு முழுவதுமாய் அறிந்து புரிந்து கொண்டவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!

விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ இல்லாத பகுத்தறிவு எனும் சிந்தனை அறிவு மனித சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்வது மத வெறிக்கும், ஜாதி வெறிக்கும் ஆட்படவா? சண்டை செய்து கொள்ளவா? ஒடுக்குமுறை பண்ணவா? ஓர்மை இல்லாது  வாழவா? ஒரு கணம் ஒரே கணம் சிந்தியுங்கள். மதத்தை விட மனிதம் பெரிது என்பதை உணருங்கள் … மனிதம் மகத்தானது மான்பதை காக்கவல்லது என்பதை அறியுங்கள்.

புத்தர், பெரியார், அம்பேத்கர்  என்று அறிவின் மீது அன்பின் மீது அக்கறை கொண்டோர் உழைத்தது – போராடியது – பரப்புரை செய்தது போரற்ற உலகு என்பதற்காகத் தானே! சண்டையில்லா பேரன்பு வாழ்வு என்பதற்காகத் தானே! தங்கள் வாழ்வை உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாத அந்த மனிதாபிமானமுள்ள மகோன்னதம் மிக்க தலைவர்களின் உழைப்பால் தொண்டால் நாம் பெற்ற வாய்ப்பும், மதிப்பும், உயர்வும் வளர்ச்சியும் எத்தனை? எத்தனை?

தந்தை பெரியார் 95ஆம் வயதிலும் அயராது உழைத்த உத்தமத் தலைவர். கல்லடியும் சொல்லடியும்  தாங்கி ஊர் ஊராய்ச் சுற்றி உவப்பான பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டி போராடி சிறை சென்று ஈகம் செய்தாரே ஏன்?

அறிவார்ந்த வாழ்வை அன்பார்ந்த வாழ்வியல் நடைமுறையை சமூக நீதியை சமத்துவ பான்மையை நாம் துய்த்து மகிழ்விப்பதற்காகத்தான்!

தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே உய்விக்கப் பயன்படும் நன்மருந்து பெரியாரியல் என்பதற்காகத்தான் பெரியார் கொள்கை உலகமயம் என்பதை உணர்த்த புரட்சிக்கவிஞர் “மண்டைச் சுரப்பை உலகுத் தொழும்” என்று புகன்றது ! புகழுரை தந்தது!

பெரியாரியல் என்ற சித்தாந்தத்தின் மீதான போர் இன்றும் தொடர்கிறார்கள். நடிகர் சூரியா நடித்த ஏழாம் அறிவு படத்தில் டாங்லியோட கண்களால் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் (சூரியா தான்) வரும்போது டாங்லியின் குரு சொல்வதாக ஒர் உரையாடல் வரும்….

‘‘அங்கே இருக்காதே அது போதி தர்மர் மண் உடனே கிளம்பி விடு” என்பதாக இருக்கும். ஆம்! இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் அரசியலையும் வளைக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஒர் இயக்கம், ஒர் அரசியல் கட்சி …. தேர்தல் அரசியலில் நோட்டாவோடு போட்டிப் போடுவது இந்த மண்ணில் மட்டும் தான்!

”அங்கே இருக்காதே அது தந்தை பெரியார் மண்; உடனே கிளம்பி விடு” என்று வருங்காலத்தில் அந்தக் கட்சி தனது பரிவாரங்களுக்கு சொல்ல வேண்டி வரலாம்.

பெரியார் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், பெரியாரியல் எவ்வளவு உயர்வானது, உன்னதமானது என தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவின் விடுதலையின் போது பின் தங்கிய மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று முன்னேறிய மாநிலமாக மாற்றுவதற்கு உதவிய….

காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எல்லா முதல்வர்களுக்கும் பெரியார் யாரென்று, பெரியாரியல் எதுவென்று நன்றாகவே தெரியும்.

அந்த முதல்வர்களின் கொள்கைத்தலைவர் பெரியாரே என்பதும் அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வெளிப்படையான உண்மை.

காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க; கட்சிகள் மட்டும் இல்லாமல் பா.ம.க , வி.சி.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, ம.நீ.ம, த.வெ.க வரை…..தங்கள் கட்சியின் கொள்கைத் தலைவராக விரும்பி ஏற்றுக் கொண்ட தலைவர் பெரியார்…!

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைவிட அதிக நிதி ஒதுக்கியும் வட மாநிலங்கள் முன்னேறாமல் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு எது காரணம்?

இந்துத்துவா சித்தாந்தம், மனிதத்தைக் காட்டிலும் மதம் பெரிது என்ற சித்தாந்தம் அங்கே கோலோச்சுவதே காரணம். ஏழை எளிய  மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி கண்டிப்பாக போய்ச் சேருவதில்லை, சேரவும் விட மாட்டார்கள். ஏழைகளாக இருப்பது தங்கள் தலை எழுத்து என்கிற – நம்புகிற கூட்டம் அங்கே அதிகம்.

இங்கே அதற்கு நேர்மாறாக ஏன் என்று கேள்வி கேட்கிற கூட்டம் அதிகம். திராவிடத்தை நேசிக்கும் தலைவர்கள் – முதல்வர்கள் மக்கள் நலனிலே அக்கறை உள்ளவர்கள் தவறுகள் களைகளைப் போல் இருக்கலாம். களைகள் பிடுங்கி எறியப்படுவதைப்போல அவை நீக்கப்படும்.

அனைத்தையும் கடந்த மாந்த நேயம் அவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ளதும் –  தனித்தீவாய் தமிழ்நாடு ஒளிர வாய்ப்பாகிறது.

சனாதனம், பழமை, வைதீகம், இந்துத்துவா என்பவை தமிழ்நாட்டு மக்களைக்  கபளீகரம் செய்யாமல் பாதுகாப்பு அரணாக இருப்பது பெரியாரும் பெரியாரியலும் ஆகும். சமுதாயப் புரட்சி இயக்கமாக பெரியாருக்குப் பின்னும் காத்தருளும் அமைப்பாக ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடுவதும் தொண்டாற்றுவதும் ஒரு காரணம் என்பதை அறியுங்கள்! பெரியாரியலே வெல்லும்!

பெரியாரியல் எனும் தத்துவத்தின் வெற்றியே மனித சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தும்; ஆனந்தத்தைத் தரும். அந்த தத்துவத்தை உலக மயப்படுத்த வேண்டும் என்ற பேரவாவுடன் 92 வயதிலும் அயராது உழைக்கிறார். உலகம் பெரியார் கொள்கை மயம் என்றாகிட கடும் உழைப்பைத் தருகிறார். எண்ணற்ற இளைஞர்களைப் பெரியார் கொள்கையின் பால் – இயக்கத்தின் பால் ஈர்ப்பதில் வெற்றி காண்கிறார். உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சியினை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதில் அரும்பாடுபடுகிறார்.

மக்கள் விரோத மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்  மக்கள் விரோத ஆட்சியான பா.ஜ.க ஆட்சியின் மோடி வித்தையை அம்பலப்படுத்திட தீவிர பரப்புரை பயணம் நாடு முழுவதும்!

திராவிடம் வெல்லும் – திராவிட மாடல் ஆட்சி அதைச் சொல்லும் என்பதை தமிழ்நாடு போராடும் – தமிழ்நாடு  வெல்லும் என்பதை விளக்கிடவும் பரப்புரை பயணம்!

“வியப்பே உன் பெயர்தான் வீரமணியா?“ என்று வியப்பினை ஏற்படுத்தும் வகையில் தன்னலம் கருதாது தமிழர் நலன் கருதி 92 வயது அல்ல 29  வயதுக்காரன் நான் என்று சூளுரைத்து சுடர்முகம் தூக்கி ஒரே நாளைக்கு 2 ஊர்களில் / நிகழ்வுகளில் மக்களைச் சந்தித்து மன்பதை காத்திட, திராவிடத்தை வெல்லச் செய்ய பரப்புரை பயணம் தொடரும் தலைவரால் முடியும் மக்களுக்கான போரற்ற உலகும்; சண்டையில்லா வாழ்வும்! பேரன்பும் பெரு மகிழ்வும் திளைத்திடும் நாடும் அமைந்திட! மனித நேயம் தழைத்திட செய்ய ! வெல்க பெரியாரியல்! நூற்றாண்டைக் கண்டும் கடந்தும் வாழ்க தமிழர் தலைவர்!  ¦