Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பேராலப் பெரியாரின் பெரும்விழுதே வாழ்க! – பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்.

தொண்ணூற்றி மூன்றறென்ப எண்கொண்ட பேரே!
தொண்டிற்கோ அவரென்றும் முன்னத்தி ஏரே!
எண்ணத்தின் பரப்பெல்லாம் பெரியாரென் பாரே!
என்றைக்கும் அவரெம்மைத் தாங்குமடி வேரே!

பெரியாரின் பின்னாலே எவரிங்கே உண்டு?
புரிவார்யார் தமிழினத்தை உய்விக்குந் தொண்டு?
உரியாராய்த் தேர்ந்தாரே தந்தையன்னை அன்று!
அறியாதார் அடங்கினரே ஆசிரியர் கண்டு!

பெண்ணடிமைத் தளையறுத்த பெரியாரின் சொல்லைத்
தன்னுயிரின் மேல்மதித்த வீரமணி யம்மை
சென்றபின்னே கழகத்தைக் காப்பதற்காய்த் தன்னை
நன்கொடையாய்த் தந்தவர்தான் வீரமணி! உண்மை!

பிறப்பாலே வேற்றுமையைப் பார்ப்பனீயம் நுழைத்துப்
பிறந்தவர்க்கும் இறந்தவர்க்குஞ் சடங்குசெய்து                                                                    கொழுத்துத்
துறவியென வேடமிடும் நரித்தனத்தை ஒழிக்கப்
பிறப்பெடுத்த வீரமணி பெரியார்மறு பதிப்பு!

அறுபதாண்டாய் ஆசிரியர்! விடுதலைக்குப் பொறுப்பு!
பெறுவதெண்ணா ஈகமொன்றே அவரிதய இருப்பு!
உருவத்திற் கொவ்வாத வீரனிந்தக் கருப்பு!
மருவில்லாத் தலைமைதந்த வீரமணி நெருப்பு!

ஒன்றியத்தின் வேலையைப்பிற் பட்டோர்க்கு மளிக்க
மண்டல்வரம் தந்தபின்னும் ஆண்டபட்டர் மறுக்கக்
கண்டெதிர்த்த வீரமணி போர்க்கணைகள் தொடுக்கக்
கொண்டோம்நாம் ஒதுக்கீட்டைக் கூன்நிமிர்ந்து நடக்க!

சூழ்பகையின் சூதறுக்கச் சுழன்றடிக்கும் புயலாய்
வாழ்பொழுதின் பெரும்பகுதி செலவழித்தார்!                                                                       மயலாய்ப்
பாழ்செய்யும் உணவுசெயல் கண்டறிந்து இயலாய்
வாழ்வியலின் சிந்தனையைத் தொகுத்தளித்தார்                                                                பெயலாய்!

தமிழர்களின் உரிமைவெல்லக் குரலெழுப்புஞ் சங்கம்!
தமிழருக்குத் துன்பமென்றால் பாய்ந்துவரும் சிங்கம்!
தமிழருற்ற பெரும்பேறாம் பெரியாரென் கங்கம்
நமக்களித்த நற்கொடைதான் வீரமணித் தங்கம்!

வருமுன்னே கண்டுணர்ந்து வாய்மொழியும் அறிவும்
செருமுன்னே மயங்காது வாளேந்தும் வலிவும்
தெருவினிலே வந்திறங்கிப் போராடுந் துணிவும்
ஒருவருளம் தஞ்சமுற்றால் ஆசிரியர்  உருவம்!

தன்னைத்தான் எண்ணாத தகைகொண்ட தாலே
தன்மானம் தலையென்ற நிலைகொண்ட தாலே
தன்வாழ்வைத் தொண்டிற்காய்க் கொடைதந்த தாலே
தகைசான்ற தமிழரெனும் விருதுற்றார் மேலே!

நூறாண்டும் தாண்டியெங்கள் நலன்சிறக்க வாழ்க!
பாராளும் முதல்வருக்குத் தோள்கொடுக்க வாழ்க!
பேராலப் பெரியாரின் பெரும்விழுதே வாழ்க!
சீராளும் நலமேந்தி வீரமணி வாழ்க! ¦